இவ்வளவு நாள் புகைபிடித்துவிட்டேன். திடீரென புகைபிடிப்பதை விடுவதால் என்ன நன்மை?

னிதனின் அத்தியாவசியத் தேவை காற்று. உணவு இல்லாமல் மூன்று வாரம் வரைகூட உயிர்வாழ்ந்துவிட முடியும். ஆனால், காற்று இல்லாமல், மூன்று நிமிடங்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது. பெருகிவிட்ட வாகனங்கள், தொழிற்சாலை மாசு போன்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகள் காரணமாக, நாம் வாழ அடிப்படைத் தேவையான காற்றே, உயிரக்கொல்லியாகிக் கொண்டிருக்கிறது.

 

உலகம் முழுவதும் காற்று மாசு காரணமாக உயிர் இழப்பவர்கள் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரிக்கிறது. ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன், உலக அளவில் மனிதன் மரணம் அடைவதற்கு நான்காவது காரணியாக இருந்த நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease) இன்னும் ஐந்து ஆண்டுகளில் இரண்டாவது காரணியாக மாறவுள்ளது’ என எச்சரித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை ஆய்வு ஒன்று, ‘இந்திய தலைநகர் டெல்லியில் நாள் ஒன்றுக்கு 80 பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால்தான் இறக்கின்றனர்’ எனத் தெரிவிக்கிறது. டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக காற்று மாசடைந்த மோசமான நகரம் , சென்னை. நல்ல தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது போலவே, சுத்தமான காற்றை சுவாசிக்க மிகப் பெரும் விலையை நாம் கொடுக்க வேண்டிய நாளும் வரும்.

நல்ல காற்றில் 20.94 சதவிகிதம் ஆக்சிஜன் இருக்கிறது. காற்று மாசடைவது காரணமாக காற்றில்,  நச்சான வேதிப் பொருட்களின் அளவு அதிகரித்துவிட்டன. மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல். நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய், நுரையீரல் புற்றுநோய் ஆகிய நுரையீரல் பாதிப்புகள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால்  ஏற்படுகின்றன. மாசடைந்த காற்றில் கார்பன் டைஆக்சைடு அதிகமாக இருப்பது மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளான கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் சல்பர் டை ஆக்சைடு போன்றவையும் அதிக அளவில் கலந்து இருக்கும். இந்தக் காற்றை சுவாசிப்பது மரணத்தை விரைவுபடுத்தும்.

சி.ஓ.பி.டி

மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது, நுரையீரலுக்குக் காற்று செல்லும் குழாய் மற்றும் நுரையீரல் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கி வீங்கிவிடும். அடிக்கடி இருமல் வரும்; சளி இருக்கும். ஆனால், வெளியே வராது. நுரையீரலின் செயல்திறன் குறைந்து, கடைசியில் செயற்கை ஆக்சிஜன் கருவி துணை கொண்டே வாழ வேண்டிய நிலை வரலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் பல்கிப் பெருகிவருகிறது. பலருக்கு இப்படி ஒரு நோய் இருப்பதே தெரியாமல் வெறும் காய்ச்சல், சளி, இருமல் என சாதாரணமாக எடுத்துக்கொள்வதால் வாழ்நாள் சுருங்கிவிடுகிறது.

சி.ஓ.பி.டியை எப்படிக் கண்டுபிடிப்பது?

சாதாரணமாக இருமல் வந்தாலோ, சளி பிடித்தாலோ சி.ஒ.பி.டி நோய் இருக்குமோ என பயப்பட வேண்டாம். தண்ணீர் போல வெளிவரும் சளி பயப்பட வேண்டியது அல்ல. தொடர்ந்து, இரண்டு வாரத்துக்கும் அதிகமாக இருமல் வருகிறது என்றாலோ, அடர் மஞ்சள் நிறம், கறுப்பு நிறம், ரத்தம் கலந்த சிவப்பு நிறத்தில் சளி கெட்டியாக வருகிறது என்றாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஒரு சிலருக்கு சளி, இருமல் இருக்காது. ஆனால், வலது பக்கம் நெஞ்சு வலி வந்தால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிய முடியும். எக்ஸ்ரே பரிசோதனை செய்யும்போது, நுரையீரல் வீக்கத்தையும் நெஞ்சுக்குள் சளி கட்டியிருப்பதையும் அறிய முடியும். ரத்தப் பரிசோதனை செய்தால், நுரையீரல் எந்த அளவுக்கு ரணமாகியிருக்கிறது என்பதை அறிய முடியும்.

