இவர்கள் எல்லாம் எப்படி வேலை தேடினார்கள்..? இவர்களுக்கு மட்டும் எப்படி வேலை கிடைத்தது..?

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம். எப்போதும் நிரம்பி வழிகிற கூட்டம்.
வார இறுதியில், அல்லது, சேர்ந்தாற்போல் சில நாட்கள் விடுமுறை வந்து விட்டால்…,
‘அப்பப்பா.. எங்க இருந்துதான் இவ்வளவு கூட்டம் வருமோ..’ பஸ்ஸுல சீட் கிடைக்கிறது பெரும் பாடால்ல இருக்குது..?’
ஒரு விஷயம் கவனித்தீர்களா..? மன்னிக்கவும். தவறாகக் கேட்டு விட்டேன். அது எப்படி கவனிக்காமல் இருந்திருக்க  முடியும்..? வந்து குவிகிற கூட்டத்தில், பெரும்பாலானவர்கள், இளம் பெண்கள்!

ஏதோ ஒரு ‘ஊர் பேர் தெரியாத’ தெரியாத இடத்தில் இருந்து, அநேகமாக தனியாகவே சென்னைக்கு வந்து, குறைந்த வாடகை ‘ஹாஸ்டல் ரூம்’ எடுத்துத் தங்கி, முழுக்க முழுக்க சொந்த முயற்சியினால் வேலை தேடி, வாழ்க்கையில்  ‘செட்டில்’ ஆனவர்கள்தாம் இவர்கள் எல்லாரும்.
‘நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வை’ கொண்ட பாரதிப் பெண்கள் இவர்கள்.
முதுகிலே ஒரு பயணியர் பை ((‘ட்ராவலர்ஸ் பேக்’), ஒரு கையில் தண்ணீர் பாட்டில், மறு கையில், படிப்பதற்கு சிறிய புத்தகத்துடன், காதில் செருகிய ‘வாக்மேன்’இல் இசையை ரசித்தபடி, இவர்கள் நடந்து வருகிற தோரணையே, ‘தன்னம்பிக்கை’ என்றால் இதுதான் என்று பறை சாற்றும்.
இவர்கள் எல்லாம் எப்படி வேலை தேடினார்கள்..? இவர்களுக்கு மட்டும் எப்படி வேலை கிடைத்தது..?
பணம் கொடுத்தா வேலை பெற்றார்கள்..? யாரிடமாவது பரிந்துரைக் கடிதம் வாங்கிக் கொண்டா, சென்னைக்கு பஸ்  பிடித்தார்கள்..? இன்றும் கூட, கோயம்பேட்டில் நின்று பார்த்தால், வெளியூரில் இருந்து வரும் ஒவ்வொரு பேருந்திலும்,  ஓரிரு இளம் பெண்கள், எதிர் காலக் கனவுகளைச் சுமந்தபடி, சென்னைக்கு வந்து இறங்குவதைக் காண முடிகிறதே…
என்ன ‘தைரியத்தில்’ வருகிறார்கள்..? இவர்களின் ‘மோடஸ் ஆபரன்டி’தான் என்ன..?
தன்னம்பிக்கை, துல்லியமான திட்டமிடல் மற்றும் கடுமையான உழைப்பு. இம்மூன்றின் கலவைதாம் இப்பெண்கள்.
தன்னுடன் படித்த தோழியின் தோழிக்கு தோழி.. என்று யாரோ ஒருவர் தங்கி இருக்கும் விடுதியில், முன்பின் அறிமுகமே இல்லாத, தன் வயது ஒத்த ஐந்தாறு பெண்களுடன், ஒரு மிகச் சிறிய அறையில் தங்குகிற முதல் வாரம்தான், இவர்களுக்குக் கிடைக்கிற முதல் வரம்!
‘வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள, மிகச் சிறந்த புத்தகம் எது..?’ என்று யாரேனும் கேட்டால், சென்னையில் உள்ள ‘வொர்கிங் விமன்’ஸ் ஹாஸ்டல்’ என்று திடமாகச் சொல்லலாம். ‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்கிற சொல்லின் சரியான விளக்கத்தை இந்த இடம்தான் அனுபவ பூர்வமாக விளக்குகிறது.
