உங்களது 168 மணி நேரத்தில் நீங்கள் என்ன செய்யலாம்?

நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம்  செலவு செய்கிறோம் என்று கணக்கு வைத்துள்ளோம், நமது அன்றாட தேவைகளுக்கு எவ்வளவு தொகை செலவு செய்கிறோம் என்று கணக்கு வைத்துள்ளோம் ஆனால் நாம் கணக்கு இல்லாமல் செலவழிக்கும் ஒரு விஷயம் நேரம் மட்டும்தான்.

“ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை..!”  என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். அதனால் சற்று விலக்கு அளித்து  24 மணி நேரங்களை கொண்ட ஏழு நாட்கள் என்று வைத்து கொள்வோம். இப்போது நமக்கு 168 மணி நேரம் கையில் உள்ளது. இதில் நாம் என்ன செய்யப் போகிறோம்.. நமக்கு கிடைக்கும் நேரம் என்ன? அதனை எப்படி செலவழிப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இதோ…

இந்த 168 மணி நேரத்தில் 49 மணி நேரத்தை கழித்து விடுங்கள். ஒரு நாளைக்கு கட்டாயம் ஒரு சராசரி மனிதன் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும்; இல்லை என்றால் அவனால் சரியாக வேலை செய்ய முடியாது என்கிறது ஆய்வு. அதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்ட 168 மணி நேரத்தில் 49 மணி நேரத்தை கழித்து விடுங்கள். இதனை தவிர்த்தால் உங்களிடம் மீதமுள்ளது 119 மணி நேரம்.

நீங்கள் ஏதோ ஓர் இடத்தில் வேலை செய்பவராக இருந்தால் ஒரு வாரத்தில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற அடிப்படையில் 56 மணி நேரம் வேலை செய்கிறீர்கள். நம்மில் பலர் புத்திசாலி தனமாக யோசித்து, “வார இறுதி நாட்கள் எனக்கு விடுமுறைதானே.. அதில் என்ன நான் வேலை செய்கிறேன்!” என்று கூறிவிட்டு, மேஜை மீதுள்ள மடிக்கணினி முன் அமர்ந்து எக்ஸ்.எல் ஃபைல்களையும், பவர்பாயிண்ட் தயாரிப்புகளையும் காபி கோப்பையோடு எடிட் செய்வது, வேடிக்கையான விஷயம்தான்! எப்படியோ வாரத்தில் 56 மணி நேரம் வேலைக்காக போய்விட்டது.இப்போது மீதமிருக்கும் நேரம் 63 மணி என்ற நிலையை அடைந்து விட்டது.

இந்த 63 மணி நேரத்தில் உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களான நீங்கள் அலுவலகத்துக்கு பயணம் செய்வது, உங்கள் பெட்ரோல் பங்கில் காத்திருப்பது போன்ற விஷயங்கள் ஒரு வாரத்தில் 13 மணி நேரத்தை ஆக்கிரமிக்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது நம் குழந்தைகளை பாரமரிப்பது, கோவில்களுக்கு செல்வது, நமது தினசரி வேலைகளான உடற்பயிற்சி என நமது நேரத்தில் 20 மணி நேரம் செலவழிக்கப்படுகிறது . அதுமட்டுமின்றி நாம் தேவையில்லாமல் ஐடியல் நிலை எனப்படும் நிலையில்,  ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தை செலவழிக்கிறோம். இதனை நாம் மொத்தமாக செலவழிப்பதில்லை என்பதும் உண்மை. ஒரு மணி நேர இடைவெளியில் 10 நிமிடம் அல்லது 5 நிமிடம் செலவு செய்து அது ஒரு வாரத்தில் 7 மணி நேரமாக உருவெடுக்கிறது.

இறுதியாக கையில் முழுமையாக 23 மணி நேரம் மீதமிருக்கிறது.இதனை செலவழிப்பதில் திட்டமிடாமல்தான் நான் ஒரு நாளைக்கான 24 மணி நேரத்தில் கூடுதல் நேரம் கேட்கிறோம். இந்த 23 மணி நேரம் கிட்டத்தட்ட ஒரு நாள். இதில் நாம் என்ன செய்கிறோம் என்று முதலில் பார்த்தால், அதிகமான பகுதி சமூக வலைத்தளங்களாலும், இன்டர்நெட் தேடல்களாலும் செலவிடப்பட்டு விடுகிறது.

