அரசியல் வியாபாரிகளும்…..ஆயுத வியாபாரிகளும்

மொழி அரசியல் வியாபாரிகளும் – ஆயுத வியாபாரிகளும் சேர்ந்து இலங்கை விசயத்தில் கூட்டு வியாபாரம் செய்தார்கள்.

ஈழம் பற்றி கவிதை எழுத புதுப் புது கவிஞர்கள் உருவானார்கள்; கருத்து கேட்பு பிரியர்கள் கூடிக் கூடி கதை கேட்டார்கள். தமிழ் நாட்டில் மொழி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மாநாடு நடத்தி, தீர்மானம் போட்டு வசூல் செய்தார்கள்.

உருப்படியான தீர்வுகள் எட்டப்படவும் இல்லை; அதை எந்த அரசியல்வாதியும் விரும்பவும் இல்லை.

இலங்கை போர் குற்றங்கள் குறித்து பேசும் போதெல்லாம் நம் அரசியல்வாதிகள் அதை நம் மொழி உணர்வு சார்ந்த கருத்துக்களோடு அணுகி, அதன் உட்பொருள் புரியவிடாமல் செய்வதுதான் இன்றளவும் நடக்கிறது.

யுத்த களங்களில் நடந்தவைகளை காட்சியாக்கி காட்டுவது அந்த விசயத்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமே தவிர , தீர்வை தராது…அந்த யுத்த காட்சி ஊடகங்களில் கண்டதை மட்டுமே வைத்து தீர்வை தேடினால்…பிழையான அறம் சார்ந்த தீர்வுதான் கிட்டும் என்பதால் சற்றே ஆய்வு பார்வையோடு இந்த விசயத்தை அணுகுவது முறையாகும்.

ஆயுதம் இல்லாத – தொழில்முறை இராணுவ பயிற்சி அற்ற அப்பாவி மக்களை கொன்றது இலங்கையின் இராணுவம் என்பதுதான் நம் அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டு .

நடுநிலையாளர்கள் ஒரு விசயத்தை ஆய்வு பார்வையோடு பார்க்க வேண்டும், போரில் இறந்த ஒவ்வொரு சிங்கள் இராணுவ வீரருக்கும் ஒரு தாய் கட்டாயம் இருப்பாள் – மனைவி, குழந்தைகள் இருக்கலாம். உறவு சார்ந்த உயிர் இழப்பின் வலி எல்லா உயிர்களுக்கும் பொதுவானதுதான். அல்லவா ? அப்படி இருக்க ஒரு சாராரின் இழப்பு மட்டுமே சார்ந்து விவாதிப்பது அறமல்ல அல்லவா ?

அரசியல் உள்கட்டமைப்பு கொண்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட மொழி சார்ந்த பிரிவு மக்களுக்கு அரசியல் நிர்ணய உரிமைகள் ( CONSTITUTIONAL RIGHTS ) மறுக்கபட்டதுதான் இலங்கை பிரச்சனையின் ஆரம்ப நிலை. இது சிங்கள அரசாங்கத்தின் ஆதிக்க உணர்வுகளின் வெளிப்பாடுதான். மறுப்பதிற்கில்லை .

தொடர்ந்து அந்த சிறுபான்மை மக்களின் சார்பாக தேர்ந்தெடுக்கபட்ட அரசியல் பிரதிநிதிகள் சிங்கள பாராளுமன்றத்தில் தங்கள் கருத்துகளை முன் நிறுத்தி – தங்களின் ஒருங்கிணைந்த சாதுர்யமான அரசியல் செயல்பாடுகளால் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட இயலவில்லை என்பதும் உண்மை.

அதன் பின்புதான் இராணுவ நடவடிக்கைகள் மூலமான தீர்வை நோக்கி இந்த பிரச்சனை திரும்புகிறது. இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும், இன்றளவும் இலங்கையில் அந்த அரசாங்கத்தின் அத்தனை உரிமைகளையும் பெற்று வாழும் இலங்கையின் தோட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. அவர்கள் இந்த இராணுவ தீர்வை விரும்பவில்லை .

