அமெரிக்காவில் மீண்டும் உருவான ட்வின் டவர் -தி வாக்

குழந்தைகள் தத்தித் தத்தி நடப்பது ஓர் அழகு. அடிமேல் அடிவைக்கும் அதன் இளஞ்சிவப்புப் பாதங்களின் நடையழகை, நாம் கண்டு பிரமித்திருப்போம். ஆனால் 1350 அடி உயரத்தில் எந்த விதப் பிடிப்பும் இல்லாமல் 1974ல் அமெரிக்காவின் ட்வின் டவர்களில் கயிறு கட்டி நடந்து சாதனை புரிந்திருக்கிறார் பிலிப். அந்த வித்தகரை அண்ணாந்து பார்த்தபடி புருவம் உயர்த்தினர் அமெரிக்கவாசிகள். அந்த அற்புத நிமிடங்களை பிரதிபலிக்கும் படைப்பு தான் தி வாக்.

பிரான்ஸில் வசிக்கும் சாகசக்காரர் பிலிப். சிறுவயதிலேயே சர்க்கஸ் சாகசங்களில் ஈர்ப்பு கொண்ட இவர், சம தளமாக இரண்டு பக்கங்கள் கிடைத்துவிட்டால் உடனே கயிற்றினைக் கட்டி நடக்க ஆரம்பித்துவிடுவார். கயிற்றில் நடப்பது, சின்னச் சின்ன மாயாஜால வித்தைகளைச் செய்து பார்ப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார். உயரமான கட்டடங்களுக்கு நடுவே, மரங்களுக்கிடையே,  நதிகளுக்கு மேலே என்று கயிற்றினைக் கட்டி அந்தரத்தில் நடப்பது மட்டுமே பிலிப்பின் சந்தோஷம்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், 1350 அடி உயரமுடைய அந்த ட்வின் டவர் விரைவில் திறக்கவிருப்பதாகவும் செய்தித்தாளில் படிக்கிறார் பிலிப். இந்த இரு கட்டிடங்களுக்கு நடுவே கயிறு கட்டி நடக்கவேண்டும் என்று விரும்பி, அதற்கான பயிற்சியில் இறங்குகிறார்.

பிலிப்பின் காதலி மற்றும் சர்க்கஸ் கலைஞரான பென் கிங்ஸ்லியும்  தூண்டுதலாக இருக்கிறார்கள். அமெரிக்காவுக்குக் கிளம்பிச் செல்லும் பிலிப், மேகங்கள் மறைத்திருக்கும் கோபுர உச்சிக்குச் சென்று இரண்டு கட்டிடங்களுக்கு நடுவே கயிறு கட்டி நடந்தாரா? அதற்கு நடுவே அவர் சந்தித்த இன்னல்கள், கஷ்டங்களை மீறி இவரின் லட்சியம் நிறைவேறியதா என்பதை த்ரில்லர் கலந்த உணர்வுப்பூர்வமான திரைநடையே “தி வாக்” படக் கதைத் தளம்.

பிலிப், பிரம்மாண்டமான ட்வின் டவரில் கயிற்றில் நடந்து  சென்றானா என்று தெரிந்துகொள்ள உங்கள் மனம் துடித்துக்கொண்டிருக்கும். பிலிப்பின் திட்டம் நிறைவேறியது.  1974ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி காலை ஆறுமணிக்கு பிலிப், ட்வின் டவரில் கயிறு கட்டி ஒரு முறையல்ல 8 முறை கட்டடங்களின் இரு பக்கமும் நடந்தான். அதுவும் 45 நிமிடங்கள் தொடந்து கயிற்றில் காற்றுடன் காற்றாக மிதந்துகொண்டிருந்தான். கயிற்றில் படுத்திருப்பது, ஒற்றைக் காலை காற்றில் அலையவிட்டு உட்கார்ந்திருந்த காட்சிகள் என்று க்ளாப்ஸை அள்ளுகிறார் பிலிப்.

ட்வின் டவரில் நடப்பதற்காகக் கயிற்றில் பிலிப் முதல் அடியை எடுத்துவைக்கும் போது மேகங்கள் கட்டிடங்களை மறைத்து நிற்கின்றன. மனித நடமாட்டம் கிடையாது. இரைச்சல் ஏதும் இல்லாத சூழ்நிலையில் பிலிப்பின் கண்களுக்கு கயிறு மட்டுமே தெரிகிறது. அவன் நடக்கத் தொடங்கியதும் மேகங்கள் கலைந்து அவனுக்கு வழிவிடும் காட்சி, நிச்சயம் நம்மையும் அந்தக் கயிற்றில் நடக்கவைக்கும்.

ஓர் உண்மைச் சம்பவத்தை எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே காட்சிப்படுத்திய இயக்குநர் ராபட்டுக்கு ஒரு சல்யூட். இவர் முன்னர் “ஃபாரஸ்ட் கஃம்”, “பேக் டூ தி ஃப்யூட்சர்” உள்ளிட்ட படங்களைத் தந்தவர் என்பதால் ஏற்படும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தி வாக் மூலமாகவும் நிறைவு செய்திருக்கிறார்.

இப்படத்தைத் தாங்கிநிற்கும் மற்றுமொரு விசயம் ஒளிப்பதிவு. கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் கேமிரா பார்வை, பார்வையாளர்களை நிச்சயம் மூச்சுத்திணறடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கயிற்றில் நடப்பது பிலிப் என்றாலும் உங்களுக்கும் கை கால்கள் வியர்த்து நீரடிக்கும். நேர்த்தியான கேமிராக்கலை, அதிரடிக்கும் 3டி, மற்றும் ஒலி அமைப்பு ஆகியன இப்படத்தைக் கம்பீர நடைபோடவைக்கிறது.

இறுதிக் காட்சியில் கயிற்றில் படுத்துக்கொண்டு “ இங்கு மட்டுமே அமைதியை உணர்கிறேன். எனக்கும் ஆகாயத்திற்குமான தொடர்பை உணர்கிறேன், கட்டடங்களோ, மனிதர்களோ என் கண்களுக்குத் தெரியவில்லை, இந்தக் கயிறு மட்டுமே என் பார்வையில் நிற்கிறது என்று பிலிப் பேசும் வசனங்கள் கிளாசிக் ரகம். லட்சியத்தை அடையும் வரை நிச்சயம் தூக்கம் கண்களில் இருக்காது என்பதற்குச் சான்றாக ஒவ்வொரு காட்சியிலும் பாடம் புகட்டிச் செல்கிறார் இயக்குநர்.

2001ம் ஆண்டில் தீவிரவாதிகளின் தாக்குதலால் ட்வின் டவர் இடிக்கப்பட்டு தரைமட்டமானது. மீண்டும் அதே கட்டிடங்களை வானுயர்த்தி பார்க்கவைத்த கலைநுட்பம் பாராட்டுக்குரியது. இயக்குநர் ராபர்ட் ஆஸ்கார் விருதினை மீண்டும் ருசிக்க இந்தப் படம் அவருக்கு உதவும்.

இந்தப் படம் நம்முடைய உணர்வைத் தூண்டும், நம்முடைய லட்சியத்தை நோக்கிச் செல்லும் போது ஏற்படும் தடைகள் நம்மைத் தடுத்தாலும் அதைத் தகர்த்தெறிந்து சாதனை புரிய இப்படம் ஓர் பாடம்.