சமூக வலைத்தளங்களில் எனது நோட்டிஃபிகேஷன் பார்க்க செல்கிறேன்; அல்லது ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய செல்கிறேன்; அல்லது என் அலுவலக பக்கத்தில் செய்தியை பதிவு செய்துவிட்டு வந்துவிடுவேன் என்று களமிறங்கும் நம் மனம், கேண்டி கிரஷ் ரிக்வெஸ்ட்களிலும், நண்பர்களது ஸ்டேட்டஸ் போட்டோவுக்கு லைக், இதையும் தாண்டி நான் செய்த பதிவுக்கு எத்தனை லைக்குகள் என்று எண்ணுவது, யார் செய்தார்கள் என்று பார்ப்பது என தொடங்கி.. 14 மணி நேரத்தை விழுங்கிவிடுகிறது.

மீதமுள்ளது 9 மணி நேரம். இதனை சொல்லவே வேண்டாம் உங்கள் வெள்ளிக்கிழமை சினிமாக்களும், வார இறுதி மால்களும் போனஸ் டைம் எடுத்து இந்த 9 மணி நேரத்தை இழுத்து விடுகின்றன. அப்படியென்றால் நம்மால் இதனை சமாளிக்க முடியாதா? என்றால், முடியும்; ஆனால் அதனை யாரும் சொல்லி செய்துவிட முடியாது அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்குள் உள்ள சுய கட்டுப்பாட்டால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

எப்படி சமாளிப்பது?

1.உங்கள் வேலை நேரமான 56 மணி நேரத்தில் தேவையில்லாமல் நீங்கள் செலவு செய்யும் நேரத்தில் அடுத்த வாரத்துக்கு ஆயத்தமாகுங்கள். உங்கள் வார இறுதியில் உங்கள் பவர்பாயிண்ட் தயாரிப்புகளையும், மடிக்கணினியையும் தள்ளி வையுங்கள். குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள். அது ஒரு வித அமைதியான சூழலையும் அடுத்த வாரத்திற்கான புத்துணர்ச்சியையும் தரும்.

2. உங்கள் சமூக வலைத்தளம் உங்களை ஆக்கிரமிக்கும் 14 மணி நேரத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள். அருகில் இருப்பவருடன் ஆன்லைனில் சாட் செய்யாமல் நேரில் சந்தியுங்கள். அப்போது உங்கள் மனநிலையும் அமைதியாகும். அதிக நேரம் கணினி திரையில் கண் விழித்து உட்கார வேண்டிய அவசியம் இருக்காது.. லைக்குகள், கமெண்ட்டுகள் எத்தனை என்று எண்ணாமல் உங்கள் வேலைகளை துவங்க பாருங்கள்.

3. உங்களுக்கு நேரம் மிச்சமிருக்கிறது என்ன செய்யலாம் என்றால் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள தயாராகுங்கள். ஒரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஒரு கட்டுரையை எழுதுங்கள். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் நாட்டம் இல்லை என்றால்,  உங்களது எதிர்காலத்தையோ அல்லது குறைந்தபட்சம் அடுத்த 168 மணிநேரத்தையாவது திட்டமிடுங்கள்.

4. ரிலாக்ஸ் நேரம் என நீங்கள் செலவு செய்வது உங்களை சோர்வடைய செய்யும் விஷயமாக இருக்க கூடாது. பீச்சுக்கு சென்றேன் ஒரே டயர்டாக உள்ளது..ஷாப்பிங் சென்றதால் கால் வலிக்கிறது என்று கூறாமல், உங்களை புத்துணர்ச்சி அளிக்கும் ரிலாக்ஸ் விஷயங்களை தேடுங்கள்.

உங்கள் நேரம் அதிக மதிப்புமிக்கது. அதனை சரியாக பயன்படுத்துங்கள். 168 மணி நேரம் உங்களுக்கு போதவில்லை என்று நீங்கள் கூற தயாரானால். உங்களது ஒரு மணி நேரத்தை கூட உங்களால் சிறப்பாக செயல்படுத்த முடியாது. 168 மணி நேரம் பெரியது அதனைச் சரியாக பயன்படுத்தி பயன்பெறுங்கள்!

நன்றி விகடன்

FOLLOW OUR DOMAIN VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

VISIT OUR GROUP OF DOMAINS

EDITOR – www.tamilagamtimes. com

http://yazhinimaran.com/ FOR MEDICAL ARTICLES
http://isaipriyanka.com/ FOR ECONOMICAL ARTICLES
https://kaviazhaku.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES
http://shanthivinayagam.com/ FOR WOMEN
http://alagusundari.com/ FOR SPIRITUAL