அதிர்ச்சியூட்டும் பல தகவல்களைச் சொல்லி அனுப்பி இருக்கிறார் ‘அட்டாக்’ பாண்டி.

ப்போதும் நான் தி.மு.க-காரன்தான். இப்போதும் தி.மு.க-வின் தொண்டர் அணிச் செயலாளராக இருக்கிறேன். நான் யாரையும் மாட்டிவிட மாட்டேன். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டேன்” என்று சொல்கிறார், மதுரையில் ‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ‘அட்டாக்’ பாண்டி.

‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில் நீண்ட காலம் தேடப்பட்டுவந்த ‘அட்டாக்’ பாண்டி கடந்த மாதம் மும்பையில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் இருந்து தனது உறவினர்கள் மூலமாக, அதிர்ச்சியூட்டும் பல தகவல்களைச் சொல்லி அனுப்பி இருக்கிறார் ‘அட்டாக்’ பாண்டி.

 “துரோகம் செய்ய மாட்டேன்!”

“அழகிரி அண்ணனுக்கும், தளபதி ஸ்டாலினுக்கும் நான் துரோகம் செய்துவிடுவேன் என்று பலரும் கதைகட்டுகிறார்கள். அழகிரி அண்ணனின் மகன் துரை தயாநிதியை நான் மாட்டிவிடப் போகிறேன் என்று சொல்கிறார்கள். துரை தயாநிதியை தூக்கிவளர்த்தவன் நான். அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். இக்கட்டான காலகட்டத்தில் நான் தலைமறைவாக இருந்தபோது, என் குடும்பம் பல கஷ்டங்களை அனுபவித்தது. அப்போது, கட்சிக்கார குடும்பம் என்ற அடிப்படையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. என்றாலும், தி.மு.க-வை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.”

 ‘‘நான் சாராயம் விற்கவில்லை!”

‘‘தி.மு.க. மீது வெறிகொண்ட கட்சிக்காரன் நான். என்னை ஏதோ தெரு ரவுடியைப்போல, சின்ன வயதில் இருந்தே கொடூரமாக வளர்க்கப்பட்டவன் என்பதைப்போல போலீஸ் சித்திரிக்கிறது. 1982-ம் ஆண்டு நான் சாராயம் விற்றதாக ஒரு கதையைக் கட்டுகிறார்கள். அந்த வருடத்தில் நான் இரண்டாம் வகுப்பு படித்தேன். எவ்வளவு பெரிய பொய்யைச் சொல்கிறார்கள் பாருங்கள். நான், மதுரையில் பிரபலமான செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தவன்.”

‘‘கக்கூஸ் கழுவினால் என்ன தவறு?”

“கக்கூஸ் கழுவும் கான்ட்ராக்ட் எடுத்தவன் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். ஆமாம், என் அப்பா கக்கூஸ் கன்ட்ராக்ட் எடுத்தவர்தான். அது ஒன்றும் கேவலமான தொழில் அல்ல.

உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்தபோது, மதுரை நகரில் புதிதாகக் கழிப்பறைகளைக் கட்டினார்கள். அவற்றைப் பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை என் தந்தை எடுத்தார். பள்ளியில் ஆண்டு விடுமுறை விடப்பட்டபோது, எங்கள் தலைமை ஆசிரியர் ஜோசப் பாதிரியார், ‘விடுமுறையில் வீட்டில் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டார். அப்போது, ஒவ்வொரு மாணவரும் மகிழ்ச்சியான பல விஷயங்களைச் சொன்னார்கள். நான் மட்டும், ‘எங்கள் அப்பாவுக்கு உதவியாக கழிப்பறைகளைச் சுத்தம் செய்வேன்’ என்று சொன்னேன். அதற்கு, ‘எதையும் அசிங்கமாக நினைக்காமல், வெளிப்படையாகப் பேசுகிறாய். வருங்காலத்தில் பெரிய ஆளாக வருவாய்’ என்று அவர் வாழ்த்தினார். எந்தத் தொழிலும் கேவலமானது அல்ல. திருடாமல், பொய் சொல்லாமல் வாழ்வதுதான் நல்ல பண்பாடு. கக்கூஸ் கழுவினேன் என்று என்னை கொச்சைப்படுத்துபவர்களைக் கேட்கிறேன்… கடைநிலைத் தொழில் செய்பவர்கள் அரசியலுக்கோ, உயர்ந்த பதவிகளுக்கோ வரக்கூடாதா? டீக்கடை வைத்திருந்த மோடி பிரதமரானது தவறு என்று சொல்ல முடியுமா?”

