உணவை நஞ்சாக்கியதில், எண்ணற்ற நோய்களுக்குப் புகலிடமாகிப் போனது நம் உடல்…

`உணவே மருந்து; மருந்தே உணவு’ என வாழ்ந்த சமூகம் நாம். இயற்கையாய் விளைந்த காய்கறிகளையும் கீரைகளையும் உண்டு வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு இருந்த ஆரோக்கியம், இன்று ஏன் நமக்கு இல்லை?  பூச்சிக்கொல்லிகளும் செயற்கை ரசாயனங்களும் நமது உணவை நஞ்சாக்கியதில், எண்ணற்ற நோய்களுக்குப் புகலிடமாகிப் போனது நம் உடல். இந்த அவசர வாழ்வில், ஆரோக்கியமான காய்கறிகளுக்கு எங்கு போவது? காங்கிரீட் காடாகிப்போன நகரங்களில், வீடுகளே தீப்பெட்டி அளவுக்குத்தான் இருக்கின்றன. பிறகு, எங்கே செடிகள் வளர்ப்பது? கவலையே வேண்டாம். நம் வீடுகளிலேயே அவரவர் வசதிக்கு ஏற்றவாறு மூலிகைச் செடிகள், காய்கறித் தோட்டம், அலங்காரச் செடிகள், பூச்செடிகள், பழமரங்கள் என வளர்க்கலாம்.

காய்கறிகளுக்கும், கீரைகளுக்கும், பழங்களுக்கும் இனி வெளியே செல்ல வேண்டாம். நம் வீட்டு மொட்டைமாடிக்குச் சென்றாலே போதும். நமக்கானவற்றைப் பறிக்கலாம்… சுவைக்கலாம். ஓய்வுநேரத்தை ஆரோக்கியத்துக்கான முதலீடாக்கி, டென்ஷன், ஸ்ட்ரெஸ் இல்லாத இனிமையான, பசுமையான இல்லத்தை உருவாக்கலாம்.

 

சுவை மிகுந்த, சத்துக்கள் நிறைந்த கீரை, காய், கனிகளை எப்படி நம் வீட்டிலே வளர்ப்பது என்பதைச் சொல்லித்தருகிறார் தோட்டக்கலை நிபுணர் சித்ரா. வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் விளையும் காய், கனி, கீரை, மூலிகைகளின் சிறப்புகளையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் சொல்கிறார் இயற்கை மருத்துவர் நாச்சாள்.


பன்னீர் ரோஜா பூ

தொட்டிகளில் வளர்க்கலாம். பால்கனியில் வளர்க்கச் சிறந்த தேர்வு இது. பன்னீர் ரோஜாவைச் சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உண்டு. பன்னீர் ரோஜாக்கள் தற்போது வெளியில் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் அதில் அதிகப்படியான பூச்சிக்கொல்லிகள் தெளித்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அதனால், வீட்டில் வளர்ப்பது பெஸ்ட்.

பலன்கள்: பன்னீர் ரோஜாவை, வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். சருமத்துக்கும் கூந்தலுக்கும் நன்மை செய்யும். வெந்நீரில் ரோஜா இதழ்களைப் போட்டுக் கொதிக்கவைக்கவும். ஆறிய பின், அந்த நீரைக்கொண்டு முகம் கழுவலாம். இதுவே, பன்னீர் (ரோஸ் வாட்டர்). சருமத்துக்கான சிறந்த டோனர்.


செம்பருத்தி

கிளையை உடைத்து வைத்தாலே வளர்ந்துவிடும். தொட்டி, நிலம் என எங்கும் வளரும். தினமும் தண்ணீர் விட வேண்டும். அதிகம் பூச்சி வரும் என்பதால் இயற்கையான பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கலாம்.

