அனுபவம் இருக்கா..? வேலை குடுத்தாதானே சார் அனுபவமே கிடைக்கும்…?

இது எந்த விதத்துல சார் நியாயம்..? அனுபவம் இருக்கா..? வேலை குடுக்கறோம்னு  சொல்றாங்க.. வேலை குடுத்தாதானே சார் அனுபவமே கிடைக்கும்…? இதை ஏன் சார் யாரும் கேட்கவே மாட்டேங்கறாங்க..?’

நியாயம்தான். ஆனா யோசிச்சுப் பாருங்களேன்… எங்கே, எந்த வேலைக்கு அனுபவம் கேட்கறாங்க..?
சரி.. இதையேகொஞ்சம் மாத்தி, இப்படிக் கேட்கலாம். எல்லா இடங்கள்லயும், எல்லா வேலைக்குமே அனுபவம் இல்லைன்னா வேலையே கிடையாதுன்னு சொல்றாங்களா..?’

நிச்சயமா அப்படி இல்லை.
‘நான் எம்.காம். படிச்சு இருக்கேன்.. அகவுண்ட்ஸ் ஆபிசர் வேலைக்கு அப்ளை பண்ணேன்.
கூப்பிட்டாங்க. போனா.., அனுபவம் இருக்கான்னு கேட்டாங்க. இல்லைன்னு சொன்னேன்.
‘இல்லையா..? அப்போ சரி வராது.. போயிட்டு வாங்க’ன்னு அனுப்பிச்சுட்டாங்க’. கடைசியில பார்த்தா.., பி.காம் படிச்ச ஒருத்தனுக்கு குடுத்து இருக்காங்க. அவன் பண்ற வேலையை என்னால பண்ண முடியாதா..?’

‘இதுதான் உங்க கோபத்துக்குக் காரணமா..? பாருங்க.. படிப்பு மட்டுமே வேலைக்கான தகுதி இல்லை.
இதை நல்லா புரிஞ்சுக்குங்க. ‘எம்.காம். உசத்தி; பி.காம். அதை விடவும் கம்மி’ன்னு நினைக்கறோம்
இல்லை…? கல்வித் தகுதியைப் பொறுத்த மட்டும் அது சரிதான். ஆனா, பணித் தகுதின்னும் ஒண்ணு இருக்கு.
அதை வச்சு பார்க்கறப்போ, அனுபவமற்ற எம்.காமை விடவும், அனுபவத்துடன் கூடிய பி.காம் ஒசத்திதான்.
சந்தேகமே வேணாம்.’

‘ஓரு பேச்சுக்கு சொல்றேன்… அதே நிறுவனத்துல, அகௌண்ட்ஸ் க்ளெர்க் வேலை இருந்து, நீங்க
விண்ணப்பிச்சு, அதுக்கு போனீங்கன்னா, உங்க கிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்க மாட்டாங்க.. பி.காம். ஆளை விட, எம்.காம் படிச்ச உங்களுக்குத்தான் முன்னுரிமை குடுத்து வேலைக்கும் எடுத்துப்பாங்க’.

நாம மனசுல ஆழமா பதிய வச்சுக்க வேண்டிய உண்மை என்னன்னா.., காரணம் இல்லாம, யாரையும்
வேலைக்கு செலக்ட் பண்ண மாட்டாங்க.. அதே போல தகுந்த காரணம் இல்லாம யாரையும் ரிஜெக்ட் பண்ணவும் மாட்டாங்க. பல நூறு பேர்ல இருந்து ஒருத்தரை மட்டும் வேலைக்கு தேர்ந்து எடுக்கறாங்கன்னா அவர் கிட்ட
‘ஸ்பெஷலா’ என்ன க்வாலிடி இருக்குன்னு பாருங்க. அது அனேகமா அவருக்கு இருக்கற அனுபவமாதான் இருக்கும். அதுதான் தீர்மானிக்குற விஷயமா (deciding factor )இருந்து இருக்கும்.

சுய குறிப்புல இந்த அனுபவத்தை எப்படிக் குறிப்பிடணும்..?
நம்முடைய அனுபவத்தை இரண்டு விதமா பிரிச்சுக்குவோம்.
ஒண்ணு, நாம விண்ணப்பிக்கிற வேலைக்கு நேரடியா தொடர்புடைய அனுபவம்.
ரெண்டு, ‘பிற அனுபவங்கள் – பணிக்குத் தொடர்பில்லாதது.

