இளைஞர்களின் கனவுகளை நிஜமாக்கும் ஃபைனான்ஷியல் பிளானிங்!

ருங்காலத்தில், சரியான தருணங்களில், தேவையான அளவு பணம் நம் கையை வந்தடைய செய்வதுதான் நிதித் திட்டத்தின் முக்கிய நோக்கம்!

இரண்டு நண்பர்கள் ஒரு காட்டுக்கு பிக்னிக் சென்றார்கள். அதிகத் தூரம் நடந்ததால் களைப்படைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு புலியின் உறுமல் கேட்டது. ஒருவன் உடனே எழுந்து ஓடத் தொடங்கினான். ஆனால், இன்னொருவனோ பக்கத்தில் கிடந்த ஷூவை அணியத் தொடங்கி னான். இதைக் கண்ட நண்பனோ, ‘‘முட்டாளே, நீ ஷூவை அணிந்தாலும்கூட உன்னால் புலியைக் காட்டிலும் வேகமாக ஓடமுடியாது’’ என்று கத்திக்கொண்டே வேகமாக ஓடினான். ஆனால், அவனோ, ‘‘நான் புலியைவிட வேகமாக ஓடத் தேவையில்லை. ஆனால், உன்னைவிடக் கண்டிப் பாக வேகமாக ஓடியே தீரவேண்டும்’’ என்றானாம்.

நம் வாழ்க்கையில் வரும் ‘மாற்றங்கள்’தான் ‘புலி’. இந்த மாற்றங்களைச் சமாளிக்க நமக்குச் சரியான உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் ‘தனிநபர் நிதித் திட்டமிடல்’ (Financial Planning). இது நம் குடும்பத்தின் நிதி நிலைமையைச் சீராக்கி, பாதுகாக்கும் முக்கியப் பங்கை வகுக்கிறது.

நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் பலவிதமான கனவுகள் இருக்கும். சொந்த வீடு, வாகனம், குழந்தைகளின் உயர்கல்வி, குழந்தைகளின் திருமணம், சொந்த பிசினஸ், நிம்மதியான பணி ஓய்வுக்காலம் என்று பலவிதமான கனவுகள் இருக்கும். இந்தக் கனவுகளை நிஜமாக்க வேண்டுமென்றால் நாம் முன்கூட்டியே திட்ட மிட்டு, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையின் வருங்கால நிதி இலக்குகளை அடைய வழிமுறைகளை வகுப்பதுதான் ‘தனிநபர் நிதித் திட்டமிடல்.’ நமது வருங்காலத்தில், சரியான தருணங்களில், தேவையான அளவு பணம் நம் கையை வந்தடைய செய்வதுதான் நிதித் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

நிதித் திட்டமிடல் – செயல்முறை:

நிலை 1 : உங்கள் வாழ்க்கையின் வருங்கால நிதி இலக்குகள் (Financial Goals) என்னென்ன?

நிலை 2: இந்த ஒவ்வொரு இலக்குகளையும் நிறைவேற்ற உங்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தொகை எவ்வளவு?

நிலை 3: உங்களுடைய தற்போதைய நிதி நிலையைப் புரிந்துகொள்வது.

நிலை 4: உங்கள் இலக்குகளை அடைய நல்ல முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்துச் செயல்முறைபடுத்துவது.

நிலை 5: இந்தத் திட்டங்களைக் கண்காணித்து, தேவைப்படும்போது மாற்றங்களை ஏற்படுத்துவது.

இனி இந்த நிலைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாக எடுத்துச் சொல்கிறேன்.

நிலை 1:   வருங்கால நிதி இலக்குகள்!

உங்கள் நிதி இலக்குகளை இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒன்று, அடிப்படை தேவைகள். மற்றொன்று, இதர தேவைகள். முதலில் அடிப்படை தேவைகளைப் பூர்த்திச் செய்யத் திட்டமிட்ட பிறகே இதர தேவை களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

அடிப்படை தேவைகள்:

1. அவசர கால நிதி (Emergency Fund), 2. ஆயுள் காப்பீடு, 3. உடல்நலக் காப்பீடு, 4. சொந்த வீடு, 5. பிள்ளைகளின் உயர்கல்வி, 6. பிள்ளைகளின் திருமணம், 7. நிம்மதியான பணி ஓய்வுக்காலம்.

இதர தேவைகள்:

எலெக்ட்ரானிக் உபகரணங்கள், சொகுசு கார், சுற்றுலா பயணங்கள், தங்க, வைர நகைகள், விலை மதிப்புள்ள வீட்டு உபகரணச் சாதனங்கள், மலைவாசஸ்தலத்தில் சொந்த வீடு.

