இணையதளத்தை மூலதனமாகப் பயன்படுத்தி மக்களை மோசடி செய்யும் கும்பல்..

பொருள்களை விற்க பல வழிகள் இருந்தாலும் தற்போது பிரபலமாக இருப்பது, ‘எதுவா இருந்தாலும் வித்துடுங்க…’ என்று அறிமுகமாகும் வாசகத்துடன்கூடிய ஓர் இணையதள முகவரி கொண்ட விளம்பரம். அந்த விளம்பர முகவரி கொண்ட இணையதளத்தை மூலதனமாகப் பயன்படுத்தி மக்களை மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து இருக்கிறது தமிழகத்தில்..!

சென்னையில் பிரபல கல்லூரியில் படிக்கும் சரவணன், (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகைப்படம் எடுப்பதில் ஆர்வம்கொண்டவர். சில வருடங்களாக கேமரா ஒன்றை வாங்கி அதில் கற்றுத் தேர்ந்திருக்கிறார். இன்னும் சிறப்பாகப் புகைப்படங்கள் எடுக்க புதிய கேமரா வாங்க திட்டமிட்டிருக்கிறார். அப்போதுதான் தன் நண்பர்கள் மூலம் அந்த விற்பனை இணையதளம் தெரியவந்திருக்கிறது. அதில் தன்னுடைய கேமரா குறித்த தகவல்கள், விலை, தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் என எல்லாவற்றையும் அந்த இணையதளத்தில் பதிந்திருக்கிறார். சில மணி நேரத்தில் அவருக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து போன் வந்திருக்கிறது. அதில் பேசியவர், தன் பெயர் பின்னி என்று சொல்லி இருக்கிறார். ‘நானும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஊடகம் சார்ந்த துறையில் பணிபுரிகிறேன். பணி சார்ந்த வேலைகளுக்கு கேமரா வாங்க வேண்டியிருப்பதால், புதிதாக வாங்கலாம் என்று இருந்தேன். ஆனால், எனக்குத் தேவைப்படும் கேமராவை நீங்கள் குறைந்த விலையில் விற்க இருப்பதால் அதனை வாங்கலாம் என்று இருக்கிறேன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். பின்பு கேமராவை பார்க்க வேண்டும் என்று சொல்லி ஈக்காட்டுத்தாங்கல் அருகே ஓர் இடத்துக்கு அழைத்திருக்கிறார் பின்னி. சரவணனும் அவரது பேச்சை நம்பி அங்கு சென்றபோது, மீண்டும் வேறு ஓர் எண்ணில் இருந்து அழைத்து மற்றோர் இடத்துக்கு வரச்சொல்லி குறிப்பிட்டிருக்கிறார். அந்த இடத்துக்குச் சென்ற சரவணனை சந்தித்து இருக்கிறார் பின்னி. கேமராவை பார்த்துவிட்டு வாங்கிக்கொள்வதாக சொன்னார். அதை நம்பி, சரவணனும் கொடுத்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரைத் தாக்கிய பின்னி, பக்கத்தில் இரு சக்கரவாகனத்தில் தயாராக ஹெல்மட் அணிந்திருந்த அவரது நண்பரின் வண்டியில் ஏறி தப்பித்துவிட்டார். என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் கேமரா பறிபோயிருந்தது. பறிபோன சரவணனின் கேமரா விலை 70,000 ரூபாய். தற்போது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் சரவணன்.

இது சம்பந்தமாக காவல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ”இந்த மாதிரி பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடப்பதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. தற்போது எல்லா வகையான தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் மனிதர்கள் அதிகரித்து வருகிறார்கள். இவை எந்த அளவுக்கு மக்களின் வேலைகளை எளிமைப்படுத்துகிறதோ அதே அளவுக்குத் தவறானவர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. வங்கி மோசடி, ஈமெயில் ஃப்ராடுபோல இதுவும் பரவி வருகிறது. இதுபோன்ற விற்பனை இணையதளங்களில் பதிவிடும்போது கவனமாக இருக்கவேண்டும். இது திருடுபவர்களுக்கு எந்தப் பொருள், எங்கு இருக்கிறது என்பதை நாமாகவே தெரிவிப்பதைப் போன்றது” என்றார்.

உஷாராக இருக்க வேண்டிய காலம் இது..!

சேலத்தில் விற்பனைப் பிரதிநிதியாக இருப்பவர் சுரேஷ். அவர் அலுவலகப் பணிக்காக புதிதாக ஒரு போன் வாங்க எண்ணி இணையத்தை மேய்ந்துகொண்டிருந்தபோது, அவரது கண்ணில் பட்டது விற்பனை விளம்பர இணையதளம். அதில், தான் வாங்க நினைத்திருந்த போன் குறைந்த விலையில் இருப்பதைப் பார்த்து ஆசைப்பட்டு, அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டார் சுரேஷ். அந்த போனின் உரிமையாளர் திருநெல்வேலியில் இருப்பதாக தெரியவே, தொடர்ந்து அவரிடம் பேசி எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு அந்த நபரின் வங்கிக் கணக்கில் 10,000 ரூபாய் பணத்தை டெபாஸிட் செய்தார். அடுத்த நாளே சுரேஷின் வீட்டுக்கு வந்தது ஒரு பார்சல். சந்தோஷமாக அதனை பிரித்துப் பார்த்தால் அதிர்ச்சி. காரணம்… உள்ளே இருந்தது ஒரு செங்கல்கட்டி! தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்தக் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அந்த வங்கிக்கணக்கில் இருந்த பணமும் எடுக்கப்பட்டிருந்தது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறார் சுரேஷ்.

உஷார் மக்களே! உஷார்!!