ஆசிரியர்கள் ஸ்டிரைக்கை முறியடிக்க சபீதா தீட்டிய திட்டங்கள் நிறைவேறியதா?

சென்னை: தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் ஸ்டிரைக்கை முறியடிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் மற்றும் இணை இயக்குனர்கள் தலைமையில் குழுவை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அதிரடியாக அமைத்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் 27 சங்கங்களின் கூட்டு குழுவான ‘ஜாக்டோ’ சார்பில் இன்று பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். 6வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய முரண்பாட்டை போக்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன.

சங்கங்களைப் புறக்கணித்த செயலாளர் சபீதா

‘ஜாக்டோ’ அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவார். அதில் சில கோரிக்கைகள் ஏற்கப்படுவதாக அவர் உறுதியளித்தால் போராட்டத்தை வாபஸ் பெற்று விடலாம் என்று கருதினர். இதன் மூலம் தங்களது போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்தனர். ஆனால் பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா, ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுத்து விட்டதோடு, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும்படி உத்தரவிட்டார்.

நொந்து போன ஜாக்டோ நிர்வாகிகள்

பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை அதன் துறை செயலாளர் சபீதாதான் அங்கு ‘ஆல் இன் ஆல்’. பள்ளிக்கல்வித் துறை இயக்குனரோ மற்ற இயக்குனர்களோ எல்லோரும் ‘சும்மா’ தான் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனாலும் இரு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் ஜாக்டோ நிர்வாகிகளை அழைத்து ‘பெயருக்கு’ பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த கூட்டத்தில் உருப்படியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதனால் பேச்சுவார்த்தை தோல்வி. திட்டமிட்டபடி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அக்டோபர் 8ஆம் தேதி (இன்று) நடக்கும் என்று ஜாக்டோ நிர்வாகிகள் அறிவித்தனர்.

பின்வாங்கிய இடைநிலை ஆசிரியர்கள்…

தமிழகத்தில் மற்ற ஆசிரியர்களை விட இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கைத்தான் அதிகம். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தான். வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற காரணத்தால் அவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. சங்கங்களில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு அரசியல் பின்புலத்தில் இருப்பதால் அவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அரசின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. வேலூர், பெரம்பலூர்  மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஈகோ பிரச்னையால் வந்த வினை!

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, ஆசிரியர் சங்கங்களின் அமைப்பான ஜாக்டோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. ஆனால் பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா தங்களை புறக்கணித்ததை ஜாக்டோ நிர்வாகிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரு தரப்பிற்கும் இடையிலான ஈகோவினால் வேறு வழியின்றி வேலை நிறுத்தம் போராட்டம் நடந்து வருகிறது.

முறியடிக்க மும்முரம்!

ஜாக்டோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபீதா நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களைத் தொடர்புகொண்டு அரசு மற்றும் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்பட நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஸ்டிரைக்கை முறியடிக்கவும், பிசுபிசுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கலெக்டர்கள், இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளிகள் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இணை இயக்குனர்

ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முறியடிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இணை இயக்குனர்கள் கண்காணிப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம் போல் இயக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் உள்பட பல இயக்குனர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிசுபிசுத்த வேலை நிறுத்தம்

ஜாக்டோ அமைப்பினர் அறிவித்தபடி இன்றைய வேலை நிறுத்த போராட்டம் ஆசிரியர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஒரு சில இடங்களில் மட்டும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோன்ற பள்ளிகளில் பிற ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்து நிலைமையை சமாளித்து வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் தவித்த மாணவர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வளம்பலூர், குரும்பலூர், விளாமுத்தூர், விஜயகோபாலபுரம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு கிடந்தன. இதனால் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள் வளாகத்தின் வெளியே தவித்தனர்.