‘‘அழகிரி அண்ணனுக்கும் எனக்கும் பிரச்னை இல்லை!”

“2011-ம் ஆண்டு நான் கைதுசெய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்தேன். அப்போது, அழகிரி அண்ணன் நான்கு முறை வந்து என்னைப் பார்த்தார். தளபதி ஸ்டாலினும் வந்து பார்த்தார். என்னைப்போலவே வீரபாண்டி ஆறுமுகம், கே.சி.பழனிச்சாமி ஆகியோரும் அடைக்கப்பட்டு இருந்தார்கள். ஸ்டாலின் வரும்போது, நான் மட்டும்தான் சிறைக்குள் தி.மு.க கரை வேட்டி கட்டி இருந்தேன். ‘மற்றவர்கள் ஏன் கரை வேட்டி கட்டவில்லை?’ என்று தளபதி கேட்டார். ‘போலீஸ் அனுமதிக்கவில்லை’ என்று அவர்கள் சொன்னார்கள். அதற்காக தளபதி ஸ்டாலின், அங்கிருந்த அதிகாரிகளிடம் கடுமையாக சண்டை போட்டார். அந்த அளவுக்கு இருவரின் அன்பையும் பெற்றிருந்தேன்.

என் மீது அதிகமான பாசம் வைத்திருந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் நம்பமாட்டார். நம்பிவிட்டால், அவர்களைக் கைவிடமாட்டார். சிறையில் இருந்தபோது அவர் உடல் மிகவும் பலவீனப்பட்டு இருந்தது. அவரைத் தூக்கவும், உட்கார வைக்கவும் நான்தான் உதவியாக இருந்தேன். தினமும் ஷேவ் செய்யும் பழக்கமுள்ளவர் அவர். ஆனால், கையில் நடுக்கம் இருந்தது. உடனே நான் அவர் மீதிருந்த மரியாதையில் ஷேவ் செய்ய உதவினேன். எனக்கு வழக்கு, அது இது என பிரச்னைகள் ஆரம்பித்தவுடன், வீரபாண்டியார்தான் எனக்காக தலைவரிடம் பேசினார். ‘பாண்டி மாதிரியான ஆட்களை விட்டுவிடாதீர்கள். அந்த மாதிரி ஆட்களுக்கு மாவட்டப் பொறுப்புகளைக் கொடுங்கள், கட்சியை எவனும் அசைக்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். அவர் இறந்த சமயத்தில் நான் தலைமறைவாக இருந்தேன். அவர் சாவுக்குப் போகமுடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. அப்படிப்பட்ட பெரிய தலைவர்கள் அன்பைப் பெற்றவன் நான்.’’

‘‘எல்லோருக்கும் தெரியும்!’’

‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. குறிப்பிட்ட சில பெயர்களைக் கொடுத்துள்ளேன். அவர்களை போலீஸ் விசாரிக்கவில்லை. ஏன் விசாரிக்கவில்லை என்று நான் கேட்டேன். அதையும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை. அதுதான் மர்மமாக இருக்கிறது.”

தற்போது, இந்த வழக்கு விசாரணையை மதுரை டி.சி. சமந் ரோகன் சரியாகக் கொண்டுபோகிறார். ஆனால், வேறொரு போலீஸ் அதிகாரிதான் அவரை குழப்பி, உண்மையை மறைக்கும் வகையில் நடந்து வருகிறார். அவர் யாருடைய ஆள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்தான் இந்த வழக்கில் சில புள்ளிகளை தப்பிக்கவிட்டு விசுவாசத்தைக் காட்டுகிறார். என் மீது பழியைப்போட்டு இந்த வழக்கை முடித்துவிட அவசரகதியில் குற்றப்பத்திரிகையை போடுவதற்கான வேலைகளை அந்த போலீஸ் அதிகாரிதான் செய்துவருகிறார். எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்’’ என்று ‘அட்டாக்’ பாண்டி சொல்லி அனுப்பியதாக அவரது குடும்பத்தினர் சொல்கிறார்கள்.

போலீஸ் காவலில் இருந்தபோது, தங்களுக்கு வேண்டியதை ‘அட்டாக்’ பாண்டி சொல்லாததால் விரக்தி அடைந்தது போலீஸ். ‘அட்டாக்’ பாண்டி இப்படி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து இருப்பதைப் பார்த்தால், போலீஸின் நோக்கம் நிறைவேறுவது கஷ்டம்போலத்தான் தெரிகிறது.