அந்நிய அமிலம் ( EXTERNAL ACID )


தன் உணவை தானே தேர்ந்தெடுக்கும் அரிய உயிரியல் உணவு ஞானம் பெற்ற உடல் கொண்ட உயிரினம் மனிதன். விலங்குகள் – தாவரங்கள் ஒரு குறிப்பிட்ட உணவு வகைகளை உண்ணும் அளவுக்குத்தான் அதன் உடல் உட்பாகங்கள் அமைந்திருக்கும். உணவு செரிமானம் – சக்தி சேமிப்பு – இனபெருக்கம் என்ற அளவில் தாவரங்கள் , விலங்குகளுக்கு அதன் உடல் சார்ந்த வாழ்க்கை முடிந்துவிடும்.

பகுப்பாய்வு சிந்தனை சக்தி – மூளை பரிணாமம் என்ற உயர் திணை உயிர் பண்புகள் கொண்ட அற்புதமான படைப்பு மனித உடல் . தான் விரும்பியதை மட்டுமே சிந்திக்கும் மன சூழலை உடல் ரீதியாக ஏற்படுத்தும் ஒரு வேதியியல் அமில சேர்க்கை இந்த மதுக் கலவை.

எந்த ஒரு உணர்வு நிலையையும் நீட்டிப்பு செய்யவும் , நாம் விரும்பாமல் நம்முள் எழும் உணர்வுகளை கட்டுப்படுத்தி திசை திருப்பும் வல்லமை மதுவுக்கு உண்டு. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் மனிதர்களின் மகிழ்ச்சி அலைவரிசை நீட்டிப்பு செய்ய – கவனம் தவறாத நீண்ட நேர வணிக பேச்சுவார்த்தை – விருந்தினர் உபசரிப்பு போன்ற மேற்கத்திய கலாச்சாரம் என்ற சமூக தளங்களில் பயணித்து இன்று அன்றாட உணவு என்ற வழக்க முறையில் கலந்திருக்கிறது.

ஆனால், மனித உள் உறுப்புகளின் செயல்பாட்டை குறைத்து – நம் உடலில் இயல்பாகவே சுரக்கும் வேதியல் திரவங்களின் துணையோடுதான் மது எல்லா கிரியைகளையும் செய்கிறது . நாளடைவில் நம் சிந்திக்கும் திறன் – சிந்தனை முறை எல்லாம் மதுவின் கட்டுபாட்டுக்குள் வந்துவிடும். நம் உயிர் சக்தியை கொண்டே நம்மை இயக்கி – நாளடைவில் முழு உடல் இயக்கத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சக்தி இந்த வேதியல் திரவத்திற்கு சாத்தியம்.

அரசாங்கம் மதுவை தாராளமாக கிடைக்க செய்வதன் மூலம், அரசுக்கு வருவாய் மட்டுமின்றி இன்னொரு சாத்தியமும் இருக்கிறது. நேர்மையற்ற – கண்ணியமில்லாத – குற்றம் செயல்களில் ஈடுபடுவதில் வெட்கமில்லாத அரசியல்வாதிகளை நாம் ரசனையுடன் காணும் நபர்களாக மாறிவிட்டோம் . மக்களின் ரசனை மாறியதால் அதையே வணிக தளமாக்கி, பொது வாழ்வில் ஈடுபடுபவர்களின் அந்தரங்க வாழ்க்கையை செய்தியாக்கி வியாபாரம் செய்யும் தரமில்லாத செயலுக்கு சில ஊடகங்கள் இறங்கிவிட்டோம் . நாம் மது அருந்துவது நமக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதால் பொது வாழ்வில் அசுத்தமானவர்களை அடையாளம் காணும் தன்மையை மனரீதியாக இழந்து விடுகிறோம் .

மது அருந்துபவர்களுக்கு வித விதமான – கவர்ச்சியான வார்த்தைகள் கேட்பதில் ஆர்வம் இருக்கும் என்பதால்தான், சமீப காலங்களில் பொருளற்ற வார்த்தைகள் இட்ட கவர்ச்சியான சினிமா பாடல்கள் பிரபலமாயின. உணர்வு இலக்கண இசையமைப்பு ( MUSIC ON WAVE LENGTH ) என்பது குறைந்து பரபப்பூட்டும் இசை கோர்வை என கலை உணர்வு துறைகளிலும் மது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுவின் எல்லா கேடுகளையும் எத்தனை முறை விவரித்தாலும் அதன் உபயோகம் நாளுக்கு நாள் உயர்கிறது எதனால் என்றால் , மதுவுக்கு மாற்றான தீங்கில்லாத உணர்வு வடிகால் பயிற்சி குறித்த விழிப்புணர்வு இல்லை.

மது அருந்திவிட்டு நமக்கு பிடித்தமானவர்களோடு உரையாடுவதை விட ; நல்ல புத்தகத்தை – இசையை – இலக்கியத்தை ரசித்து உள்வாங்கி அதை நண்பர்களுடன் பகிர்ந்து பாருங்கள் . வாழ்வின் சுகம் புரியும்.

கரடு முரடான பாதைகளில் தள்ளாடியபடி – சுமக்க இயலாத சுமைகளோடு உங்கள் வாரிசுகள் நடந்து போவதை உங்களால் சகிக்க முடியுமா ? மது அருந்துபவர்களின் வாரிசுகளின் வாழ்க்கை அப்படித்தான் அமையும்.

நம் இணையம் தொடர்ந்து தரமான கலை உணர்வு வெளிப்பாடுகளை வெளியிடுகிறது . பரபரப்புக்கும் – சுறுசுறுப்புக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

எடிட்டர் – editor@tamilagamtimes.com