தன் தாய் தந்தை சகோதர்களின் பாசப் பிணைப்பில், ‘கஷ்டம் தெரியாம வளர்ந்த பொண்ணு’, ‘ஒண்டிக் கொண்டு’ படுத்து உறங்க வேண்டிய தருணம் வருகிற போது, ஒரு நிமிடம் கூட தூங்காமல், புரண்டு புரண்டு கழிக்கிற அந்த இரவில், அவளுக்குள் எழுகிற ‘வைராக்கியம்’ இருக்கிறதே…., அதுதான், ‘நல்ல வேலை’ நோக்கி அவளைச் செலுத்துகிற ‘இக்னிஷன்’.
‘என் கம்பெனியில சேர்த்து விடறேம்பா.. வேலை ரொம்ப கஷ்டமாதான் இருக்கும். டைம் எல்லாம் ஒண்ணும் கிடையாது..
காலையில போனா, ராத்திரி ஆயிடும் வேலை கிளம்பறதுக்கு. ஆனா என்ன தெரியுமா..? நல்ல ஜனங்கப்பா..  ஒரு தொந்தரவும் இருக்காது…’
‘சரி..’ என்று ஒப்புக்கொண்டு வேலைக்குப் போவதற்கான முதல் முழுக் காரணம், ‘ஹாஸ்டலுக்கு ‘பே’ பண்ண, அப்பாவை ‘டிஸ்டர்ப்’ பண்ண வேணாம்.’
ஓரிரு வாரங்களில், தன்னை சேர்த்து விட்ட தோழி, வேறு நல்ல (இதை விட சுமாரான) வேலையில் சேர்ந்து, வேறு ஒரு ஹாஸ்டலுக்குப் போகவும், இவளுக்குள்ளும் மாற்றலுக்கான உத்வேகம். நாளிதழ்களில் வேலைக்கு ஆட்கள் கேட்டு வரும் விளம்பரங்கள், ‘ஆன்லைன்’ பணித் தேர்வு ‘வெப்சைட்’டுகள், சென்னைக்கு வந்த பிறகு, தெரிய வந்த ‘கான்டாக்ட்’ எண்கள்.. என்று பல முனைகளிலும் இவளின் அம்புகள் பறக்கும்.
வார விடுமுறை நாளில், துணி துவைத்தல், சிறிது பகல் நேரத் தூக்கம், தோழிகளுடன் அரட்டை, ஊர் சுற்றல்.. இவைகளுடன், ‘வேல்யூ ஆடட் கோர்ஸ்’ வகுப்புகளும் ‘ரொட்டீன்’ வகைப் பணிகளில் ஒன்றாகி விடும். ஓரிரு மாதங்கள்தாம். ‘பாய்ச்சலுக்கு’ தயார்.
விடுமுறை நாட்களில் வேலைக்குப் போய், இழப்பீட்டு விடுமுறை (‘காம்பன்சேடரி லீவ்’) பெற்று, நேர்முகத் தேர்வுக்கு சென்று வருவதை வழக்கமாக்கிக் கொள்வாள்.
‘நாங்க யாரு…? பத்து இன்டர்வியூக்கு போனா, எதானும் ஒன்னுல செலக்ட் ஆயிடுவோம்ல..?’
விடா முயற்சி, வெற்றி தராமலா போகும்?
முதல் ‘பணி தாவல்’. சம்பளத்தில் ஓரிரு ஆயிரங்கள் கூடுதல்.
தாய் தந்தை சகோதரனுக்கு சிறிய அளவில் பணமோ பரிசோ தரும் போது, அவர்களின் முகங்களில் தோன்றும்  பரவசப் புன்னகையில், வாழ்க்கையில் வென்று விட்ட பெருமிதம்.
மேலும் மேலும் படிப்பு; மேலும் மேலும் உழைப்பு. மேலும் மேலும் உயர்வு. ஓரிரு ஆண்டுகளில்….? முன்னர் சொன்னதுதான்.  கோயம்பேடு பஸ் நிலையத்தில், ‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை’.
இந்த இளம் பெண்கள், சமுதாயத்துக்குச் சொல்கிற செய்தி இதுதான் –  ‘வேலைங்கிறது என்ன.. தலையில வச்சுக்கிற பூவா..? காய்கறியா..? வாழைப் பழமா..? தள்ளு வண்டியில வச்சிக்கிட்டு, வேலை வேணுமா வேலை?ன்னு கூவிக் கூவி வித்துக்கிட்டா போவாங்க?’
‘நாமதான் தேடணும், போராடணும். எந்த வேலை கிடைச்சாலும் சேர்ந்துடணும். மரத்து மேல ஏர்ற மாதிரி..  ஒவ்வொரு கிளையாப் பிடிச்சி பிடிச்சி மேல போகணும். நமக்குப் புடிச்ச வேலை வர்ற வரைக்கும் எந்த வேலைக்கும் போக மாட்டேன்னு இருந்தா, வேலைக்கு ஆவாது..’
