உடல் எப்போதும் அழிந்துகொண்டிருப்பது …

ஸ்தூலச் சரீரம் என்பது பூதவுடலைக் குறிக்கும். ‘ஸ்தூல’ என்றால் அறியக் கூடியது என்று அர்த்தம். ‘சரீரம்’ என்றால் தொடர்ந்து அழிந்துகொண்டிருப்பது என்று அர்த்தம்.

இப்பூதவுடல் மறையும்போது மரணம் ஏற்படுகிறது.

பூமியில் விதைக்கப்படும் விதைபோல, இந்தப் பூத உடலின் விதை, தாயின் கருவறையிலேயே விதைக்கப்படுகிறது. எப்படிச் சிறிய விதையில் ஒரு பெரிய ஆலமரம் ஒடுங்கி இருக்கிறதோ, அப்படி விந்துவில் மனிதனின் அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கின்றன.

இளஞ்செடியும் வளர்ந்து மரமாகிப் பூத்துப் பழங்களைத் தருகிறது. மனித உடலும் மரமும் இறுதியில் முடிவை அடைகின்றன. அவை இயற்கை எய்துகின்றன. மரத்துக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு மரத்துக்கு ‘தான்’ என்ற உணர்வு கிடையாது என்பதுதான். மனிதனிடம் தோன்றும் அந்த ‘தான்’ என்ற உணர்வு இல்லாத காரணத்தால், மரம் எந்தப் போராட்டத்துக்கும் உட்படுவதில்லை. இந்தப் பூதஉடல் எப்போதும் மாறிக்கொண்டு மரணமடைந்து கொண்டிருக்கிறது. மூப்பும் மரணமும் உடலுக்கு ஏற்படுகின்றன.

இந்தப் பூதஉடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆறு வகையானவை:

பூத உடலின் கட்டமைப்பு

இந்த ஸ்தூல சரீரம் பஞ்சப் பூதங்களால் ஆனது. இந்தப் பஞ்சப் பூதங்களும் உடலில் இறக்கும்போது படைப்புடன் திரும்பக் கலந்துவிடுகின்றன. முதலில் நாசியின் வழியாக, உடலின் உள்ளும் புறமும் சென்றுவந்து, மனிதனை உயிருடன் வைத்துக்கொண்டிருந்த காற்று, வாயு மண்டலத்தில் கலந்துவிடுகிறது. அதன்பின் சுவாசம் நடைபெறுவதில்லை. பின் உடலின் உஷ்ணம் அக்னி மண்டலத்தில் கலந்துவிடுகிறது. உடல் குளிர்ந்து விரைத்துவிடுகிறது. உடல் தகனமாகும்போது அதில் உள்ள நீர், நீர் மண்டலத்தில் கலந்துவிடுகிறது. ஆறடி வெளியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த மனிதன், இப்போது இதையும் கடலிலோ, பூமியிலோ எறிந்துவிட்டால், அவன் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த வெளி, விண்ணில் ஐக்கியமாகிவிடுகிறது. அவன் உடலை உருவாக்கிய மண், மண்ணுடன் கலந்துவிடுகிறது. எனவே, இந்த ஸ்தூலச் சரீரம் இயற்கை அம்சங்களில் இருந்து தோன்றியதுதான். அதற்குள் வந்துசேர்ந்தது அல்ல. எப்பொருளையும் ஆதாரமில்லாமல் படைக்கவோ, அழிக்கவோ இயலாது. பஞ்சப் பூதங்களில் இருந்து தோன்றும் உடல், மரணத்துக்குப்பின் அவற்றில் கலந்துவிடுகிறது.

சூட்சும சரீரம் (நுண் உடல்)

தொட்டுப்பார்த்து அறியக்கூடிய நமது பூத உடலைத் தவிர, சூட்சும சரீரம் என்று அழைக்கக்கூடிய மற்றொரு உடலும் இருக்கிறது.

இந்தச் சூட்சும சரீரம் இருக்கும்போதுதான் ஸ்தூல உடல் இயங்குகிறது. சூட்சும சரீரம் இல்லாதபோது ஸ்தூல உடல் இயங்குவதில்லை. சூட்சும சரீரத்தைத் தொட்டுப் பார்த்தோ, கண்ணால் கண்டோ அறிய முடியாது. அதன் இருப்பை உணர மட்டுமே முடியும். அனுபவத்தில் அறியமுடியும். யாரேனும் உங்களிடம் காட்டும் அன்பையோ, வெறுப்பையோ நீங்கள் உணரத்தான் முடியும். அதை காண முடியாது. எண்ணங்களும் சூட்சுமமாகவே இருக்கின்றன. எண்ணங்கள் ஐம்புலன்களால் அறியப்படுவதில்லை.

