உணவுப் பாதுகாப்பு மட்டுமல்ல… ஒட்டுமொத்த பாதுகாப்பும்?

[wysija_form id=”1″]

‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கிற சித்தாந்தத்தின்படி வாழும் அமெரிக்க தேசத்திலிருந்து, அண்மையில் இந்தியாவுக்கு வந்தார் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி. ‘கடந்த ஆண்டு டிசம்பரில், இந்தோனேஷிய நாட்டின் பாலி தீவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு (WTO) நாடுகளின் மாநாட்டில் செய்துகொண்ட, தங்கு தடையற்ற வணிக ஒப்பந்தத்தின்படி (Trade Facilitation Agreement),160; இந்தியாவில் எங்களுக்கான கதவுகளைத் திறந்துவிடுங்கள்’ என்று ஓங்கித் தட்டினார்.

‘விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மானியத்தை படிப்படியாக 4 ஆண்டுகளில் நிறுத்தவேண்டும்’ என்கிற பாலி மாநாட்டு தீர்மானத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கான கடைசி நாள், ஜூலை 11. ‘இந்தியாவை எப்படியும் வளைத்துவிட வேண்டும்’ என்றுதான் ஜான் கெர்ரி பற்பல அஸ்திரங்களுடன் வந்தார்.

ஆனால், ‘முடியாது… முடியாது’ என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடங்கி, பிரதம மந்திரி மோடி வரை மறுத்துவிட்டார்கள். ஆனால், இந்த மறுப்பில் ஓர் உறுதி இருப்பதாகத் தோன்றவில்லை. ‘இதற்குத் தலையாட்டினால், அடுத்தத் தேர்தலில் நமக்கு பெரிய ஆப்பு வைக்கப்பட்டுவிடும்’ என்கிற அளவில் மட்டுமே அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்ததாகத்தான் தெரிகிறது. ஒப்பந்தத் தின் கொடூர முகத்தை உற்றுப் பார்த்து, அதிர்ந்து மறுத்ததாகத் தெரியவில்லை!

கடந்தகால காங்கிரஸ் ஆட்சியின் வர்த்தக மந்திரி ஆனந்த் சர்மா , ’67 விழுக்காடு (சற்றேக்குறைய 85 கோடி) இந்திய மக்கள் பஞ்சைப் பராரிகள். வறுமையிலும், பசியிலும் துடிக்கிறார்கள். அவர்களுக்கு ஒருவேளை சோறாவது உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக, கூடுதல் விலை (மானியம்) கொடுத்து, விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்வது தவிர்க்க முடியாது. இதில் அன்னிய நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது’ என்று ஆரம்பத்தில் சூரத்தனம் காட்டினார், பாலி தீவில் நடந்த மாநாட்டில். ஆனால், ‘சகுனம் சொல்லிய பல்லி, தவிட்டுத் தாழியில் துள்ளி விழுந்து செத்தது’ என்கிற கதையாக, இந்திய விவசாயிகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களையும், தொழில்களையும் சவக்குழிக்கு அனுப்பும் அந்த உடன் படிக்கையில், கடைசியில் கையெழுத்திட்டார்.

இன்று, மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு 1,400 ரூபாய் விலை நிர்ணயித்திருக்கிறது. ‘கட்டுப்படி ஆகவில்லை… 2,500 ரூபாய் கொடுங்கள்’ என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்குகின்றனர். மூத்த விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி கணக்கிட்டால்கூட 2,250 ரூபாய் வருகிறது. ஆனால், பாலி ஒப்பந்தம் என்ன சொல்கிறது தெரியுமா? குவிண்டால் நெல்லுக்கு 1,000 ரூபாய்தான் கொடுக்க வேண்டுமாம்.

