இலங்கை இறுதிப்போர்: சசிதரனை சரணடைய சொன்னாரா கனிமொழி?

சென்னை/யாழ்ப்பாணம்: முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலன் சசிதரனை சரணடைய தூண்டியது தாம்தான் என்ற குற்றச்சாட்டை திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திரிகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளரான எழிலன் சசிதரன், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், ஆனால் சரணடைந்த பின்னர் அவரை காணவில்லை என்றும், எனவே தனது கணவரை கண்டுபிடித்து தருமாறும் இலங்கை அரசை சசிதரனின் மனைவி ஆனந்தி வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் அவ்வபோது போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார். மேலும் இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இறுதிப்போரின்போது, தனது கணவரை சரணடைய தூண்டியது கனிமொழிதான் என்று ஆனந்தி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். சரணடைவதற்கு முன்னதாக திமுக எம்.பி. கனிமொழியுடன், சசிதரன் சேட்டிலைட் போனில் பேசியதாகவும் பேட்டி ஒன்றில் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தம்மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கனிமொழி எம்.பி., விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலன் சசிதரனை யார் என்றே தனக்குத் தெரியாது என்றும், அவரை சரணடையுமாறு தான் கூறவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்திய அரசின் சார்பிலோ அல்லது இலங்கை அரசின் சார்பிலோ யாரையும் சரணடையச் சொல்லும் உரிமை தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் ஈழத்தமிழர்களிடையே பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பி உள்ளது.