எண்ணங்களை அறிய ஐம்புலன்கள் பயன்படாது. மற்றவர்கள் உங்களிடம் இணக்கமாக இருக்கிறார்களா, இல்லையா என்று உணர முடியும். ஆனால், கண்களால் அந்த உணர்வைப் பார்க்க இயலாது. கண்களுக்கு எண்ணங்களைப் பார்க்கும் சக்தி கிடையாது. உங்கள் எண்ணங்களை நீங்கள் அறிகிறீர்கள். ஆனால் உங்கள் கண்களால், அவற்றைப் பார்ப்பதில்லை. அப்படியானால் எதைக்கொண்டு, எங்கு உங்கள் எண்ணங்களைப் பார்க்கிறீர்கள்? அதை உங்கள் பேருணர்வு அல்லது சைதன்யத்தின் உதவியால் அறிகிறீர்கள்.

எவ்வளவு காலம் சூட்சும சரீரம் ஸ்தூல சரீரத்தினுள் இருக்கிறதோ, அவ்வளவு காலம் அது இயங்குகிறது. சூட்சும சரீரம் நீங்கிய பிறகு ஸ்தூல சரீரம் எந்த வினையும் புரிவதில்லை. அம்மனிதர் இறந்தவராகிவிடுகிறார். இறப்பு என்பது ஸ்தூல சரீரத்திலிருந்து சூட்சும சரீரம் நீங்குவதேயாகும்.

ஸ்தூல சரீரம் ஐந்து பூதங்களால் ஆனது, அதுபோல் ஸ்தூல நிலையை அடையாத, நுட்ப நிலையில் உள்ள அதே ஐந்து பூதங்களால் ஆனதுதான் சூட்சும சரீரம் எனப்படுகிறது. நுட்ப நிலையிலிருந்து மாற்றப்பட்டு ஸ்தூல நிலையை அடைவதே ‘பஞ்சீகரணம்’. இந்த மாற்றம் ஏற்படாத நிலையில் பஞ்சபூதங்கள் இருக்கும் நிலை சூட்சுமம் எனப்படும்.

சூட்சும சரீரத்தின் பதினேழு அங்கங்கள்

சூட்சும சரீரம் பதினேழு அங்கங்களைக் கொண்டது. அவை பஞ்ச ஞானேந்திரியங்கள் (ஐம்புலன்கள் அல்லது ஐந்து உணரும் கரணங்கள்), பஞ்சக் கர்மேந்திரியங்கள் (ஐந்து செயற்கரணங்கள்), பஞ்சப் பிராணன்கள் (ஐந்து பிராணன்கள்), மனம் (மனது), புத்தி (அறிவு) ஆகும். இவை அனைத்தும் சேர்ந்ததுதான் சூட்சுமச் சரீரம்.

கண்கள், செவிகள், நாசி, நாக்கு, தோல் இவை ஐம்புலன்கள். இங்கு ஐம்புலன்கள் எனக் குறிப்பிடப்படுவன ஸ்தூல வடிவாக உள்ள புலன்கள் அல்ல. கண்களும் காதுகளும் உருவ அமைப்பை உடையன. பிறவியில் காது கேட்காதவருக்கும் காது மடல்கள் உள்ளன. உள்ளே உள்ள கருவியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர் சரி செய்தபின், ஒருவர் கேட்கும் ஆற்றலைப் பெறுகிறார்.

இப்போது கண்களை எடுத்துக் கொள்வோம். சில குழந்தைகள் விழிவெண்படலத்திலோ விழித்திரையிலோ இருக்கும் குறைபாடு காரணமாகப் பார்வைத் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். மாற்று விழி பொருத்திய பின் அல்லது விழித்திரையில் அறுவை சிகிச்சை செய்த பின் மீண்டும் பார்வை கிடைக்கும். இதிலிருந்து நமது விழி ஒரு கருவி என்பதைப் புரிந்துகொள்ளலாம். காணும் ஆற்றல் சூட்சுமமானது. கேட்கும் சக்தியும் சூட்சுமமானது. ஸ்தூலமான உறுப்புகள் பழுதடைந்தால் ஒருவர் பார்க்கவோ கேட்கவோ இயலாது.

மின்விளக்கு பழுதடைந்தால் மின்சாரம் இருந்தாலும், அது ஒளியைத் தராது. எனவே, ஐம்புலன்கள் என்னும் உறுப்புகள் சூட்சுமச் சரீரத்தின் வெளிப்பாட்டை உணர்த்தும் கருவிகளாக விளங்குகின்றன.

ஐம்புலன்களும் இந்த ஸ்தூலச் சரீரத்துக்கு வெளியுலகத்தை வெளிப்படுத்தும் ஜன்னல்களாக விளங்குகின்றன. இந்த ஜன்னல்கள் வழியாகத்தான் வெளி உலகை நம்முள் ஈர்த்துக்கொள்கிறோம்.