முதலாவதுதான் முக்கியம். என்ன ஒண்ணு..,
குறைந்த ‘நிலை’யில அந்த வேலையைப் பண்ணி இருப்போம். மேல சொன்ன உதாரணத்துல,
அகௌண்ட்ஸ் ஆபிசர் வேலைக்கு விண்ணப்பிக்கிறோம். நம்முடைய அனுபவம் ஆனா, அகௌண்ட்ஸ் க்ளெர்க்கா
இருந்து இருக்கலாம். இப்படி இருக்கத்தான் சாத்தியங்கள் அதிகம்.

ஒருவேளை ஆபிசராவே அனுபவம் இருந்து, பெரிய கம்பெனி.. அதிக சம்பளம்.. இந்தக் காரணங்களுக்காவ,
அதே நிலை வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

சுய குறிப்புல அனுபவங்களைப் பத்தி எழுதும் போது, உயர் நிலைப் பொறுப்பிலான அனுபவத்துல
இருந்து ஆரம்பிக்கணும். படிப்படியா ‘கீழே’ வரலாம். அதாவது, முதல்ல அகௌண்ட்ஸ் ஆபிசரா
இருந்த அனுபவம், அடுத்ததா அகௌண்ட்ஸ் அசிஸ்டெண்ட், அதுக்கும் கீழே, அகௌண்ட்ஸ் க்ளெர்க்…

இயற்கையாகவே, ஆபிசருங்கறது இப்போ வந்ததா இருக்கும். அதுக்கு முன்ன அசிஸ்டண்ட்டா
இருந்து இருப்போம். அதுக்கும் முன்னதான் க்ளெர்க். ஆக, அனுபவத்தைப் பொறுத்த மட்டும்
‘ரிவர்ஸ் க்ரானொலஜிகல் ஆர்டர்’ அதாவது, பின்னோக்கிய கால வரிசைப்படி இருக்கும். இதுதான்
முறையானது. ஏன் அப்படி..?

உயரிய பொறுப்பில் கிடைத்த அனுபவம்தான் நாம் விண்ணப்பிக்கும் வேலையில் நமக்கு முன்னுரிமை பெற்றுத் தரும். ஆகவேதான் அது முதலில் வர வேண்டும். நாம் எப்படி படிப்படியாக மேலே வந்தோம் என்கிற ‘கதை’,
அத்தனை முக்கியம் இல்லை.

‘இன்னைக்கு என்னவா இருக்கே.. அதை சொல்லு முதல்ல.’ என்கிற குரல் உங்களுக்கு கேட்கிறதா..?
உங்களுக்கு வேலை கொடுக்க, உங்களுடைய சுய குறிப்பைப் பார்த்துக் கொண்டு இருக்கிறவரின் குரல்தான் அது.

நன்றாக ‘விஸ்தாரமா’ அனுபவத்தைப் பத்தி சொல்லலாமா..? இல்லை, ‘ச்சும்மா’ ஒரே வரியில சொல்லி முடிச்சுரலாமா…?
இதுக்கான பதில் ரொம்ப சுலபம். உங்க அனுபவம் ‘எப்படி’ இருந்திச்சுனு யாரும் கேட்கலை. உங்களுடைய அனுபவம் என்னவா இருந்துச்சு..? அதைதான் சொல்லணும். எனக்குக் கீழே எத்தனை பேர் இருந்தாங்க.. அவங்களை நான் எப்படி யெல்லாம் வேலை வாங்கினேன்… அவங்க கிட்ட நான் எப்படி நடந்துக்கிட்டேன்.. அவங்களும் எனக்கு எப்பிடியெல்லாம் மதிச்சு நடந்துக்க் கிட்டாங்க.. ‘ராவும் பகலுமா’ எப்பிடி மாட்டாட்டம் உழைச்சேன்…? இதெல்ல்ல்லாம் எதுவும் வேணாம். பிறகு..?

எனக்கு ‘மேலே’ யார் இருந்தாங்க..? அவங்க எனக்கு என்ன வேலை குடுத்தாங்க..? அதை எந்த அளவுக்கு சிறப்பா செஞ்சி முடிச்சேன்..? அவங்களுக்கு எந்த அளவுக்கு அதுல நிறைவு..? ‘கம்பெனிக்கு’ என்னால எந்த அளவுக்கு ‘லாபம்’ கிடைச்சுது..? இதுதான்… இதைத்தான் எதிர்பார்க்கறங்க. முன்ன சொன்னது – அனுபவம் எப்படி..? பின்னது – அனுபவம் என்ன?

