ஆப்பிள் நிறுவனம் ஒரு ஹிட்லர்: சர்ச்சையை கிளப்பும் சீன விளம்பரம்!

ஸ்மார்ட்போன் சந்தையில் மேலும் ஒரு சீன நிறுவனம் நுழைய உள்ளது. லே டிவி எனும் அந்த நிறுவனம், இந்த அறிவிப்பை சூசகமாக மட்டும் அல்ல ரகளையாகவும் வெளியிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்நிறுவன சி.இ.ஓ, ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தை ஹிட்லருடன் ஒப்பிட்டு அதிர வைத்திருக்கிறார்.

லே டிவி நிறுவனம், சீனாவில் லெஷி டிவி எனும் இணைய வீடியோ தளத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ வான ஜியா யூடிங் (Jia Yueting ) சமீபத்தில், தனது வெய்போ ( சீன டிவிட்டர்) பக்கத்தில், புதிய போஸ்டருக்கான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த படத்தில் ஹிட்லரின் கார்ட்டூன் தோற்றம் இடம் பெற்றுள்ளது. அதில் அவரது கைப்பட்டையில் ‘ஸ்வஸ் திக்’ சின்னத்திற்கு பதில் ஆப்பிள் நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழே இடம்பெற்றுள்ள வாசகத்தில் கிரவுட்சோர்ஸ், சுதந்திரம்/ அடக்கு முறை மற்றும் சர்வாதிகாரம் என குறிப்பிடப்பட்டு, இரண்டு பாதைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஒரு பாதையில் சிறுவர்கள் உற்சாகமாக திறந்திருக்கும் கதவில் நுழைய காத்திருக்கின்றனர்.

அந்த கதவு, நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான  X900 ஐ குறிப்பதாக கருதப்படுகிறது. அதற்கு வலது பக்கத்தில் ஹிட்லர் உருவம் மற்றும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள குறும்பதிவில் , ஆப்பிள் நிறுவனத்தின் ஆதிக்கத்தை விமர்சித்துள்ளதுடன், ஆப்பிளை தேயும் பேரரசு என்றும் வர்ணித்துள்ளார். கூடவே மாற்றத்திற்காக காத்திருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போட்டி நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில், ஆப்பிள் நிறுவனத்தை வம்புக்கு இழுப்பது உண்டுதான்.

ஆனால் ஆப்பிள் நிறுவனத்தை ஹிட்லருடன் ஒப்பிட்டு வெளியாகி இருக்கும் இந்த விளம்பரம், விமர்சனத்தையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.