காரணச் சரீரம்

எந்த சரீரத்தைப் பற்றி விளக்க முடியாதோ, எதற்கு ஆரம்பம் இல்லையோ, எதில் அறியாமை குடி கொண்டிருக்கிறதோ, எது மற்ற இரண்டு சரீரங்களுக்கும் காரணமாக இருக்கிறதோ, எது தனது உண்மைத் தன்மையைப் பற்றி அறியாமலிருக்கிறதோ, எது மாறுபடாத உருவில் இருக்கிறதோ – அதுதான் காரண சரீரம்.

ஸ்தூல, சூட்சும சரீரங்களுக்குக் காரணமாக இருப்பது காரணச் சரீரம். காரண சரீரத்தில், ஸ்தூல- சூட்சும சரீரங்கள் விதைபோல் மாற்றத்துக்கு முந்தைய நிலையில் இருக்கின்றன. உங்களுடைய தகுதிகள், சாதனைகள், நிறைவேற்றிய செயல்கள் எல்லாம் பீஜ வடிவில் காரண சரீரத்தில் சாத்தியமாக இருக்கின்றன.

காரண சரீரம் விளக்கத்துக்கு அப்பாற்பட்டது (அனிர்வசனீயம்). ஏனென்றால் அது மாற்றங்களற்ற நிலை (நிர்விகல்ப ரூபம்). ஸ்தூல, சூட்சும நிலைகள் பஞ்சபூதங்களால் ஆனதால், ஸ்தூல சரீரம் புலப்படுகிறது, சூட்சும சரீரம் சூட்சுமமாக இருக்கிறது. ஆனால், அறியாமையின் வடிவான காரணச் சரீரத்துக்கென்று ஓர் உருவம் இல்லை. எனவே, அதைப் பற்றி விளக்கவோ, விவரிக்கவோ முடியாது. காரண சரீரத்தின் மூலமாகத் தன்னை, வெளிப்படுத்திக் கொள்ளும் ‘நான்’ – ‘பிரஞ்ஞை’ எனப்படும்.

ஸ்தூல சரீரத்துடன் கூடிய விழிப்பு நிலையிலும், சூட்சும சரீரத்துடன் இருக்கும் கனவு நிலையிலும் நம்மைப் பற்றி நாம் அறிவதில்லை. நமக்குப் பொருட்களைப் பற்றிய விஷய ஞானம் இருந்தபோதிலும் ‘ஆத்ம ஞானம்’ இல்லை. ஆழ்ந்த உறக்க நிலையில் காரணச் சரீரத்துடன் கூடி இருக்கையில் நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும் நமக்கு எதுவும் தெரிவதில்லை.

“நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது, என்னையே நான் அறியவில்லை” என்று கூறும்போதெல்லாம், அந்த அனுபவத்தை ஆழ்ந்த உறக்க நிலை என அழைக்கிறோம்.

மூன்று நிலைகளை அல்லது மூன்று வித அனுபவக் களங்களை அனுபவிக்க, மூன்று வித உடல்கள் உள்ளன. ஸ்தூலச் சரீரம் விழிப்பு நிலையிலும் (ஜாக்ரதம்), சூட்சுமச் சரீரம் கனவு நிலையிலும் (ஸ்வப்னம்), காரணச் சரீரம் ஆழ்ந்த உறக்கத்திலும் (ஸுசுப்தி) பொருந்துகிறது.

சூட்சும சரீரத்தைப் பற்றிக்கொண்டால் கனவுலகில் நுழைகிறோம். உறக்கம் வரும்போது, ஸ்தூல – சூட்சும சரீரங்களை ஒதுக்கிவிட்டுக் காரணச் சரீரத்துடன் இருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள எதுவும் நமக்குப் புலப்படாத நிலையில் நம்மையே அறியாத நிலையில், ஆழ்ந்த உறக்கத்தின் அறியாமை ஒன்றே நமது அனுபவத்துக்குப் பொருளாகிறது.

ஸ்தூல சரீரத்தைப் பற்றிக்கொண்டிருக்கும்போது நாம் கனவு காண்பதோ, உறங்குவதோ இல்லை. ஸ்தூல சரீரத்தின் துணையால் விழிப்பு நிலையில் நுகர்பொருள் நிறைந்த இவ்வுலகை அனுபவிக்கிறோம். சூட்சும சரீரத்தின் உதவியால் கனவை அரங்கேற்றி அதை அனுபவிக்கிறோம். காரண சரீரத்துடன் இருக்கையில் அங்கு எதையும் காண்பதோ, தோற்றுவிப்பதோ இல்லை. அங்கு ‘ஆனந்தம்’ மட்டுமே அனுபவமாகிறது.

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.