பலன்கள்: செம்பருத்திப் பூவில் இரும்புச்சத்துக்கள் மிக அதிகம். ஃப்ரெஷ்ஷான பூவாக அப்படியே எடுத்துக் கழுவிச் சாப்பிடலாம். மாதவிலக்குப் பிரச்னைகள் குணமாகும். ரத்தப்போக்கு சீராகும். இதயத்துக்கு மிகவும் நல்லது. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பவர்கள், செம்பருத்திப் பூவைச் சாப்பிட்டுவர, நல்ல பலன்களைத் தரும். குழந்தைகளுக்கு, செம்பருத்தி பூவின் சாற்றை வெல்லத்தோடு கலந்து தந்தால் ஆரோக்கியம் மேம்படும்.


கீரை வளர்ப்பு

அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, புளிச்சக்கீரை, பாலக்கீரை போன்றவற்றை வீட்டிலேயே வளர்க்கலாம்.  சன் ஷேடு இருந்தாலே போதும். பொதுவாக, விதைகள் ` 5-10  கிடைக்கின்றன. ஒரு பாக்கெட் விதையில் குறைந்தபட்சம் 50-க்கும் மேற்பட்ட கீரைச் செடிகள் வளரும். விதைகள் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஜாண் அளவு பிளாஸ்டிக் டப்பாவிலும் கீரைகள் வளரும். கீரைகள், குறுகியகாலப் பயிர் வகைகள். மார்க்கெட்டில் விற்கும் கீரைகளில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டிருக்கலாம். குறுகியகாலத்தில் அறுவடை செய்வதால், பூச்சிக்கொல்லி வீரியத்துடன் கீரைகளில் கலந்திருக்கும். இவற்றை நாம் தொடர்ந்து உண்டால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். எனவே, வீட்டில் வளர்க்கப்படும் கீரைகளே பெஸ்ட் சாய்ஸ்.


வெந்தயக் கீரை

வீட்டில் இருக்கும் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் மண்ணில்  புதைத்து, சிறிது தண்ணீர் தெளிக்கவும். வெந்தயக்கீரை இரு வாரங்களுக்குள்ளேயே வளர்ந்துவிடும். இதை ஜன்னல் ஓரங்களில் வளர்க்கலாம். நாள்தோறும் தண்ணீரைத் தெளித்து வந்தாலே, நன்கு வளரும்.

பலன்கள்: வெந்தயக்கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரும். அல்சர் பிரச்னையைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மோருடன் வெந்தயக் கீரை சாற்றைக் கலந்து குடிக்க, தொண்டை முதல் குடல் வரை பலன் கிடைக்கும்.


புதினா

கடையில் வாங்கிய புதினா கட்டுகளிலிருந்து இலையைப் பயன்படுத்துவோம். தூக்கிஎறியப்படும் அந்தப் புதினா தண்டுகளை நட்டுவைக்கலாம். இதற்கு நேரடி சூரியஒளி தேவை இல்லை. சன் ஷேடு கிடைத்தாலே போதும்.

பலன்கள்: புதினாவில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கிறது. நார் சத்துக்கள் நிறைந்துள்ளன. வாய் துர்நாற்றம் இருக்காது. பசி எடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். புதினா டீ சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும்.


கொத்தமல்லி

நாட்டுக் கொத்தமல்லி விதையைத்  தரையில் சிறிது தேய்த்து, ஒருநாள் ஊறவைத்த பிறகு மண்ணில் தூவி, விதைகள் தெரியாதபடி மண்ணால் மறைக்க வேண்டும். 10 நாட்கள் தண்ணீர் தெளித்துவந்தால், கொத்தமல்லி நன்கு வளரும். தேவைப்படும்போது, தழையை மட்டும் கிள்ளிக்கொள்ளலாம். அவை மீண்டும் வளர்ந்துவிடும்.