பணி செய்த நிறுவனம், பணியின் நிலை, வாங்கிய சம்பளம், பணியில் செய்த சாதனைகள்(?) ஆகியன குறிப்பிடப்பட வேண்டும். அது மட்டுமல்ல; முன்னரே சொன்னதுதான், நாம் குறிப்பிடும் ஒவ்வொரு செய்திக்கும் சான்று வேண்டும். இல்லையேல், ஒட்டு மொத்த விவரமும் நிராகரிக்கப்பட்டு விடும்.

அனுபவத்துக்கான சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பம் / சுய குறிப்புடன் இணைக்க வேண்டுமா..? அவசியம் இல்லை. நேர்முகத் தேர்வின் போதுதான் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். அப்போது கட்டாயம் சமர்ப்பித்தே ஆக வேண்டும். இல்லையேல்..? ‘வேலை இல்லை’.

முதன் முறை வேலைக்கு விண்ணப்பிக்கிறவர்கள், தமக்கு அனுபவம் இல்லையே என்று மனம் கலங்க வேண்டாம்.
அதை விடவும், சுய குறிப்பில், அனுபவம் என்று எழுதி, அதற்கு எதிரே, ‘இல்லை’ என்றும் குறிப்பிட வேண்டாம்.
(பலர் இந்தத் ‘தவறை’ செய்கிறார்கள்) தமக்கு அனுபவம் இல்லை என்பதைத் தனியே குறிப்பிடாமல் விடுவதால், ‘உண்மையை மறைப்பதாக’ பொருள் ஆகாது.

தமக்குத் தெரிந்ததைத்தானே குறிப்பிட முடியும்..? தெரியாத மொழிகள் என்று அத்தனையும் பட்டியல் போட்டுக் கொண்டு இருக்க முடியுமா..? இல்லையே… எனக்கு இந்த மொழி தெரியாது என்பதை எப்படிச் சொல்ல வேண்டாமா…?
வேண்டும்தான். வேலையின் இயல்புப்படி (nature of job), உங்களுக்கு ஒரு மொழி தெரிந்தே இருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு அந்த மொழி தெரியவில்லை! குறிப்பிட்டே ஆக வேண்டும். இதே நியதிதான் அனுபவத்துக்கும்.

வேலைக்கான விளம்பரத்திலேயே, — ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று
சொல்லப் பட்டு இருக்கிறது. நமக்கு அனுபவம் இல்லை; ஆனாலும் விண்ணப்பிக்கிறோம். (எதுக்கு..?)
இது போன்ற சமயங்களில், அனுபவம் இல்லை என்பதைத் தனியே தெளிவாகக் குறிப்பிடத்தான் வேண்டும்.

‘இல்லை’ என்பதைச் சொல்லாமல் விடுவதால், ‘இருக்கிறது’ என்று பொருள் கொள்ளப்படுகிற
சாத்தியம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம், இல்லை என்பதைச் சொல்லியே தீர வேண்டும்.

இன்னொரு எளிய உதாரணம். ‘விற்பனைப் பிரதிநிதிகள் வேண்டும். இரு சக்கர வாகனம் வைத்து இருப்போர் விண்ணப்பிக்கலாம்’ என்கிறது விளம்பரம். (அடிக்கடி பார்க்கலாம்.) இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கிறோம்.

சுய குறிப்பில் எங்காவது, வாகனம் தொடர்பாக ஒரு கட்டம் இருக்கிறதா..?
இல்லை.
ஆகவே நம்மிடம் இரு சக்கன வாகனம் இல்லையென்றாலும் விண்ணப்பிக்கலாமா..?
கூடாது. ஆனாலும் விண்ணப்பிக்கிறோமா..?
நம்மிடம் வாகனம் இல்லை என்பதைப் பிரதானமாகக் குறிப்பிட வேண்டும்.

இப்போது புரிந்து இருக்குமே..?
‘அனுபவம்’ – மிக முக்கியம். வாழ்க்கையில்; வேலையில்.

முக்கியமான குறிப்புகளைப் பார்த்து முடித்து விட்டோம். இனி,
‘சில்லறை’ குறிப்புகள்….!!!