அரிவாள்மனைப் பூண்டு…

னிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து  உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்… கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்… அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே… ‘மூலிகை வனம்’ எனும் இப்பகுதியில் பல வகையான மூலிகைகளின் பயன்களை பட்டியலிட்டு வருகிறோம்.

ஆப்பிரிக்காவின் பாரம்பர்ய மருந்து!

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது அரிவாள்மனைப் பூண்டு. இலைகளின் ஓரங்கள் ரம்பம் போன்ற கூரிய முனையுடைய இந்த மூலிகையை, களைச்செடி என்றே கருதுகின்றனர் பெரும்பாலானவர்கள். ஆனால், இதன் இலை மருத்துவக்குணம் மிக்கது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த இலையைப் போட்டி போட்டு வாங்குகின்றன. உழவு செய்யாமல், விதைக்காமல், தானே விளைந்து, விலையும் பெற்றுத்தரும் இந்த அற்புத மூலிகையின் சந்தை மதிப்பு தெரியாமல், கைக்காசு செலவு செய்து இதை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா, இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தானாக வளர்ந்துகிடக்கும் இந்த அரிவாள்மனைப் பூண்டுக்கு, அரிவாள்மூக்குப் பச்சிலை என்றும் ஒரு பெயர் இருக்கிறது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பாரம்பர்ய வைத்தியத்தில் முக்கிய இடம் வகிக்கிறது இந்த மூலிகை. குறிப்பாக, நைஜீரியா நாட்டில், மலேரியா, கருக்கலைதல் போன்றவற்றுக்கான நிவாரணியாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இலவச முதலுதவிப் பெட்டி!

சாலையோரங்களில் எல்லாம் கேட்பாரற்று கிடக்கும் இதன் இலைக்கு, ரத்தப்போக்கை நிறுத்தும் ஆற்றல் உண்டு. வெட்டுக்காயத்தின் மீது இதன் இலையைக் கசக்கிப் பிழிந்தால், ரத்தம் வெளியேறுவது சட்டென்று நிற்கும். சிறுசிறு காயங்களுக்குக் கூட ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்கு ஓடும் நாம், காலுக்கு கீழே உள்ள இந்த மூலிகையின் சாற்றைப் பயன்படுத்தி முதலுதவி செய்துகொள்ளலாமே!

புழுவெட்டுப் போயே போச்சு!

‘அரிவாள்மனைப் பூண்டு இலைகைப்பிடி அளவு, குப்பைமேனி இலைகைப்பிடி அளவு, பூண்டு2 பல், மிளகு3 ஆகியவற்றை அரைத்து, புன்னைக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் வைத்துக் கட்டினால் பூச்சிக்கடியினால் ஏற்படும் நஞ்சு முறியும். அரிவாள்மனை இலை, கிணற்றுப் பாசான இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து, புழுவெட்டு உள்ள இடத்தில் தடவினால், விரைவில் மாறும். அரிவாள்மனைப் பூண்டு இலையோடு சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு மீது தடவி வர குணமாகும். இதனுடன் சம அளவு குப்பைமேனி இலையையும் சேர்த்து அரைத்துப் பற்றுப் போட்டால், படர்தாமரை குணமடையும். அரிவாள்மனைப் பூண்டு இலை, கிணற்றுப் பாசான இலை, எலும்பு ஒட்டி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துப் பற்றுப் போட்டால் காயங்களில் உள்ள வீக்கம் குறையும். இலை அதிக கசப்புத் தன்மையோடு இருப்பதால், வயிற்றுப் போக்குக்கு முக்கிய மருந்தாகப் பயன்படுத்தலாம். நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாடு, சிறுநீரகக் குறைபாடு போன்றவற்றுக்கும் சிறந்த மருந்தாக விளங்கும்’ என்றெல்லாம் சொல்கிறது சித்தமருத்துவம்.

இலவசமாகக் கிடைக்கும் காசு!

குத்துச்செடி வகையைச் சேர்ந்த இந்த மூலிகை ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும், மழைக்காலங்களான அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக இலைகளுடன் செழிப்பாக காணப்படும். சாலையோரங்கள், தென்னந்தோப்புகள், வயல் வரப்புகள் என அனைத்து இடங்களிலும் இருக்கும். தமிழகத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திராவில் அனந்தப்பூர் மாவட்டத்திலும் மூலிகை சேகரிப்போர்களால் இது சேகரிக்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் தானாக விளைந்துள்ள இந்த மூலிகையை அறுவடை செய்து விற்பனை செய்வது மூலமாக கணிசமான ஒரு தொகையை வருமானமாகப் பார்க்க முடியும். அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் மூலிகைச் செடிகளை வாங்கும் கடைகளில் இதை விற்பனை செய்யலாம். இதுவரை களைச்செடி என செலவு செய்து அதை அழித்த விவசாயிகளே… இது களையல்ல, காசு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

‘மூலிகை வனம்’ என்ற இந்தத் தொடரில் இதுவரை பல்வேறு வகையான மூலிகைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவையாவும், அலைந்து திரிந்து தேடக்கூடிய மூலிகைகள் அல்ல. தெருவோரங்கள், புறக்கடைகள், சாலையோரங்கள், வயல் வரப்புகளில் மலிந்து கிடப்பவையே. ஒவ்வொரு மூலிகையையும் படித்து, பயன்படுத்தி, பலனடைந்த வாசகர்கள், தங்கள் நோய் தீர்ந்த மகிழ்ச்சியை அலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் பகிர்ந்துகொண்டபோது, இந்தத் தொடர் அதன் நோக்கத்தைப் பூர்த்தி செய்திருக்கிறது என்ற திருப்தி எனக்குள் பரவிக்கிடக்கிறது.