அக ( ஆத்ம ) விசாரணை – 3

‘ காலப்போக்கில் எல்லாம் மாறும் ‘ என்பது பகுத்தறிவு வாதத்திற்கு ஒப்புடையதா ? அது உண்மையெனில் விளக்கமாக கூற முடியுமா ?

இந்த வார கேள்விக்கு உயர்திரு . இராம. வேங்கிட கிருஷ்ணன் அவர்களின் விளக்கம்….

” காலம் என்று தனியாக ஒன்றும் கிடையாது. ஒரு செயல் செய்யப்படுவதற்கு தேவையான மாற்றங்களை அடைய எடுத்துக் கொள்ளப்படும் அவகாசத்தினை காலம் என்கிறோம். எனவே காலம் / நேரம் என்பது ஒரு அளவுகோல். உதாரணமாய் நெல் பயிர் விதைபோட்டு , நாற்றாகி நெல் விளைவதற்கு ஆகும் மாற்றங்களை பக்குவம் என்கிறோம். இம்மாதிரி அபக்குவமானது பக்குவமாகி விளைவதற்கு பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்களின் முடிவில் பலனான நெற்கதிர் கிடைக்கிறது. இதனை அளப்பதற்கு இத்தனை பகல் இத்தனை இரவு ஆகின்றது என்று காலத்தால் அளக்கிறோம். எனவே காலம் என்பது நம்மால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கருவி. இந்தக் கருவியினால் மட்டுமே மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியாது. மாற்றங்கள் ஏற்படுவதை இதனால் அளவிடமுடியும் அவ்வளவே. இதனை நன்றாக புரிந்து கொண்டால், பகவத்கீதையில் கூறியபடி பலனை எதிர்பாராமல் கர்ம வினை செய்வது சாத்தியமாகும்.

ஆத்மாவை அறிவதில் ஜீவனுக்கு ஏற்படும் மாற்றங்களை அளவிட முடியாததால்தான் இந்த விஷயத்தில் ஈஸ்வர அனுக்ரஹம் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் மற்ற விஷயங்களை போலவே இதிலும் கிரமம் என்று உள்ளது. இந்தக் கிரமப்படி சென்றால் முடிவை அடைய இவ்வளவு காலம் என்று கூட ஒரளவிற்கு அனுமானிக்கலாம். ஆனால் காலம் நீடித்ததாக இருப்பதாலும் ஜன்மாக்கள் மாறிவிடுவதாலும் தொடர்ச்சி கண்டு பிடிக்கமுடிவதில்லை. மேலும் சிரத்தை மிகவும் முக்கியமான பங்கு வகிப்பதால் காரணம் மாற்றத்தின் தாரதம்மியத்தை பாதிக்கிறது.

இந்த தொடரில் கேள்விகள் கேட்க  rvkrish2@gmail.com, rvkrish@tamilagamtimes.com முகவரியில் தொடர்புகொள்ளவும்.