முன் பரிசோதனை?

நுரையீரல் முழுமையாகப் பாதிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு வருவதைவிட, முன்கூட்டியே காப்பது நலம். நுரையீரல் செயல்திறன் அறியும் பரிசோதனை (PFT TEST) மூலம், ஒருவரின் நுரையீரல் சுருங்கி இருக்கிறதா, எவ்வளவு சுருங்கி இருக்கிறது போன்ற விவரங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

வீட்டிலேயே பரிசோதனை

நுரையீரல் செயல்திறனை, வீட்டிலேயே பீக் ஃப்ளோ மீட்டர் (Peak flow meter) எனும் கருவியைப் பயன்படுத்தி கண்டறியலாம்.இந்தக் கருவியில் மிக வேகமாக ஒரு நிமிடம் வரை ஊதிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 350 மி.லி வேகத்தில் ஊத முடிந்தால், எந்தப் பாதிப்பும் இல்லை. 350 மி.லியைவிட குறைவான வேகத்திலேயே ஊத முடிகிறது எனில், தொடர்ந்து இதே போல ஏழு நாட்களுக்கு பரிசோதனை செய்து, விவரங்களை குறித்துக்கொண்டு மருத்துவரை சந்திப்பது நல்லது.

ஆஸ்துமா

ஆஸ்துமா மரபியல்ரீதியாகவும் அலர்ஜி காரணமாகவும் வரக்கூடிய நோய். இவர்கள், மாசடைந்த காற்றை சுவாசிப்பதால், சி.ஓ.பி.டி எளிதில் வந்துவிடுகிறது. மேலும், ஆஸ்துமா பாதிப்புகளையும் தீவிரப்படுத்துகிறது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள்  மாசடைந்த காற்று இருக்கும் இடங்களில் வசிப்பதைத் தவிர்க்க வேண்டும். புளிப்பான பழங்கள், நீர்க் காய்கறிகள் போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது, காதுக்குள் தண்ணீர் போகவிடக் கூடாது. குளிர்சாதன வசதி இருக்கும் அறைகளில், ஏ.சி பெட்டிக்கு நேராக உட்காரக் கூடாது.
நீச்சலின்போது, காதுகளைப் பாதுக்காக்கும் ‘ஸ்விம்மிங் இயர் பிளக்கு’களைப் பொருத்திக்கொள்ள வேண்டும். இறால், நண்டு, கருவாடு போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.

புகை நமக்குப் பகை

சிகரெட் பிடிப்பது, சிகரெட் புகை கலந்த மாசடைந்த காற்றை சுவாசிப்பது என இரண்டுமே புற்றுநோயை ஏற்படுத்தும். அதிலும், சிகரெட் பிடிப்பவரைவிட அவருக்கு அருகில் நிற்பவருக்குத்தான் எளிதில் நுரையீரல் பாதிக்கப்படும். சிகரெட் புகைக்கும்போது, அதில் உள்ள வேதிப்பொருட்கள் இரண்டு வகையாக வெளியேறுகின்றன. சிகரெட்டை வாயில்வைத்து காற்றை உறிஞ்சும்போது, அதில் உள்ள நிக்கோட்டின், கார்பன் டை ஆக்சைடு போன்றவை நேரடியாக நுரையீரலுக்குள் செல்கின்றன. சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகை வழியாக கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற மிகவும் மோசமான வாயுக்கள் வெளியேறி காற்றில் கலக்கின்றன.

