ஆகாயத்திலிருந்து குதித்தவர் …

”அப்படியென்ன, அவர் ஆகாசத்திலிருந்து குதிச்சவரா? “ என்று கேட்பதுண்டு. இப்போது ஒருவர் உண்மையிலேயே ஆகாயத்திலிருந்து – அதாவது 41 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்து உலக சாதனை படைத்துள்ளார். இவ்விதம் உயரே இருந்து குதிப்பது skydiving  என்று குறிப்பிடப்படுகிறது.

கூகுள் என்றால் பெரும்பாலோருக்குத் தெரியும். கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆலன் யுஸ்டாஸ் (Alan Eustace) (வயது57 ) இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானி.

கீழே குதித்தது சரி, அவர் எப்படி அவ்வளவு உயரத்துக்குச் சென்றார்? ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட  ஒரு பிரும்மாண்டமான பலூனின் அடிப்புறத்தில் அவர் இணைக்கப்பட்டிருந்தார். ஹீலியம் வாயுவானது காற்றை விட லேசானது. ஆகவே பலூன் தானாகவே மேலே மேலே சென்று கொண்டே இருக்கும்.

வானில் மிக உயரத்திலிருந்து கீழே பார்த்தால் எல்லாமே பிரமிப்பூட்டுவதாக இருக்கும். பரவச உணர்வு ஏற்படும். ஆனால் 11 கிலோ மீட்டர் உயரத்துக்குப் போனால் குளிர் மைனஸ் 11 டிகிரி அளவுக்கு இருக்கலாம். சுவாசிக்கப் போதுமான காற்று கிடைக்காது.  மயக்கம் வரும். விரைவில் மரணம் ஏற்படும்.

விசேஷ காப்பு உடையில் அந்தரத்தில் யுஸ்டாஸ்

அந்த அளவில் வானில் மிக உயரத்துக்குச் செல்வது என்பது ஆபத்தான பயணமே. ஆகவே தான் யுஸ்டாஸ் விண்வெளி வீரர் அணிவது போன்ற விசேஷ காப்பு உடையை அணிந்திருந்தார். சுவாசிப்பதற்கான காற்றை அளிப்பது, கடும் குளிர் தாக்காமல் தடுப்பது உட்பட அந்த காப்பு உடையில் எல்லா வசதிகளும் இருந்தன.

பலூன் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ரோஸ்வெல் என்னுமிடத்திலிருந்து 24 ஆம் தேதி காலை 7 மணிக்கு உயரே கிளம்பியது. சுமார் 2 மணி 7 நிமிஷங்களுக்குப் பிறகு  பலூன் 1,35,890 அடி ( 41,420 மீட்டர்)  உயரத்தை எட்டியது.

ஹீலியம் நிரப்பப்பட்ட ராட்சத பலூனின் நுனியில் யுஸ்டாஸ்( Courtesy:Paragon Space Development Corporation)

 

 இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலக சாதனை படைத்த பெலிக்ஸ் பாம் கார்ட்னர் எட்டிய உயரத்தை விட சுமார் இரண்டு கிலோ மீட்டர் அதிகம்.
யுஸ்டாஸ் தமது அனுபவம் பற்றிப் பின்னர் கூறுகையில் ” அற்புதமான அனுபவம். அங்கிருந்து பார்த்த போது வானம் காரிருளாக இருந்தது. கீழே காற்று மண்டல அடுக்குகள் தெரிந்தன ” என்றார்.

சாதனை படைக்கும் உயரத்துக்குச் சென்றதும் அவர் பலூனிலிருந்து  தம்மைத் துண்டித்துக் கொண்டார். பூமியின் ஈர்ப்பு சக்தியின் விளைவாக அவர் கீழ் நோக்கி விழலானார். உயரே தூக்கிப் போட்ட கல் எப்படி பூமியை நோக்கி விழுமோ அது போல அவர் கீழ் நோக்கி வேகமாக விழலானார்.

சுவாசக் கருவி அணிந்தவராக தலைக் கவசத்துக்குள் யுஸ்டாஸ்

சுமார் நாலரை நிமிஷம் அவர் இப்படி கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் மணிக்கு 1321 கிலோ மீட்டர் வேகத்தில் விழுந்து கொண்டிருந்தார். உண்மையில் இது பயங்கர வேகமே.

தரையிலிருந்து சுமார் 5400 மீட்டர் உயரத்தில் பாரசூட் விரிந்து கொண்டது. அதன் பிறகு அவர் கீழ் நோக்கி இறங்கும் வேகம் மிகவும் குறைந்தது. அவர் வானை நோக்கிக் கிளம்பிய இடத்திலிருந்து சுமார் 113 கிலோ மீட்டர் தள்ளி ஓரிடத்தில் மெல்லத் தரை இறங்கினார்.

யுஸ்டாஸ் வானிலிருந்து குதிப்பது இது முதல் தடவை அல்ல. இந்த விஷயத்தில் அவருக்கு முன்னரே நல்ல பயிற்சி உண்டு. தவிர, அவருக்கு விமானங்களை ஓட்டும் அனுபவமும் உண்டு.

பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் கட்டத்தில்
யுஸ்டாஸ்  (courtesy; Paragon Space Development Corporation)

சுமார் 34 மாத காலம் தொடர்ந்து நடந்து வந்த ஏற்பாடுகளின் பலனாகவே யுஸ்டாஸினால் உலக சாதனை படைக்க முடிந்தது. இதில் அவருக்கு உதவிகளையும் ஏற்பாடுகளும் செய்வதில் ஒரு பெரிய படையே செயல்பட்டது.

முன்னர் 2012 ஆம் ஆண்டில் பாம் கார்ட்னர் சாதனை நிகழ்த்திய போது பிரபல மென்பான நிறுவனம் முன்னின்று எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டது. ஆனால் யுஸ்டாஸ் தமது சொந்த ஏற்பாட்டின் மூலமே தமது முயற்சியை மேற்கொண்டார்.