உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா?

[wysija_form id=”1″]

‘தண்ணீர், தண்ணீர்’ என்ற ஒரு தமிழ் சினிமாவில் அத்திப்பட்டுங்கிற கிராமத்தை காட்டி இருப்பார்கள். அதே போல தண்ணீர் பிரச்னையால் வாடும் ஒரு கிராமம் இஸ்ஸாபூர். இது டெல்லிக்கும், ஹரியானாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் திருமண வயதைத் தாண்டியும் முதிர் கண்ணன்களாக  சோகத்துடன் திரிகிறார்கள். இவர்களுக்கு சொத்து பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இருந்தாலும்…

அப்படி என்னதாங்க பிரச்னை? தண்ணீர்… தண்ணீர்… தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பத்தியும், ஊரைப் பத்தியும் விசாரிப்பார்கள்.  இங்கென்னடான்னா அப்படியே ரிவர்ஸ்சாக இருக்கு… மாப்பிள்ளை நல்லவனா, சொத்து பத்தெல்லாம் இருந்தாலும், அந்த ஊர் பெயரைக் கேட்டதும் பொண்ணு வீட்டார், ‘ஆள விடுங்க சாமி..!’னு ஒரு கும்புடு போட்டு எஸ்கேப் ஆகிறார்களாம். அதனால் அந்த கிராமத்தில் 32 வயதுக்கு மேல் ஆகியும் இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே திரிகிறார்கள்.

32 வயதாகும் நரேந்தருக்கு திருமணம் கைகூடி வரும். ஆனால் நின்றுவிடும். அதே போல ஐந்து முறை திருமணம் தட்டிப் போய்விட்டது. ஒவ்வொரு முறையும் திருமணம் நிச்சயித்தப் பிறகு கடைசியில் பொண்ணு வீட்டுக்காரர்கள், இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி நிறுத்தி விடுவது வாடிக்கையாகி விட்டது. இந்த தடவை திருமண நிச்சயம் செய்வதற்காக பெண்ணுடைய அப்பா ஊருக்கு நேரில் வந்து, நரேந்தரின் ஊர் சூழ்நிலையை நேரில் பார்த்ததும் இந்த சம்பந்தம் தேவையே இல்லை’ என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டார். எல்லாமே தண்ணீர் படுத்துற பாடுதாங்க!

கிராமத்துக்குள் வராது வரும் தண்ணீர் லாரியின் பின்னால் குடங்கள், பக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு ஓடியதே நரேந்திரன் செய்த தவறு. இவர் மட்டும் இல்லீங்க அந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்குமே இதே நிலைமைதான்.

இந்த கிராமத்தில் பைப் லைன்கள் இருந்தும் தண்ணீர் வருவதில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டதால், கிணறுகளிலும் தண்ணீர் வறண்டுவிட்டது. அதனால் அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் வேண்டும் என்றால் ஊரின் எல்லையில் இருக்கும் ஹரியானா மாநிலத்துக்கு செல்லவேண்டும். அல்லது தண்ணீர் லாரி வரும் வரை காத்திருக்கவேண்டும். ஆனால் தண்ணீர் லாரி எப்ப வரும் என்று தெரியாது என்பதால் தெருக்களில் டிரம்கள், குடங்களை வைத்துக்கொண்டு காவல் காப்பதே இவர்களுடைய அன்றாட வேலையாகிவிட்டது.

தண்ணீர் லாரி வந்தாலும் சிலருக்கு ஒரு சொட்டு நீர்க் கூட கிடைக்காது. அதனால்தான் ஆண், பெண் பார்க்காமல் தண்ணீர் லாரியின் பின்னால் ஓடுகிறார்கள். லாரி மீது ஏறி பைப்புகளைக் கொண்டு டிரம்களிலும், பக்கெட், குடங்களிலும் தண்ணீரை நிரப்பிக் கொள்கிறார்கள். இஸ்சாபூர் மக்கள் தண்ணீருக்காக படாதபாடு படுவதைப் பார்த்துதான் இந்த கிராமத்தில் எவரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். 5,000 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், நரேந்தர் போல் 30 வயதை தாண்டிய இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருக்கிறார்கள்.

‘நல்ல சம்பந்தம், சொந்த வீடும், சொத்தும் இருக்கிறது. தண்ணீர் பிரச்னைக்காக இந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்றீங்களா?’ என்று யாராவது பெண் வீட்டாரைப் பார்த்துக் கேட்டால்… ‘வாழறதுக்கு தண்ணீர் தானே முக்கியம், குடிக்க, குளிக்க, துணி துவைக்க, பாத்திரங்களை கழுவ… தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாதே. மற்ற வேலைகள் செய்யமுடியாமல் வாழ்க்கை முழுவதும் தண்ணீர்க்காகவே போராடவேண்டியிருக்குமே. அதனால்தான் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இல்லை என்றால் என் பொண்ணும் தண்ணீர் லாரி மீது ஏறி சர்க்கஸ் செய்யவேண்டுமே என்ற பயம்’ என்கிறார் ஒரு பெண்ணின் தந்தை.

அவர் சொல்வதும் உண்மைதான்… அந்த ஊரின் ஜனங்களுக்கு தண்ணீர் லாரிமீது ஏறி தள்ளு முள்ளு ஏற்பட்டு கீழே விழுவதும் அடிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது. அந்தத் தண்ணீர் போதாமல், தனியார் டேங்கர் லாரிகளை வரவழைத்தும் தண்ணீர் வாங்கவேண்டிய சூழ்நிலை. இதையே காரணம் காட்டி தண்ணீர் வியாபாரிகள் 3000  முதல் 4000  ரூபாய் என்று தண்ணீரை விற்றுவிடுகிறாகள். நடுத்தர குடும்பத்தினர் அவ்வளவு பணம் கொடுத்து வாங்குவது மிகவும் கடினம். வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் இருவர் தண்ணீருக்காகாவே போராடவேண்டி இருப்பதால் வேலைக்குச் செல்லாமல் குடும்ப வருமானமும் குறைந்துவிடுகிறது. இதை எல்லாம் பார்த்து எந்த அப்பா தன் பொண்ணை அந்த ஊருக்கு மருமகளாக அனுப்புவார்.

தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல், சிலர் கிராமத்தை விட்டு சென்றுவிட்டார்கள். சொந்த வீட்டையும் ஊரையும் விடமுடியாமலும், வேறொரு ஊரில் வாடகை கொடுத்து வாழ முடியாதவர்கள் மட்டுமே இந்த ஊரில் இருக்கிறார்கள்.

இனி, பிள்ளைகளுக்கு கல்யாணப் பிரச்னையை சமாளிக்க தற்போது பணக் கஷ்டத்தைப் பார்க்காமல், வீட்டில் தண்ணீர் தொட்டியைக் கட்டிவருகிறார்கள். தனியார் தண்ணீர் லாரி மூலம் தண்ணீரை அதில் கொட்டி, அந்த தண்ணீரை மூன்று, நான்கு நாட்களுக்கு வரும்படி உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் இந்த வீட்டில் தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இருக்காது என்று நினைத்தாவது பெண் தரமாட்டார்களா என்று ஒரு நப்பாசை. அது மட்டும் இல்லை.. திருமணத்துக்காக சொத்து பத்துகளை காட்டுவது போல, தண்ணீர் தொட்டியையும் காண்பிப்பது இஸ்சாபூரில் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது.

தண்ணித் தொட்டி கட்டினால் டும் டும் டும் நிச்சயம்…

[wysija_form id=”1″]