இதுதான் சரியான அணுகுமுறை. கிடைத்ததை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அடுத்ததற்கு முயற்சிப்பது.  ஒரே ஒரு ‘தொல்லை’ இருக்கிறது. ‘அதான் எதோ ஒரு வேலை கிடைச்சுடுச்சு இல்லை..? அப்புறம் என்ன..?’
இந்த மன நிலை வந்து விடக் கூடாது. இதில்தான் இன்றைய இளைஞிகள் தனித்து நிற்கிறார்கள்.
வேலை தேடும் இளைஞர்களுக்குத் தேவைப் படுவதெல்லாம், விடா முயற்சிதான்.
‘என்னிடம் அது இல்லையா…? நான் மட்டும் சும்மாவா இருக்கிறேன்..? என்று கேட்கலாம்.  வெறுமனே, ‘மெகானிகலா’, விண்ணப்பங்களை அனுப்புவது மட்டுமே முயற்சி ஆகாது.
‘தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொள்ளுதல்’, வேலை தேடுதலில், மிக முக்கியம்.
‘படிச்சு முடிச்சுட்டேன்’ என்று சொல்வதே, அபத்தம். அது எப்படி ‘முடியும்’?
பட்டம் கிடைத்து இருக்கிறது. அவ்வளவுதானே..? அது இருந்தால் போதுமா..?
இனிமேல் வேலை கிடைக்கிற வரை டிவி, சினிமா, கிரிக்கெட்தானா..?
இது எப்படி சரியாக இருக்கும்..?
நாம் பெற்ற கல்வித் தகுதி மட்டுமே வேலை பெற்றுத் தந்து விடாது. அதற்கும் அப்பால், சில தனிப்பட்ட திறமைகளை  வளர்த்துக் கொண்டாக வேண்டும். இந்தத் திறமைகளதாம் நம்மை ‘வேறுபடுத்தி’ காட்டும்; நல்ல பணிக்கான கதவுகளைத் திறந்து விடும்.
மிகப் பெரிய அளவில், அதிகம் பணம் செலவழித்து, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான் திறமைகளை வளர்த்துக்  கொள்ள வேண்டும் என்பது இல்லை. நம்முடைய அறிவு, ஆர்வம், ஆற்றல், ஈடுபாடு ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தினாலே போதுமானது.
இதெல்லாம் இல்லாமல்தான் செயல் படுகிறேனா என்று கேட்கிறீர்களா..?
உங்கள் கேள்விக்கு, நானும் ஒரு கேள்வியையே பதிலாகத் தருகிறேன்:
‘வேலைக்கான உங்களது விண்ணப்பத்தை நீங்களேதான் சுயமாக எழுதுகிறீர்களா..?’
எந்த நிறுவனத்துக்குச் சென்று கேட்டாலும், அங்கே இருக்கிற மனிதவள மேலாளர் (எச்.ஆர். மேனேஜர்) சொல்கிற புகார் இதுதான் – ‘வேலை கேட்டு வர்ற அப்ளிகேஷன்ஸ் பெரும்பாலும், ஒரே மாதிரியா, ‘ஸ்டீரியோ டைப்’லயே இருக்கு..’.
அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?
யாராவது ஒருவர் எழுதியதை அப்படியே காப்பியடிப்பது; அல்லது ‘நெட்’டுல இருந்து ‘டவுன்லோட்’ பண்ணுவது. இதைத்தானே செய்து கொண்டு இருக்கிறோம்..? நம்முடைய விண்ணப்பங்கள்
நாம் ‘எழுதியவையா’..? நம்மால் நிரப்பப் பட்டவை. அவ்வளவே.
‘அப்ளிகேஷன்’, ‘பயோடேட்டா’வில், நம்மைப் பற்றிய சுய குறிப்புகளைத்தானே தரப் போகிறோம்..? அதை நம்மால் சொந்தமாக எழுத முடியாதா..? முயற்சி செய்து பார்த்து இருக்கிறோமா..?
இப்போது முயற்சிப்போமா..? செய்யலாம். அதற்கு முன்னதாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது –
ஒரு விண்ணப்பத்தில் நாம் என்னவெல்லாம் சொல்ல வேண்டும்..?
எந்த வரிசையில் சொல்ல வேண்டும்..?
எந்த அளவுக்கு சொல்ல வேண்டும்..?
என்ன நடையைப் பின்பற்ற வேண்டும்..?