2001-ல் தோஹாவில் நடைபெற்ற உலக வர்த்தக மந்திரிகளின் இரண்டாவது மாநாட்டில், ‘வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டு விவசாயிகளுக்குக் கொட்டி கொடுக்கும் மானியங்களை நிறுத்தும் வரை, விவசாயத்தை உலக வணிகத்தில் சேர்க்க முடியாது’ என்று தனி ஒரு மனிதனாக ஓங்கிக் குரல் கொடுத்தார் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அரசில் வர்த்தக மந்திரியாக இருந்த, மறைந்த முரசொலி மாறன்.

இன்னும்கூட வளர்ந்த நாடுகள், தங்கள் நாடுகளில் விவசாயத்துக்கான மானியத்தை நிறுத்தவும் இல்லை… குறைக்கவும் இல்லை. மாறாக, அதிகரித்தபடியே உள்ளன.

கடந்த ஆண்டுகூட தமது நாட்டின் 20 லட்சம் விவசாயிகளுக்கு, 120 பில்லியன் அமெரிக்க டாலரை நேரடி மானியமாக வழங்கி இருக்கிறது அமெரிக்கா. இந்தியாவோ, தமது 50 கோடிக்கும் அதிகமான விவசாயி களுக்கு ஒதுக்கியது… வெறும் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான். இதிலும் பெரும்பகுதி உரமானியம் என்கிற பெயரில் உரக்கம்பெனிகளுக்கும், நகைக் கடன் மானியம் என்கிற பெயரில் மார்வாடிகள் மற்றும் கந்து வட்டிக்காரர்களுக்கும்தான் போய்ச் சேர்ந்தன. விவசாயிகளுக்கு தற்கொலை மட்டுமே மானியமாகக் கிடைத்து வருகிறது.

‘இந்தியாவின் 80% உணவுத் தேவையை, சிறு விவசாயிகள்தான் ஈடுசெய்கிறார்கள்’ என்றே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மானியங்கள்தான் அந்த விவசாயிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இவர்களை எல்லாம் கொன்றுவிட்டு, எப்படி உணவைப் பாதுகாக்க முடியும்?

சுதேசி பேசும், மோடி அரசுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட சதிகார விதேசிகளின் கபட நாடகம் புரிந்திருக்க வேண்டும். அமெரிக்காவின் அழிச்சாட்டியத்தை எல்லோரையும்விட, மோடி நன்கு உணர்ந்திருப்பார். காரியம் ஆகும் வரை காலைப் பிடிப்பது, பிறகு… காலை வாருவது என்பது அமெரிக்க அரசுக்கு கைவந்த கலை. நேற்று வரை ‘மரண வியாபாரி’ என்று முத்திரை குத்தி மோடியைத் தடுத்தவர்கள், இன்று சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது எதற்கு? இந்தியாதான் இன்று உலகின் பெரிய சந்தை. இதில் எப்படியும் கடை போட்டுவிட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் அலைகிறது அமெரிக்கா. பணிந்தால் உணவுப் பாதுகாப்பு மட்டுமல்ல… ஒட்டுமொத்த பாதுகாப்பும் பாழாகும்.

வணிகத்தின் தத்துவமே… லாபத்தைப் பெருக்குவதுதானே (The Philosophy of the business is to maximise the profit).வணிகம் வேண்டும் என்பதற்காக யாராவது வயிற்றை விற்பார்களா? ஆனால், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது என்பதுதான் நிதர்சனம்.

இந்த இழிநிலை இனியும் தொடர வேண்டுமா… சிந்தியுங்கள்!

நன்றி விகடன்

FOLLOW OUR DOMAIN VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

[wysija_form id=”1″]

VISIT OUR GROUP OF DOMAINS

EDITOR – www.tamilagamtimes. com

http://yazhinimaran.com/ FOR MEDICAL ARTICLES
http://isaipriyanka.com/ FOR ECONOMICAL ARTICLES
https://kaviazhaku.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES
http://shanthivinayagam.com/ FOR WOMEN
http://alagusundari.com/ FOR SPIRITUAL