மேலே குறிப்பிட்ட தேவைகள் எல்லாம் எல்லோருக்கும் பொதுவானவை. இந்தத் தேவைகள்தான் உங்கள் நிதி இலக்குகள். உங்களது ஒவ்வொரு நிதி இலக்குகளையும் ஒரு புத்தகத்தில் பட்டியல் இடவும். அத்துடன் ஒவ்வொரு இலக்கு களையும் அடைய எவ்வளவு தொகை தேவைப் படும், எத்தனை வருடம் கழித்து அந்தத் தொகை தேவைப்படும் என்பதையும் குறித்துக் கொள்ளவும்.

ஐந்து ஆண்டுகளுக்குள் அடைய வேண்டிய இலக்குகளை ‘குறுகியகால இலக்குகள் (Short term goals) என்றும், அதற்கு மேல் ஆகும்  இலக்குகளை ‘நீண்ட கால இலக்குகள் (Long term goals) என்றும் பிரிக்கலாம். குறுகிய கால இலக்குகளை அடைய ரிஸ்க் இல்லாத முதலீடுகளையும், நீண்ட கால இலக்குகளை அடைய பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ரிஸ்க் உள்ள முதலீடுகளையும் நாடலாம்.

நிலை 2: எதிர்காலத்தில் தேவைப்படும் தொகை!

நம் இலக்குகளை இன்றைக்கு நிறைவேற்ற வேண்டுமெனில் எவ்வளவு தொகை இப்போது தேவைப்படும் என்று நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்தத் தொகையை வைத்து எதிர்காலத்தில் தேவைப்படும் தொகையை நிர்ணயிக்க முடியும். உதாரணத்துக்கு, உங்கள் இலக்கு உங்கள் மகனை ஒரு பொறியாளர் ஆக்குவது. அதற்கு இன்றைய தேதியில் ரூ.8 லட்சம்  தேவை என்று வைத்துக்கொள்வோம். உங்கள் மகன் பொறியாளர் படிப்பு படிக்க இன்னும் 15 வருடங்கள் உள்ளன. இந்த 15 வருடங்களுக்குப் பிறகு பொறியியல் படிப்புக் கட்டணம் எவ்வளவு ஆக உயர்ந்திருக்கும் என்று கண்டுபிடிக்க வேண்டும். நம் நாட்டின் சராசரி வருட பணவீக்கம் எவ்வளவு என்று கண்டுபிடித்து, அதன் அடிப்படையில் இன்றைய ரூ.8 லட்சம், 15 ஆண்டு்களுக்குப்பிறகு எவ்வளவாக இருக்கும் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

உதாரணமாக, சராசரி பணவீக்கம் வருடத்துக்கு 8% என்று வைத்துக் கொண்டால், 15 வருடங்கள் கழித்துப் பொறியியல் படிப்புக்கான கட்டணம் ரூ.25 லட்சம் உயர்ந்திருக்கும். இதுபோல, உங்களின் எல்லா இலக்குகளுக்கும் எதிர்காலத்தில் தேவைப்படும் தொகைகளைக் கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நிலை 3:  தற்போதைய நிதி நிலை!

இதுவரை நீங்கள் உங்களது வாழ்க்கையின் இலக்குகளைக் கண்டுகொண்டுவிட்டீர்கள். எதிர்காலத்தில் தேவைப்படும் தொகையையும் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது உங்களுடைய தற்போதைய நிதி நிலையைச் சிறிது அலசுவோம்.
உங்களது மாத வருமானம் எவ்வளவு, உங்களது மாத செலவு எவ்வளவு, உங்களது மாத சேமிப்பு எவ்வளவு, உங்களின் சொத்து மதிப்பு இன்றைய தேதியில் எவ்வளவு, நீங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு, உங்களின் தற்போதைய நிகர மதிப்பு எவ்வளவு என்கிற  கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டுபிடித்து விட்டால், இன்றைய தேதியில் உங்கள் நிதிநிலை என்னவென்று அறிந்து, அதைச் சீராக்கினால், உங்கள் நிதி இலக்குகளை சுலபமாக எட்ட முடியும். (பார்க்க: முன்பக்க அட்டவணை)

உங்களின் நிகர மதிப்புப் பாசிட்டிவ்-ஆக இருந்தால் நல்லது. ஆனால், பலருக்கும் இது நெகட்டிவ்-ஆக இருக்கும். ஆனால், கவலைப்படத் தேவையில்லை. 30 முதல் 50 வயது வரையான காலகட்டத்தில்தான் நாம் சொத்து சேர்க்கும் வழிகளில் ஈடுபடுகிறோம். அதனால் வீடு வாங்க கடன் மற்றும் சில கடன்களை வாங்குவது சரியான உத்திதான். இந்தக் காரணங்களால் உங்கள் நிகர மதிப்பு நெகட்டிவ்-ஆக இருந்தால் தவறு ஒன்றுமில்லை.