ஆக, தமிழ் ஈழத் தலைவர்களின் இராணுவ தீர்வை இறுதி வடிவாக ஏற்றுக்கொண்டவர்கள்தான் விடுதலை புலிகளின் அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்தார்கள்.

80 – களின் முற்பகுதியில் விடுதலை புலிகளுக்கும் – இலங்கை இராணுவத்திற்கும் யுத்தம் உச்சம் அடைந்த நிலையிலும் கூட , அரசியல் தீர்வு வேண்டி இந்திய அரசாங்கத்தையோ  அல்லது சர்வதேச சமூகத்தையோ ஈழ மக்கள் நாடவில்லை. அன்று யுத்தத்தில் விடுதலை புலிகளை சமாளிக்க முடியாமல் இலங்கை இராணுவம் திணறியபோது – அந்த செய்திகளை நம் தமிழ் நாட்டில் வீர தீர செய்திகளாக வெளியிட்டு மகிழ்ந்தது நம் அரசியல் கட்சிகள் .

தகவல் பரிமாற்ற வசதிகள் முன்னேறிய கால கட்டத்தில் கூட சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவதில் தமிழ் ஈழ விடுதலை புலிகள் ஆர்வம் காட்டாமல், ஆயுத குவிப்பில் ஈடுபட்டார்கள் என்பது உண்மை.

இலங்கையின் இறுதிக் கட்ட போரில் அதிக அளவில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதுதான் இதை போர் குற்றமாக நாம் பார்க்க

ஆரம்பிக்கிறோம்.

நம் தவறுகளை நாம் ஆய்வு செய்வது , நம் அடுத்த அடுத்த கட்ட கள முன்னெடுப்புகளில் நம் திசையை சரியாக தீர்மானிக்க வேண்டும் என்பதுதானே தவிர , எதிர்களின் தவறுகளை நியாயப்படுத்த அல்ல .

இன்று ஐ.நா. சபையின் தீர்மானத்தில் இலங்கையை ஆதரிக்க கூடாது என நிர்ப்பந்திக்கும் கூறும் ஐயா நெடுமாறன் – சகோதரர் சீமான் மற்றும் திருமா – வைகோ மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் அனைவர்களிடமும் நாம் கேட்கும் மிக எளிமையான கேள்வி இதுதான்….

ஈழ தமிழர்கள் அனைவரும் நம் தொப்புள் கொடி உறவு என துடிப்பவர்கள் நீங்கள் அல்லவா ? அது உண்மையானால் ஐயா நெடுமாறன் குடும்பத்தினரோ , வைகோ குடும்பத்தினரோ எத்தனை ஈழ தமிழர்கள் வீட்டிலிருந்து சம்பந்தம் கண்டிருக்கிறார்கள் . நெடுமாறன் வாரிசுகளுக்கோ / வைகோவின் வாரிசுகளுக்கோ தொப்புள் கொடி உறவிலிருந்து சம்பந்தம் செய்ய தோன்றவில்லையா ?  தொப்புள்கொடி உறவுகளை அகதிகள் முகாம்களில் தங்கவைப்பதுதான் விருந்தோம்பலா ?

சீமானும் / திருமாவும் ஆதரவிழந்த தமிழீழ குடும்பத்திலிருந்து பெண்ணை ஏன் திருமணம் செய்யவில்லை ?

பாரதியாரின் பாடல் ஞாபகம் வருகிறது ‘ ” கூட்டத்தில் கூடி நின்று கூடி பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே !…”  சொந்த சகோதரர்கள் துன்பத்தில் வாடல் கண்டு சிந்தை கலங்காரடி கிளியே ! இவர் செய்வதொன்றும் அறியார் ;…

ராஜபக்க்ஷேவை தண்டிப்பது இருக்கட்டும்…; தமிழ் ஈழ மக்களை வாழ வைப்பது எப்போது ?

தமிழக முtha ல்வருக்கு நம் வேண்டுகோள் ! இலங்கை தமிழரை திருமணம் செய்வோருக்கு சிறப்பு சலுகைகளை அறிவியுங்கள் ! அகதிகள் முகாம் திருமண மண்டபமாகட்டும் !

தொப்புள் கொடி உறவு ..தாலி கொடி உறவாகட்டும் !

editor@tamilagamtimes.com