18 வயதில் ஒருவர் சிகரெட் பிடிக்க ஆரம்பித்து, அவர் சிகரெட் புகையோடு மாசடைந்த காற்றையும் சுவாசிக்கும்போது, 45 – 50 வயதில் பெரும்பாலும் மரணம் வந்துவிடும். சிகரெட் பிடிப்பவர்களுக்கு சி.ஓ.பி.டி, ஸ்குவாமஸ் செல் கார்சிநோமா (Squamous Cell Carcinoma) எனும் நுரையீரல் புற்றுநோய், வழக்கமான நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

ஸ்குவாமஸ் செல் கார்சிநோமா வகை புற்றுநோய், புகைப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதற்கு, எந்த சிகிச்சையும் பலன் தராது. அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரைதான் இவர்களால் வாழ முடியும்.

நுரையீரல் செயல்திறனை அறிவதன் மூலம், புற்றுநோய் பாதிப்பில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். ஆறேழு ஆண்டுகளாகத் தொடர்ந்து சிகரெட்  பிடித்து வந்தவர்கள், சிகரெட் புகை இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து இருப்பவர்கள் எக்ஸ்ரே பரிசோதனை எடுத்துப்பார்த்து தங்களின் நுரையீரல் என்ன நிலையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து மீள முடியும்.

இவ்வளவு நாள் புகைபிடித்துவிட்டேன். திடீரென புகைபிடிப்பதை விடுவதால் என்ன நன்மை? எப்படியும் எனக்கு ஒருநாள் எதாவது பிரச்னை வரத்தானே போகிறது என சாக்குபோக்கு சொல்பவர்கள் கவனிக்கவும்:

 ஒரு மனிதனுக்குத் தலா 2.5 லிட்டர் கொண்ட இரண்டு பாகம் நுரையீரல் இருக்கிறது. நுரையீரல் 30 வயது வரை நன்றாக இருக்கும். பிறகு, கொள்ளளவு குறைய ஆரம்பிக்கும்.

 30 வயதுக்கு மேல் நுரையீரல் ஆண்டுக்கு 30 மி.லி கொள்ளளவு குறைய ஆரம்பிக்கும்.

 சிகரெட் பிடிக்கும்போது – ஒவ்வோர் ஆண்டும் 100 -120 மி.லி கொள்ளளவு குறையும்.

 சிகரெட் பிடிப்பதை விட்டால், ஆண்டுக்கு 50-70 மி.லி கொள்ளளவுதான் குறையும். எனவே புகை பிடிப்பதை கைவிட்டால் நுரையீரல் படிப்படியாக சீராகும்.

நுரையீரல் காக்க எளிய வழிகள்

 காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிப்படைவதைத் தடுக்க நிறைய மரங்கள் வளர்ப்பதும், எரிவாயுக்களைக் கட்டுப்படுத்துவதும், சிகரெட்டை ஒழிப்பதும் நீண்டகால லட்சியமாக இருந்தாலும், தற்போது உங்கள் உடல்நலனைக் காக்க சில வழிகளைக் கடைப்பிடிக்கவும்.

 குளிர்சாதன அறையில் இருப்பவர்கள் ஏ.சி-க்கு நேராக உட்காரக் கூடாது.

 தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

 தினமும் 30 முறை மூச்சுப்பயிற்சி செய்யவும்.

 பெரிய சைஸ் பலூன் நிறைய வாங்கி, தினமும் காலையில் மூன்று, இரவு மூன்று என ஊதவும்.

 சாலையில் செல்லும்போது, கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்லவேண்டும்.

 இருசக்கர வாகனம் ஓட்டும்போது, ‘மிரர் மாஸ்க்’ உள்ள ஹெல்மெட் அணிவது தலைக்கு மட்டும் அல்ல, நுரையீரலுக்கும் பாதுகாப்பு.

 தினமும், வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு வாய் (தொண்டையில் படும்படி) கொப்பளிக்க வேண்டும்.

 ஆன்டிஆக்ஸிடன்ட் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கீரைகள், புதினா, கொத்தமல்லி, தூதுவளை போன்றவை நுரையீரலுக்கு மிகவும் நல்லது.

 கேரட், பப்பாளி, கொய்யா, அன்னாசிப் பழம் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்.