அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப் டீல்: இ-காமர்ஸ் வெற்றியின் 10 மந்திரங்கள்

பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனங்கள் பிக் பில்லியன் டே ஆஃபரில் களம் இறங்கியுள்ளன.

இந்தப் பண்டிகைகளில் அவற்றின் வர்த்தகம் ரூ.52,000 கோடியை எட்டும் என அசோசேம் அமைப்பு கணித்துள்ளது. இவற்றின் வெற்றிக்கு என்ன காரணம்?

 

 

 

 

 

 

 

1. முழுமுதல் மந்திரம்:
ஒரு பொருளை கஷ்டப்பட்டு தயாரித்து விற்பவரை விட, அதை வாங்கி விற்பவர் அதிக லாபம் அடைவார். இதுதான் இ-காமர்ஸ் வெற்றியின் முதல் தாரக மந்திரம்.

2. ஒரு பொருள் மூன்று வருமானம்:
ஒரு பொருளுக்கு மூன்று வருமானம் கிடைக்கும் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு பொருளை விற்றால் மூன்று வருமானம் கிடைக்கும். ஒன்று பொருளை வாங்கி விற்பதால் கிடைக்கும் கமிஷன், இரண்டாவது வருமானம் அந்த நிறுவனத்தின் தளத்தில் இருக்கும் விளம்பரங்கள், மூன்றாவது எத்தனை முறை அந்தப் பக்கம் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதற்காக கிடைக்கும் வருமானம்.

3. விரல் நுனியில் விற்பனை:
இந்தியாவில் இணையப் பயன்பாடு ஆண்ட்ராய்டு மொபைல்களின் மூலம் தான் அதிகம் இருக்கிறது. மக்கள் ஸ்மார்ட் போன்கள், டேப்லட்கள் மற்ற மொபைல் போன்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்பில் உள்ளனர். இதனால் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அட்டகாச ஆப்களை அறிமுகப்படுத்தி மக்களோடு நெருக்கமாகி விரல் நுனியில் ஒரு டச்சில் விற்று விடுகின்றன.
4. நேரம் மிச்சம்:
உட்கார்ந்த இடத்திலேயே பொருட்களை வாங்க முடிவதால் நமக்கு பெரும்பாலான நேரம் மிச்சமாகிறது என்பது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பெரிய பலமாக உள்ளது.

5. அட்டகாச ஆஃபர்கள்:
ரீடெய்ல் விலையைக் காட்டிலும் 30 முதல் 70 சதவிகிதம் வரை என அதிரடி ஆஃபர்களை அறிவித்து மார்க்கெட்டிங் செய்கின்றன. இதனால் வாங்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் வாங்கத் தூண்டும் உத்திகளாக இவை மாறியுள்ளன.

6. ட்ரெண்டி விளம்பரங்கள்:
இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் மார்க்கெட்டிங்கு அதிகம் சிரமப்படுவதில்லை. அவற்றின் ஆஃபர்களே போதுமான மக்களைக் கவர்ந்து விடுகிறது. அதையும் தாண்டி அவை செய்யும் ட்ரெண்டி விளம்பரங்கள், காலத்திற்கேற்றவாறு இருப்பதால் அவை அதிக விற்பனைக்கு சாதகமாகி விடுகின்றன.

7. விரைவான டெலிவரி:
இ-காமர்ஸ் பெரும்பாலும் நகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றிய பகுதிகளில் அதிகம் இருப்பதால் இந்த நிறுவனங்களுக்கு விரைவாக டெலிவரி செய்ய எளிதாக உள்ளது. பொருளை வாங்கிய ஓரிரு நாட்களில் கைக்கு வந்து சேர்ந்து விடுகிறது.
8. கேஷ் ஆன் டெலிவரி:
ஆன்லைன் வர்த்தகத்தில் வாங்க தயங்கும் பெரும்பாலானோரைக் கவர்வதற்காகவே காஷ் ஆன் டெலிவரி வசதியை அறிமுகப்படுத்தின. நமக்கு தேவையான பொருள் கைக்கு வந்த பிறகு அதற்கான பணத்தைக் கொடுத்தால் போதும் என்பது சந்தேகத்தில் வாங்க தயங்குபவர்களையும் உள்ளே இழுத்து விடுகிறது. ஒருமுறை உள்ளே வந்துவிட்டால் அவர்களுக்குப் போதும்.

9. திருப்பித் தரும் வசதி:
தெரிந்த கடைகளில் அல்லது நம்பகமான கடைகளில் மட்டுமே பொருளைத் திருப்பித் தரும் வசதி இருக்கும். ஆனால் அதற்கும் நேரடியாகப் போக வேண்டியிருக்கும். ஆனால் அமேசான். ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பொருளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளதோடு, நம் வீட்டிற்கே வந்து திரும்பப் பெற்றுக்கொள்கின்றன.

10. அதிகரித்த நம்பகத்தன்மை:
ஆன்லைன் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற தேவையான அனைத்து சாத்தியங்களையும் அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் போட்டி போட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதனால் மக்களிடையே அவற்றின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.
அவை அறிமுகப்படுத்தும் ஆஃபர்களில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது கேள்விக்குறிய மற்றும் விவாதத்துக்குறிய விஷயமே. ஆனால் தரம் மற்றும் சேவையைப் பொருத்தளவில் இவை மக்களின் மனதை வென்றுவிட்டன என்பதுதான் உண்மை.