அடுத்தபடியாக, மாதாந்திர வரவு, செலவு திட்டத்தை (monthly budget) பார்ப்போம். மாதம் உங்களுடைய வரவு எவ்வளவு, அதில் செலவு எவ்வளவு எனத் தெரிந்தால், என்னென்ன வழிகளில் செலவுகளைக் குறைத்து, மாத சேமிப்பை அதிகபடுத்த முடியும் என்று கண்டுபிடிக்கலாம். உங்களின் மாத செலவுகளைப் பின்வருமாறு பிரித்துக் கொள்ளுங்கள்.

1.  தவிர்க்க முடியாத, நிலையான செலவுகள்!

உதாரணங்கள் – வீட்டுக் கடன்  இஎம்ஐ, அல்லது வீட்டு வாடகை, பள்ளிக்கூடக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, காப்பீட்டு பிரீமியம் போன்றவை.

2. தவிர்க்க முடியாத மாறுபடும் செலவுகள்!

மளிகை பொருட்களின் செலவு, மருத்துவச் செலவுகள், துணிமணி செலவுகள், டெலிபோன் செலவுகள் போன்றவைகள்.

3. இதர நிலையான செலவுகள்!

கிளப் உறுப்பினர் கட்டணங்கள் போன்றவை.

4. இதர மாறுபடும் செலவுகள்!

சினிமா, ஹோட்டல் செலவுகள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குச் செலவுகள்.

இந்த அட்டவணையை நீங்கள் தயாரித்த உடனேயே, யாருடைய உதவியும் இல்லாமலே, எங்கெல்லாம் உங்கள் செலவுகளைக் குறைக்க முடியும் என்று உங்களாலேயே சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். செலவுகளைக் குறைத்துச் சேமிப்பை அதிகமாக்கும் வழிகளைக் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தவும்.

நிலை 4: நல்ல முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது!

இதுவரையில் நீங்கள் உங்கள் இலக்குகளைத் தீர்மானித்துவிட்டீர்கள். அதற்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தொகையையும் கணக்கீடு செய்தீர்கள். உங்களுடைய நிகர மதிப்பையும், வரவு செலவு அட்டவணையையும் தயாரித்துவிட்டீர்கள். செலவைக் குறைத்து மாத சேமிப்பையும் அதிகரித்துவிட்டீர்கள். இப்போது நாம் திட்டமிட வேண்டியது, எங்கு, எவ்வாறு முதலீடு செய்வது என்பதாகும்.

உங்கள் குறுகிய கால, நீண்ட கால இலக்குகளை அடைய வெவ்வேறு முதலீட்டு திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் மாத சேமிப்புத் தொகை ரூ.20,000 என்று வைத்துக் கொள்வோம். இந்தத் தொகையில் ரூ.10,000 குறுகிய கால இலக்குகளுக்கும், மீதி உள்ள ரூ.10,000 நீண்டகால இலக்குகளுக்குமாகப் பிரித்துக் கொள்ளலாம். நமக்கு ஐந்து நீண்ட கால இலக்குகள் இருக்குமானால், இந்த ரூ.10,000-த்தை ஐந்தாகப் பிரித்துக் கொண்டு ஐந்து வகையாக முதலீடு செய்யலாம்.

குறுகிய கால இலக்குகளை அடைய வங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். நாம் இதற்குமுன் கண்ட உதாரணத்தில் உங்கள் மகனின் உயர் கல்விக்கு 15 வருடம் கழித்து, 25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்தத் தொகையை அடைய மாதம் நாம் எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan – SIP) வழியாக ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளீர்கள். இந்த முதலீட்டின் மூலம் சராசரியாக வருடத்துக்கு 18% லாபம் கிடைக்கும் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மாதம் எவ்வளவு தொகை முதலீடு செய்தால், 15 வருடம் கழித்து ரூ.25 லட்சம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட பல வழிமுறைகளும், ஃபார்முலாக்களும் உள்ளன. 15 வருடத்துக்குப் பிறகு ரூ.25 லட்சம் கிடைக்க மாதம் ரூ.2,800 முதலீடு செய்தாலே போதுமானது. இதுபோல ஒவ்வொரு இலக்குகளுக்கும் தனித்தனியே கணக்கிட்டு, நம் சேமிப்பு தொகையைப் பிரித்துக் கொண்டு தனித்தனியே முதலீடு செய்ய வேண்டும்.

