‘உங்கள் பயணம் ‘எலி’தாகட்டும்’ !’

யில் பயணம் என்றாலே சௌகரியம், பாதுகாப்பானது என்பது சமீபகாலமாக கனவாகி போய்விட்டது. தற்போது ரயில் பயணம் என்றால் பயணிகள் மனதில் ஒருவித பயம் தொற்றிக் கொள்கிறது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இதன்காரணமாக ரயில்களில் முன்பதிவு இடம் கிடைப்பது குதிரை கொம்பாகி விட்டது.

120 நாட்களுக்கு முன்பு பயணத் திட்டத்தை வகுத்து அதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்கள் 50 சதவிகிதத்தினர். மீதமுள்ளவர்கள் இடைப்பட்ட காலத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆன்-லைன் மூலமாக பதிவு செய்யும் நிலையில், முன்பதிவு மையங்களுக்கு சென்றால் காத்திருப்பு பட்டியலிலேயே டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.

காத்திருப்பு டிக்கெட்டுகள், பயண தேதி வரை பயணிகளை மதில் மேல் பூனையாக கண்ணாமூச்சி காட்டுகின்றன. கடைசி நேர பயண திக்…திக்..அனுபவக்கொடுமை, அதனை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற தகவல் கிடைக்கும் போது அதுவரை ஏற்பாடு செய்த அனைத்தும் விரயம். டிக்கெட் கிடைக்காதவர்கள் குறுகிய காலக்கட்டத்துக்குள் மாற்று பயண ஏற்பாடு செய்தால் அதில் ஏற்படும் அசௌகரியத்துக்கு அளவே இருக்காது.

இந்நிலையில் டிக்கெட பிரச்னை ஒருபுறமிருக்க, ரயில் பயணம் ஒரு வித திகிலாகவே இருக்கிறது. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் ஏறி அமர்ந்து மின்விசிறி சுவிட்ச்சை அழுத்தினால் அது பழுதடைந்திருக்கும். பிறகு நம்மில் சிலர் பேனா, சீப் போன்றவற்றைப் பயன்படுத்தி அதை சுற்றி இயக்க முயன்று தோற்றுப்போனவர்களும் உண்டு. சில நேரம் மின்விசிறி ஓடியதும் உண்டு. அடுத்ததாக அமர்ந்திருக்கும் இருக்கைகள் சுத்தப்படுத்தப்படாமலும், கிழிந்தும் காணப்படும். அதையெல்லாம் சகித்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தால் நள்ளிரவு நேரத்தில் நமக்காக காத்திருக்கும் ஒர் அதிர்ச்சி.

ரயில் பெட்டியில் எமர்ஜென்ஸி விளக்கைத் தவிர மற்ற விளக்குகள் அணைக்கப்பட்டு அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில், காலில் ஏதோ ஊர்வதைப் போல இருக்கும். என்னவென்று கண்விழித்துப் பார்த்தால் எலிகள் நம் மீது ஏறி சாகசம் செய்து கொண்டு இருக்கும். அதை இருட்டில் பார்க்கும் போது ஏதோ விபரீதம் போல அலறியடித்து எழுந்து விளக்கை போட்டால், எலிகள் குடும்பத்துடன் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டு இருப்பதைக் காணலாம். இத்தகைய எலிகளின் அட்டகாசத்தையும் கண்டுகொள்ளாமல் அயர்ந்து தூங்கும் பயணிகளும் உண்டு.

பயணிகள் மீது ஏறி, குதித்து விளையாடும் எலிகள், உடமைகளையும் ஒருபதம் பார்த்து விடுகிறது. புதிய பேக்குகளையும் கிழித்து நாசப்படுத்தி விடுகிறது. டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணித்தால் ஓசியில் பயணித்து பயணிகளுக்கு கிலியை ஏற்படுத்தும் இத்தகைய எலிகளை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது வேதனைக்குரியது.

ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு முழுபாதுகாப்பு கொடுப்பது ரயில்வே நிர்வாகத்தின் கடமை. ஆனால் நிம்மதியாக தூங்க கூட முடியாதளவுக்கு இன்றைய ரயில் பயணங்கள் உள்ளன. இதுகுறித்து பயணிகள் தரப்பில் பல புகார்கள் ரயில்வே உயரதிகாரிகளுக்கு சென்றாலும், எலிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் ரயில்வே நிர்வாகம் திணறுவது காலம் காலமாக உள்ளது.

இதுகுறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “ரயில் பெட்டிகளை பராமரிக்கும் பிட் லைனில் இருந்துதான் எலிகள் பெட்டிக்குள் புகுந்து விடுகின்றன. பயணிகள் சிதறும் உணவுப் பொருட்களை சாப்பிட ரயில் பெட்டிக்குள் வரும் எலிகளால் பல்வேறு தொல்லைகள். எலிகளால் பயணிகளுக்கு மட்டுமல்ல ரயில்வே நிர்வாகத்துக்கும் பெரும் தலைவலி. ரயில் பெட்டிகளில் உள்ள மின்வயர்களை சேதப்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எலிகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. ரயில் நிலையங்களிலும், பிட் லைனில் உள்ள எலி பொந்துகளை கண்டறிந்து எலிகளை ஒழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்காரணமாக எலிகளின் தொந்தரவு ஓரளவுக்கு குறைந்துள்ளது. எலி ஒழிப்பிற்கு பயணிகளும் ரயில்வே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். உணவு பொருட்களை ரயில் நிலையத்திலும், ரயில் பெட்டிகளிலும் சிதறாமல் பார்த்துக் கொண்டாலே எலிகளை கட்டுப்படுத்தி விட முடியும்” என்றார்.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், “ரயில் பெட்டிகளை பராமரிக்கும் பணிகள் பெயரளவிற்கே நடக்கின்றன. இதற்கு ஊழியர்கள் பற்றாக்குறையே முக்கிய காரணம். ரயில் பெட்டிகளை சரிவர பராமரித்து சுத்தப்படுத்தினால் எலிகள் அங்கு செல்ல வாய்ப்பில்லை. ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பெட்டிகளை சரிவர சுத்தப்படுத்துவதில்லை. பிட் லைன், ரயில் நிலையங்கள் ஆகியவற்றை முறையாக பராமரித்து சுத்தமாக வைத்திருந்தாலே எலிகளுக்கு முடிவு கட்டிவிடலாம்” என்றனர்.

ரயில் பயணத்தின் போது ஏற்படும் பாதிப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டியது ரயில் நிர்வாகத்தின் கடமை. எலிகள் மற்றும் இதர வகையால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்குரிய நிவாரணத்தை நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி பெறவும் சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர் பிரம்மா கூறினார்.

‘உங்கள் பயணம் இனிதாகட்டும்’ என்று அறிவிப்பில் மட்டும் சொன்னால் போதாது. அதை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.