உடல் கூடும் – காலணியும்

அஃறிணையின் அறம் ஒன்று அண்மையில் அறிந்தேன், அதன் மொழியில் கூறுவதை கேட்கலாமா ? :

புவி வெப்பமடைதலில் பாதிக்கப்பட்டதில் நானும் ஒருவன்,

வெப்பம் தாங்கி – பாதையில் கல் , முள் , பாறைகள் தரும் வலி தாங்கி முதலாளியை சுமப்பது என் வேலை;

ஐந்தறிவு மிருகங்களினும் – கேவலமான மனித – பாதை கழிவுகளையும் முதலாளி பாதம் படாமல் காப்பதும் என் வேலைதான் ;

பொது வாழ்வில் முறை தவறி நடந்தோரும் – நெறி தவறி முயல்வோரும் முதலில் தாக்கப்படுவது எங்களால்தான்;

ஆனாலும் மத – சாதி – இன சம்பிரதாயக்கேற்றவாறு விசேஷ இடங்களில் எங்கள் அனுமதி கட்டுபடுத்தப்படும்;

நாகரிகம் தொடங்கிய காலமாய் நாங்கள் பூமிக்கும் – மனிதனுக்கும் இடையே தொடு உணர்வை வெகுவாக குறைத்துவிட்டோம்;

அதனால்தான் இயல்பு உணர்ச்சி மனிதனிடம் வெகுவாய் குறைந்ததோ என ஒரு ஐயம் உண்டு;

தாயின் கருவறையில் தங்கியதையும், தந்தையின் தோள் தாங்கியதையும் விட நாங்கள் சுமந்த காலம் அதிகம் என்றாலும் ;

நாங்கள் அஃறிணை என்பதால் அங்கீகாரம் சற்று குறைவுதான் ;

எங்களை தயாரித்தவர் பின்னாளில் அமெரிக்க அதிபதியானது எங்கள் நெடுநாளைய வரலாற்று அங்கீகாரம்;

இன்றும் எங்களை தயாரிப்பவர்கள் சமூக அங்கீகாரத்தில் இல்லை என்பது வரலாற்று சோகம் ;

எங்கள் பெயரை தங்கள் ஆடையில் பொறித்து கொண்டு கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருவது சமகால வளர்ச்சி ;

குளிரூட்டப்பட்ட அறைகளில் நாங்கள் விற்பனையாவது , விநோத விற்பனை சந்தையின் விளைவுகள் ;

புனிதமான வரலாற்று புதினங்களில் நாங்கள் அவதாரங்களின் சார்பாக அரியணை ( இராமாயணம் ) ஏறியது உண்டு;

நாங்கள் இல்லாமல் விளையாட்டு களங்களில் நொடிப் பொழுது சாதனைகள் சாத்தியமில்லை ;

களங்களில் விளையாட்டு வினையூக்கிகள் நாங்களே ;

மனிதர்களை கனவான்களாக்குவதில் எங்கள் பங்கும் சிறிது உண்டு ;

இராணுவ நடையின் கம்பீரம் என்பதே நாங்கள் பூமியில் மோதும் ஒலி விளைவுதான் ;

அஃறிணை என்றாலும் எங்களின் அரிய பணி மறத்தல் தகுமோ மானிடரே !

நாங்கள் தேய்ந்ததும் – எங்கள் பணி ஓய்ந்ததும் எங்களுக்கும் வீட்டு பரணில் இடம் தருவீரோ ?

நெடுங்காலம் உங்களை சுமந்த எங்கள் குரலின் அஃறிணை அறம் அறிவீரா !

புத்தியும் – மனமும் இல்லை என்பதை தவிர உங்கள் உயிர் சுமந்த உடலுக்கும்  – உங்கள் உடல் சுமந்த எங்களுக்கும் தேய்வதில் வேறுபாடில்லை என்பது சிந்தையில் படியுமா ?