ஆயுதமில்லா இணை இராணுவம் அவசியம்

உலகிலுள்ள, இயற்கையோடு இணைந்து மனித வளம் காக்கும் மக்கள் அமைப்புகளில் (FEDERAL SETUPS) உயிர் கொல்லும் கொள்கைகள் உடைய இராணுவம் எப்படி வந்தது என்றே புரியவில்லை. உலகின், உயர்வான தனிமனித உரிமை பாதுகாப்புள்ள மக்கள் அமைப்பான ‘ஜனநாயக’ அமைப்பில் கூட இராணுவ வடிவம் ஏன் இடம் பெற்றது ?  மாற்று கருத்தியல் மனிதர்களை உயிர் பறிப்பு அச்சுறுத்தல் செய்வது மட்டுமே உலகத்திலுள்ள தொழில் முறை இராணுவ அமைப்புகளின் (PROFESSIONAL ARMED FORCES)  அடிப்படை கொள்கை. அச்சுறுத்தலில் எப்படி மாற்றுக் கருத்து புரிதல் உண்டாகும் ?  

மனிதனின் கூட்டு முயற்சி பலன் பங்கீடுகளுக்காக உருவாக்கப்பட்ட புவியியல் வடிவ குறியீடுதான் ‘தேசம்’.  இதை உணர்வுகளாக மூளையில் பதிய செய்வதுதான் தேசிய ஒற்றுமை. தேசத்தின் கற்பனை குறியீடுகளான எல்லைக் கோடுகள் எந்த வரையறையில் உருவாக்கப்பட்டவை ? இந்த கற்பனை கோடுகளை காக்க மனித உயிர்களை பலிக்கொடுக்கவும் தயங்காத கோட்பாடுகள் எப்படி உருவாக்கப்பட்டன ?

தேசங்களுக்கு இடையேயான வணிக பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெறுகிறது. இரு வேறு நாடுகளின் அரசியல் சாசன அங்கீகாரம் பெற்ற அதிகாரிகளும் / மக்கள் பிரதிநிதிகளும் சந்தித்து உரையாடுகிறார்கள். தேசங்களில் அரசியல் சாசனங்கள் இறையாண்மையுடன் அமலாக்கப்படுகிறது என்பதெல்லாம் உண்மையென்றால், சகிப்புத்தன்மையில்லாத தேசத்தின் எதிரிகள் எங்கு உருவாகிறார்கள்.

ஊதியமும் – வாழ்க்கை அனுகூல அம்சங்கள் கொண்ட ஒப்பந்த அடிப்படையில் மனிதர்களை தேர்வு செய்து – ‘தேசம் பற்று’ என்ற ஒற்றை வார்த்தையில் உணர்வு கொள்ள செய்து – உயிர் பயம் இல்லாமல் போர் குணத்தோடு உருவாகும் இராணுவ அமைப்பிற்கு இணை அமைப்பாக, இறையாண்மை சித்தாந்தங்களை சிந்தனைகளாகக் கொண்ட குடிமக்களை கொண்ட தேசத்தை அமைப்பை உருவாக்கும் பொறுப்பு அரசியல் சாசனத்திற்கு இருக்கவேண்டும் அல்லவா ? அல்லது இறையாண்மை கொள்கையும் – அற நெறி சித்தாந்தமில்லாத தேசத்தை காக்க இராணுவத்தை பயன்படுத்துவதில் நேர்மறை சமன்பாடு இருக்காது. அல்லவா?  

இதை இப்போது கூறவேண்டிய அவசியம் ஏன் உருவாகிறது என்றால், அறவழியில்லாத நோக்கோடு பொருள் ஈட்டியவர்களின் பட்டியல் தெரிந்திருந்தும் வெளியிடமாட்டேன் என்பதும், தேச அடையாளமாக கருதப்படும் தேசியக் கொடியை நம் தேசத்தின் எல்லைக் கோட்டுக்குட்பட்ட இடத்தில் ஏற்ற முடியாது என்றும் இந்த நாட்டின் பிரதமர் அறிவிக்கிறார் என்றால் இந்த தேசியம் – ஒருமைப்பாடு – அரசியல் கட்டமைப்பு இதெல்லாம் கேள்விக்குறியாகி விட்டது. நம் அரசியல் அமைப்பு அமலாக்கத்தின் எதிர்விளைவு அழுத்தங்களில் மாற்று இயக்கங்கள் உருவாகிவிடுகின்றன.

நம் இறையாண்மையை பலப்படுத்தவும் – சீரமைக்கவும் செய்வது நம் கடமை. ஏனென்றால் இது நம் அடுத்த சந்ததிகள் வாழப் போகும் தேசம். இதை வளமாகவும் – நலமாகவும் பாதுக்காக்க வேண்டியது நம் கடமை.

புதிய பரிமாணங்களோடு அடுத்த வாரம் சந்திப்போம் ….

(கருத்தாக்க பங்களிப்பு – உயர்திரு . இரா. வேங்கிட கிருஷ்ணன் அவர்கள் – சென்னை)