ஆலங்குச்சியும்….வேப்பங்குச்சியும் தோற்றது ஏன் ?

ஒரு மாலை வேளையில், மதுரையிலிருந்து – கரூர் செல்லும் நான்கு வழி நெடுஞ்சாலையில் மாலை நேர கார் பயணம். நமது இணைய இதழின் ஆசியர்களில் ஒருவரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன் அவர்களோடு காரில் பயணம் செய்யும் வாய்ப்பு வந்தது. அவர் பல வரலாற்று விசயங்களை தற்கால விஞ்ஞான வளர்ச்சியோடு ஒப்பீடு செய்து சுவாரசியமாக கூறுவார். அவர்  சொன்னது இது.

” 30 வருடங்களுக்கு முன்னால் நடுத்தர குடும்பங்களில், சமையல் செய்த பின் பானையிலுள்ள கஞ்சி வடித்தல் என்பது வழக்கமாகும். அப்போது, சந்தையில் பிரபலமாயிருந்த ‘ ஹார்லிக்ஸை ‘ விட இது சத்தானது என்ற பெயரும் உண்டு.  அதற்கென பிரத்யோகமான ‘ சிப்பிள்கள் ” ( சிறு துளைகள் இடப்பட்ட உலோக தட்டுகள் ) உண்டு.  ‘குக்கர்’ சாதனங்கள் சமையலறையில் இடம் பிடித்த பின் அவை வழக்கொழிந்துவிட்டன.

குக்கரை சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்ட நிறுவனங்களுக்கு ஒரு நீண்ட வியாபார நோக்கமிருந்தது. என்னவென்றால், கஞ்சி வடித்த பின் அந்த சாதத்தை உண்டு வளர்ந்த தலைமுறையினர் சாதாரண பல்பொடி கொண்டே தங்கள் பற்களை காத்து கொள்ள முடிந்தது. ஆனால், குக்கரில் சமைத்த சாதம் உண்ட பின் – வடிக்கப்படாத கஞ்சியின் கலவை, பற்களில் அழுத்தமாக பதிந்து அவற்றை அகற்ற ‘ பிரஷ் ‘ தேவைப்பட்டது. மேலும், இரசாயனம் கலந்த ‘பேஷ்ட் ‘ கொண்டுதான் அவற்றை அகற்ற முடியும் என்ற நிலை உருவானது .

வேப்பங்குச்சியும் – ஆலங்குச்சியும்  பல் வைத்தியத்தில் தோற்றுபோனது இப்படித்தான். இரசாயன கலவை பேஸ்ட்கள் ஈறுகளை பதம் பார்த்ததும் ஈறுகளை காக்க மருத்துவ உபகரணங்கள் என ‘ மருத்துவ வியாபார சந்தை ‘ விரிவானது.

குக்கர் சாதனத்தை திட்டமிட்ட ஐரோப்பிய சமூகம் எப்படி தந்திரமாக அலோபதி மருத்துவத்தை கட்டாயமாக நாம் கடைப்பிடிக்கும் அளவுக்கு நம்மை அடிமையாக்கியது எனப் பாருங்கள்.

நம் உடலின் ஆயுள் அதிகரிக்கும் ‘ வேதியல் விஞ்ஞானம் ‘ வளர்ந்ததில் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். நம் தந்தை – தாயை அதிக நாட்கள் அருகிலிருந்து பார்க்கும் சாதகம் இருக்கிறது.

ஆனால், விஞ்ஞான வளர்ச்சியால் உடல் மட்டும் ஆயுள் நீண்டு , ஆன்மா என்றொரு உளவியல் சக்தி ஒரு கட்டத்திற்கு மேல் எப்படி இயங்குவது என தடுமாறும் நிலை வயோதிகர்களுக்கு உருவானதை யாரும் உணரவில்லை .  அடுத்த தலைமுறை கருத்துக்களை எதிர்கொள்வதிலும் – சமூக மாற்றங்களை புரிந்து கொள்வதிலும் அவர்களுக்கான உலகம் அத்தனை எளிதாக தயாராகவில்லை என்பதுதான் உண்மை . பரிணாம மாற்றங்கள் அவர்களுக்கு சுமையாயின .

உடலின் ஆயுளை நீடித்த வேதியியல் விஞ்ஞானம் , உடலை காட்சி பொருளாக மட்டுமே வைக்க உதவியது .

சமீபத்தில் சந்தித்த அவருடைய 70 வயதை கடந்த நண்பர் கூறினாராம்..” ஒரு வயதுக்கு மேல் வாழும்போது ,நம் அடுத்த தலைமுறை துன்பங்களையும் சேர்ந்து தாங்க வேண்டியுள்ளது, ஆதலால், உரிய வயதில் மரணம் என்பது சுகம் ” என்றாராம் …

நண்பர் கூறியதில் உண்மைகள் பளிச்சிட்டன.

editor@tamilagamtimes.com