அம்பலமாகிய கோத்தபயவின் வெள்ளை வேன் கடத்தல் விவகாரம்: அதிர வைக்கும் தகவல்கள்!

கொழும்பு: இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த காலங்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய, தெற்கில் அரங்கேற்றிய வெள்ளை வேன் கடத்தலுக்காக, 3 குழுக்கள் செயல்பட்டுள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் உச்சகட்ட போர் நடந்தது. அப்போது, லட்சக்கணக்கான தமிழர்களை ராணுவம் கொன்றது. இறுதிக்கட்ட போரின் போது சரணடைந்தவர்களை வெள்ளை வேனில் ஏற்றி சென்ற ராணுவத்தினர், அவர்களை என்ன செய்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை. கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தரும்படி அவர்களது உறவினர்கள் இன்று வரை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அப்போது, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபய, தெற்கில் அரங்கேற்றிய வெள்ளை வேன் கடத்தலுக்காக, 3 குழுக்களை செயல்படுத்தியதாக விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த மூன்று குழுக்களில் முதல் குழு, கடத்தி செல்லப்படும் நபர் தொடர்பாக தகவல் சேகரித்தல் மற்றும் புலனாய்வு செய்து கடத்தி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல், அதற்காக பாதுகாப்பு புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் மற்றும் விடுதலை புலிகளில் இருந்து வெளியேறிய உறுப்பினர்களை ஈடுபடுத்தும் பணியை செய்துள்ளது.

இரண்டாவது குழு, கடத்தலை மேற்கொள்கின்ற குழுவாகும். வெள்ளை வேன்களில் வரும் இந்தக் குழுவுக்கு அதிகமான சந்தர்ப்பங்களில் இரண்டு குழுக்கள் பயன்படுத்தப்படும். அதில் ஒன்று கருணா அம்மானின் குழுவாகும். மற்றவர்கள் அவ்வப்போது மாற்றப்படுவார்கள்.

விசேஷ அதிரடிப்படையில் கோத்தபயவின் சார்பு அணி மற்றும் பாதுகாப்பு படைகளில் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவும் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக கொழும்பு கோட்டையில் வைத்து செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், கருணா அம்மானின் குழுவினால் கடத்தப்பட்டுள்ள நிலையில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கோத்தபாய தரப்பு குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.

மூன்றாவது குழு, கடத்தி செல்லப்படுபவர்களினால் விட்டு செல்லப்படும் சாட்சிகளை அழிக்கும் குழுவாகும். அவர்கள் கோத்தபயவின் புலனாய்வு பிரிவுகளாகும். அத்துடன் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் போல் நடித்துள்ளனர்.

கடத்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த இவர்கள், தற்செயலாக கடத்தலின் போது உயிர் பிழைத்தவர்கள் விட்டு சென்ற எதனையும், போலீசாருக்கு வழங்கும் சிவில் அமைப்பினர் அல்லது போலீஸ் அதிகாரிகள் போன்று நடித்து, சாட்சிகளை கொண்டு சென்று அழித்து விடும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவாகும். இதனால் பல கடத்தல் தொடர்பாக எவ்வித சாட்சிகளும் மீதமாகவில்லை.

எப்படியிருப்பினும் கடத்தி சென்ற நபர்களை கொலை செய்தல் மற்றும் உடல்களை அழிக்கும் நடவடிக்கையினை இரண்டாவது குழுவான கடத்தல் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படையினரை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட கடத்தல் மற்றும் கொலைகளுக்கு பின்னர் சடலங்கள் கொழும்புக்கு தொலைவில் அமைந்துள்ள காட்டு பிரதேசம் ஒன்றில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருணா அம்மானின் குழுவினால் கடத்தப்பட்ட நபர்களின் சடலங்களின் தலை, வயிறு பகுதிகளை கடலில் மூழ்கடிக்கும் நடவடிக்கைகள் கருணா அம்மானின் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் ராணுவத்தில் உயர் அதிகாரங்கள் கொண்டிருந்தவர்களாகும்.

தெற்கில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளை வேன் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் கோத்தபய ராஜபக்சவின் வலது கை என அழைக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.