இன்னொரு சுஜாதா இன்றைய தேவை ….

அடிப்படை கல்வி பெறாதவருக்கு கூட புரியும்படியாக செயற்கை கோள் பற்றி சொல்லும்போதே , அடுத்த வீட்டு பெண்ணோடு நமக்கு காதல் உருவாகி நம் மனம் செயற்கை கோளாக பறப்பதை ஒப்பிட்டு விளக்குவார் எழுத்தாளர் சுஜாதா. நமக்கு செயற்கை கோள் உடனடியாக புரியும்.

ஆக, எதையும் ஒருவருக்கு தெரிந்த உதாரணங்களோடு விளக்கினால் எளிமையாக புரியும் என்ற எளிய அணுகுமுறை எழுத்தாளர் சுஜாதாவின் மொழியியல் எழுத்து ஆளுமை.

கூடங்குளத்தில் அணு உலை அமைப்பது தொடர்பாக அரசுக்கும் – அந்த பகுதியில் வாழும் மக்களுக்கும் இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு களம் நாளுக்கு நாள் தன் சுயதன்மை இழந்து எந்த கருத்தும் பதிவு செய்ய இயலாத அஞ்ஞான களமாகிவிட்டது.

அறிவியலை எளிமையாக்கி – அச்சம் அகற்றி – வாழ்வாதார பயங்களை போக்க வேண்டிய அரசாங்கம் போராட்டக்காரருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அந்த அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சட்டத்திற்கு புறம்பான வழியில் பணம் ஈட்டுகிறார் என ஒரு வாதத்திற்காக ஏற்று கொண்டாலும், அதற்கும் அணு உலை பாதுகாப்பிற்கும் என்ன சம்பந்தம் ?

மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி – சிதம்பரம் போன்றோர் அணு உலை பாதுகாப்பு சம்பந்தமாக மக்களுக்கு விளக்குவதற்கு,  அவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய – அவர்களோடு சமான்யமாக பேசக்கூடிய ஒரு நபரை நியமித்து பேச வைக்காமல் – அணு உலை எதிர்ப்பு குழுவையே நிர்மூலமாக்கும் செயலை செய்வது பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிரதிநிதிகளான இவர்கள் பதவிக்கு உகந்த செயல் அல்ல. அது எதிர் மறை விளைவுகளையே விளைவிக்கும் .

‘தின மலர்’ போன்ற வெகுஜன பத்திரிகைகள், அணு பகுப்பாய்வு குறித்த எந்த ஞானமும் இல்லாமல் அணு உலை எதிர்ப்பு குழுவினரை மட்டுமே தரக்குறைவான விமர்சனங்களால் தாக்குவதும் – தமிழ் நாட்டில் நிலவும் மின்பற்றாகுறைக்கு இவர்கள்தான் காரணம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதும் தரம் தாழ்ந்த – மலிவான வணிக உத்தி . கூடங்குளம் அணு உலை விசயத்தில் ‘தின மலர்’ போன்ற பத்திரிகைகளின் செயல்பாடுகளால் அந்த விசயம் பெரும்பின்னடைவு சந்திக்கிறது.

அணுவை பிளந்தால் என்னாகும் – அதன் சக்தியை கொண்டு நாம் எப்படி மின்சாரம் தயாரிக்கலாம் – அது எப்படி சுற்றுப்புறத்தை பாதிக்கும் என்பதெல்லாம் அந்த பகுதி வாழ் மக்களுக்கு தெரியவில்லை. ஏன் விஞ்ஞானிகளை தவிர யாருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை . அதை புரிய வைக்க மக்களோடு பரிச்சயமான தலைமை தேவை .

பூர்வீக குடிகளின் இடம் பெயரும் வலியின் முன்னால் அறிவியல் விளக்கங்கள் புரியவைப்பதற்கு சில காலம் அவகாசம் தேவை என்பது கள உண்மை .

வாக்கு பதிவு இயந்திரம் குறித்து உள்நோக்கங்களோடு அடிக்கடி சந்தேகம் எழுப்பிய அரசியல்வாதிகளுக்கு எல்லாம் புரியும்படியாக விளக்கமளித்த சுஜாதா போன்ற ஒருவர் இப்போது கூடங்குளம் அணு உலை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க தேவை .

editor@tamilagamtimes.com