நிலை 5:  நிதித் திட்டங்களைக்  கண்காணித்து,  மாற்றங்களை ஏற்படுத்துவது!

நம் தேவைகள் மற்றும் இலக்குகள் நம் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் மாறுவது இயற்கையே. அதற்குத் தகுந்தாற்போல் நம்முடைய திட்டங்களையும் மாற்ற வேண்டும். ஒவ்வொரு புதுவருட கொண்டாட்டங்கள் முடிந்ததும், முதல் வேலையாக நம்முடைய நிதித் திட்டங்களைப் பார்வையிட வேண்டும். குடும்பத்தில் ஒரு புதிய குழந்தை பிறந்திருக்கலாம். குடும்பத் தலைவருக்குச் சம்பள உயர்வு கிடைத்திருக்கலாம். இதுபோல, பல மாற்றங்கள் குடும்பத்தில் நடந்திருக்கலாம். இதற்கெல்லாம் ஏற்றதுபோல் சிறிய மாற்றங்களை நம் திட்டங்களில் செய்வது மிகவும் நல்லது.

நம் நிதித் திட்டங்கள் விரிவானதாக இருக்க வேண்டும், ஒரு குடும்பத்தின் எல்லாத் தேவை களையும் பூர்த்திச் செய்வதாக அது இருக்க வேண்டும். பொதுவான எல்லாக் குடும்பத்தினர் களுடைய முக்கியத் தேவைகளை வரிசை வாரியாகக் கீழே பட்டியல் இட்டிருக்கிறேன்.

1. குடும்பத்தின் மொத்த தேவைகளைக் கணக்கில் எடுத்து அதற்குரிய தொகைக்கு ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பது, 2. குடும்பத்தினரின் உடல்நலக் காப்பீடுத் திட்டம், 3. அவசர நிதி தொகையை உருவாக்கும் திட்டம், 4. குறுகிய, நீண்ட கால இலக்குகளை அடைய சொத்துகளை உருவாக்கும் திட்டங்கள், 5. குழந்தைகளின் உயர் கல்விக்குப் பணம் சேர்க்கும் திட்டம், 6. குழந்தைகளின் திருமணச் செலவுக்குப் பணம் சேர்க்கும் திட்டம், 7. ஓய்வு காலத்தில் நிம்மதியான வாழ்க்கையை அமைக்கத் தேவைப்படும் தொகையைச் சேர்க்கும் திட்டம்.

இறுதியாக, நமது அன்றாட வாழ்க்கை முறையில் ஒரு சிறிய திருத்தத்தைக் கொண்டு வந்தால், நமது நிதி இலக்குகளைச் சுலபமாக அடைய முடியும். பெரும்பாலான குடும்பங்களில் மாதச் செலவு போக பாக்கி பணம் ஏதேனும் இருந்தால், அதைச் சேமிப்பார்கள். பெரும்பாலான மாதங்களில் சேமிக்கப் பாக்கி பணம் இருப்பதில்லை. இந்த நிலையை மாற்ற, சேமிப்பை ஒரு கட்டாயச் செலவாக எடுத்துக் கொண்டு, மாத சம்பளம் வந்த உடனேயே ஒரு தொகையைச் சேமிப்பிற்காக எடுத்துக் கொண்டு, மீதமுள்ள தொகையைச் செலவு செய்தால், மாதாமாதம் ஒரு நல்ல தொகையைச் சேமிக்க முடியும். இந்த வழிமுறை உங்களின் நிதி இலக்குகளைச் சீக்கிரம் எட்டிவிட வழி வகுக்கும்.

உங்களின் பிஸியான வாழ்க்கையிலிருந்து இரண்டு மணிநேரம் விடுப்பு எடுத்து, உங்களின் மொபைல் போனை அணைத்துவிட்டு, உங்கள் மனைவியுடன் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல நிதித் திட்டத்தைத் தயாரித்துக்கொண்டு, உங்கள் வாழ்க்கையை எதிர்கொண்டால், வெற்றி நிச்சயம்!

இ-காமர்ஸில் கைவினைப் பொருட்கள்!

தமிழகத்தில் தயாராகும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது ஸ்நாப்டீல். பூம்புகார் என்கிற பெயரிலேயே ஸ்நாப்டீலிலும் விற்பனை செய்யப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இனி கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை இந்த இ-காமர்ஸ் நிறுவனத்தின் வலைதளம் மூலம் எளிதில் காட்சிக்கு வைக்கலாம் என்று சொல்லி இருக்கிறார் தமிழக கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் சந்தோஷ் பாபு. ஏழைக் கலைஞர்களுக்கு நல்ல விலை கிடைக்கட்டும்!