இத்தாலியில் டிஸைன்…சீனாவில் தயாரிப்பு…இந்தியாவில் பெனல்லி!

இந்தியாவில் DSK மோட்டோவீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, புதிய பைக்குகளை பெனெல்லி நிறுவனம் அறிமுகப்படுத்தியதில் முக்கியமானது, TNT 300 பைக். இத்தாலியில் டிஸைன் செய்யப்பட்டு, சீனாவில் தயாரிக்கப்படும் இந்த பைக், இந்தியச் சாலைகளில் எப்படி இருக்கிறது?

டிஸைன்

பெனெல்லி நிறுவனம், அழகான மோட்டார் சைக்கிள் டிஸைன்களுக்குப் புகழ்பெற்றது. அதன் பெயரைக் காப்பாற்றும் விதத்தில் TNT 300 பைக்கையும் வடிவமைத்திருக்கிறார்கள். இதன் கம்பீரமான வளைவுகள், ஒரு பக்கா இத்தாலியன் டிஸைன் என்பதைக் காட்டுகின்றன. கேடிஎம் 390 டியூக் போல, ஓவர் ஸ்போர்ட்டியாக இல்லாமல், யூத்ஃபுல்லாக இருந்தாலும், ஒரு பக்குவமான டிஸைனைக் கொண்டுள்ளது TNT 300. நாம் டெஸ்ட் செய்த கறுப்பு வண்ண மாடலில், சிவப்பு லைன்கள் அளவோடு பயன்படுத்தப்பட்டிருப்பது அழகாக இருக்கிறது. ஹெட்லைட்ஸ் டிஸைன் கச்சிதம். அலாய் பூசப்பட்ட கன்ட்ரோல் லீவர்கள், பயன்படுத்த நன்றாக இருக்கின்றன. பிரேக் லீவருக்கு 4-வே ரீச் அட்ஜஸ்ட்மென்ட் உண்டு. சுவிட்ச் கியர்கள் தரமாக இருக்கின்றன. டேஞ்சர் லைட்டும், பாஸ் லைட்டும் உள்ளன. டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் அனலாக் டேக்கோ மீட்டர், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், கடிகாரம், டிரிப் மீட்டர், ஃப்யூல் மீட்டர் ஆகியவை அடங்கியுள்ளன. ஆனால், இன்னும் ஸ்மார்ட் டிஸைனில் கொடுத்திருக்கலாம்.

16 லிட்டர் ஃப்யூல் டேங்க், நல்ல வடிவமைப்பைக் கொண்டுள்ளது. டேங்குக்குக் கீழே, பளீர் சிவப்பு வண்ண ட்ரெல்லிஸ் ஃப்ரேம், செம ஸ்டைல். மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கலரும் சூப்பர். பைக்கின் பின்புற டிஸைன் சிம்பிளாக இருந்தாலும், ரசிக்கும்படி உள்ளது.

பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாகங்கள் தரமானவை. பெயின்ட் குவாலிட்டியும் சூப்பர்!

இன்ஜின், கியர்பாக்ஸ், பெர்ஃபாமென்ஸ்

பெனெல்லியின் TNT 300 பைக்கில் இருப்பது 300சிசி, லிக்விட் கூல்டு ஃப்யூல் இன்ஜெக்டட், பேரலல் ட்வின் சிலிண்டர், ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜின். 11,500 ஆர்பிஎம்-ல் 36.2 bhp சக்தியையும், 9,000 ஆர்பிஎம்-ல் 2.75 kgm டார்க்கையும் அளிக்கிறது. குறைந்த ஆர்பிஎம்-ல் டார்க் டெலிவரி சிறப்பாக இருப்பதால், டிராஃபிக் நெரிசலில் ஓட்ட எளிதாக இருக்கிறது. கிளட்ச் எதிர்பார்த்ததைவிட சற்று டைட்தான். கியர்பாக்ஸ் ஷிஃப்டிங் செம ஸ்மூத். சிட்டியைத் தாண்டி நெடுஞ்சாலையிலும் சீரான வேகத்தில் க்ரூஸ் செய்து ஓட்டும்போது, இன்ஜின் திணறவில்லை.

0-60 கி.மீ வேகத்தை 3.41 விநாடிகளில் கடந்தது TNT 300. அதற்கு மேல் 100 கி.மீ வேகத்தை அடைய 8.38 விநாடிகள் ஆகிறது. அதிகபட்ச வேகமாக, மணிக்கு 154 கி.மீ வேகம் வரை TNT 300 பைக்கைச் செலுத்த முடிகிறது.


ஓட்டுதல் மற்றும் கையாளுமை ஸ்போர்ட்டியாக இருந்தாலும், நேராக அமர்ந்துகொள்ளும்படியான ரைடிங் பொசிஷனைக்கொண்டுள்ளது TNT 300. இருக்கை சொகுசாக இருப்பதால், இது ஒரு நல்ல டூரிங் பைக் என்றும் சொல்லலாம். முன்பக்கம் 41 மிமீ அப்-ஸைட் டவுன் ஃபோர்க்ஸ், பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது இந்த பெனெல்லி. மோசமான மேடு பள்ளங்களை அலட்டிக்கொள்ளாமல் தாங்கிக்கொள்கிறது இந்த சஸ்பென்ஷன் செட் அப். வளைவுகளிலும் ஸ்டேபிளாக இருக்கிறது. ஓட்டுதல் தரம் சொகுசாக இருந்தாலும், கொஞ்சம் ஸ்போர்ட்டியாக இருப்பது ப்ளஸ். பைரலியின் ட்யூப்லெஸ் ரேடியல் டயர்கள், நல்ல க்ரிப் அளிக்கின்றன.
முன்பக்கம் 260 மிமீ பெட்டல் டிஸ்க்குகளும், பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் நல்ல ஃபீட்பேக் கொடுக்கின்றன. ஆனால், ஏபிஎஸ் இல்லாதது பெரிய மைனஸ். மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சென்று சட்டென பிரேக் அடித்தால், பைக் 14.58 மீட்டர் தாண்டி முழுமையாக நிற்கிறது.

மைலேஜ்

சிட்டியில் லிட்டருக்கு 26.6 கி.மீ, நெடுஞ்சாலையில் 29.3 கி.மீ மைலேஜும் அளிக்கிறது TNT 300.


300 சிசி பைக்தான் என்றாலும், TNT 300 பார்ப்பதற்கு ஒரு செக்மென்ட் மேலே உள்ள பைக்காகத் தோற்றமளிக்கிறது. இத்தாலி டிஸைன் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. சிட்டியிலும், நெடுஞ்சாலையிலும் திணறாமல் ஓடக்கூடிய இன்ஜின் சூப்பர். எக்ஸாஸ்ட் சத்தமும் கச்சிதம். நல்ல சஸ்பென்ஷன், ஸ்ட்ராங்கான பிரேக்ஸ் இருந்தாலும், ஏபிஎஸ் கொடுக்காதது மிகப் பெரிய மைனஸ். 3 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வந்தால், பெனல்லிக்கு புக்கிங் குவியும்.