அக ( ஆத்ம ) விசாரணை – 4

சித்து – சித்தம் என்று கூறப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறேன் ? அதனை விளக்கமாக கூறமுடியுமா ? மயிலாப்பூரிலிருந்து , சந்திரசேகர் கேட்டிருக்கிறார்.
சித்திற்கு அன்னியமாய் சேத்தியங்களில்லை; இருப்பது ஒன்றே. அது சித்து மட்டும்தான். அப்படியானால் இந்த ஜகத்தின் தோன்றுதலுக்கு காரணம் என்ன ? மேலும் சித்தையே ஏன் பார்க்க முடிவதில்லை ? என்றால்,
சித்து இருப்பாக மாத்திரம் இருக்கும் நிலையினின்று நழுவி ( சங்கற்பத்தினாலோ அல்லது வாசனை பழக்கம் முதலியவனாலேயோ ) வெளிப்பார்வையுள்ளதாகும் பொழுது, பஞ்சேந்திரியங்களின் வழியாக விசயங்களையோ – ஜகத்தினையோ நுகரும் பொழுது அந்தந்த இந்திரியங்களினால் கட்டுபட்டுப்போகிறது. தூய சித்ரூபமாக வெளிகிளம்புகிறதில்லை.எனவே , இந்த இந்திரிய கூட்டங்களால் வெளிவிசயங்களில் உள்ள சித்ரூபத்தை கிரகிக்க முடிவதில்லை.
எனவே விசயங்களை நாமரூபமாய்ப் பார்க்கும் பொழுது நாம ரூபங்கள் மட்டும் விளங்குகிறது. சித் விளங்குவதில்லை. எனவே எல்லாமே சித்துதான் என்பதனை உணரவேண்டுமானால் சித்தாக மாத்திரம் நின்றுவிட்டால் மாத்திரமே முடியும். இதற்குத்தான் மஞ்சள் காமாலை உள்ள கண் உதாரணமாய்க் கூறப்படுகிறது.
இதனை விளக்குவதற்காகத்தான் சேத்தியங்கள் அகன்றவன்  சித்து என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பார்க்கப்படும் பதார்த்தங்களிலுள்ள இருத்தல், தோன்றுதல் என்ற இவற்றில் தோன்றுதல் என்பதனை விலக்கினால் மிஞ்சுவது இருத்தல். அதுவே நம்மிடமும் உள்ளது. எனவேதான் தோன்றுதலை அகற்றினால் இருத்தல் மிஞ்சும். அப்பொழுது நாமே எல்லாமாக இருத்தலை உணரலாம்.