பலன்கள்: கொத்தமல்லியை சாறு எடுத்தோ, கஷாயமாக்கியோ குடித்தால், நச்சு நீக்கும்; டானிக்காகச் செயல்படும்; கல்லீரல் சுத்தமாகும்; கல்லீரல் பலப்படும். கொத்தமல்லிக்கு, பூஞ்சைத் தொற்றுக்களைக்கூட குணமாக்கும் வல்லமை உண்டு. கொத்தமல்லி இலைகளை அரைத்து, தேனுடன் கலந்து பூசினால், சருமத் தொற்றுக்கள் குணமாகும்.


மூலிகைச் செடிகள்

மூலிகைச் செடிகளை பால்கனியிலேயே வளர்க்க முடியும். ஆனால், கொஞ்சமாவது வெயில்படுவது அவசியம். வீட்டில் மூலிகைச் செடிகள் வளர்ப்பது ஒருவகையில் நமக்கான முதலுதவியும்கூட. இருமல், காய்ச்சல், சளி, முகப்பரு, பூச்சிக்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். பால்கனியில் அல்லது சூரியஒளி விழும் ஜன்னல் ஓரங்களில் வளர்க்கலாம்.

கற்பூரவல்லி

சின்னத் தொட்டி அல்லது ஒரு ஜாண் அளவு பிளாஸ்டிக் டப்பாவில் வளர்க்கலாம். ஜன்னல் மூலமாகக் கிடைக்கும் சூரியஒளி இதற்குப் போதுமானது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை கற்பூரவல்லி.

பலன்கள்: சளி, இருமல், நெஞ்சுச் சளி போன்றவற்றுக்கு கொழுந்து இலை ஒன்றைப் பறித்து, ஒரு கல் உப்புடன் சேர்த்து மென்று விழுங்கலாம். காலையில் சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிட்டால், தூங்கவிடாமல் சளி வெளி வந்துகொண்டே இருக்கும். பசியின்மையால் தவிப்போருக்கு சிறந்த மருந்து.


கோதுமைப் புல்

வெந்தயத்தைப் போலவே முழு கோதுமையை ஒருநாள் முழுவதும் ஊறவிட்டு, மறுநாள் ஸ்வீட் பாக்ஸில் தூவி, நாள்தோறும் நீர் தெளிக்க வேண்டும். 10 நாட்களில் கோதுமைப் புல் வளர்ந்துவிடும்.

பலன்கள்: வாரத்தில் மூன்று நாட்கள் கோதுமை புல் சாற்றைக் குடித்துவந்தால், ரத்தசோகை குணமடையும். உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.


திருநீற்றுப் பச்சிலை

தொட்டியில் வைத்து வளர்க்கும் செடி இது. சிறிய தொட்டியிலேயே நன்றாக வளரும். துளசி போல பல நன்மைகளைத் தரும்.

பலன்கள்: இலையை முகர்ந்தாலே தலைவலி குறையும்.  சருமத்தில் ஏற்படும் புண்களுக்குச் சிறந்த மருந்து. விஷப் புண்களாக இருந்தாலும், நன்கு சீழ் கோத்த கட்டிகளாக இருந்தாலும் சரியாகும். திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி, பருக்கள், கட்டிகளின் மேல் தடவலாம். இலைகளை உரல் அல்லது பாக்கு இடிக்கும் உரலில் இடித்து, சாற்றை எடுத்துச் சருமத்தில் பூசலாம்.


துளசி

சிறிய தொட்டி இருந்தாலே போதும், துளசி வளரும். பெரிய தொட்டியில் வளர்த்தால் துளசி விதைகள் கீழே உதிர்ந்து, புதிய செடிகள் வளரும்.

பலன்கள்: ஆன்டிபயாடிக் செடி என்றே இதனைச் சொல்ல வேண்டும். ஹெவியான உணவை உண்ட பின், செரிக்க முடியாமல் அவதிப்பட்டால், துளசி இலையைச் சாப்பிடலாம். செரிமானத்துக்கு உதவும். பசியைத் தூண்டும். தினமும் ஓரிரு துளசியைச் சாப்பிட நோய்கள் நம்மை எளிதில் அண்டாது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சளி, இருமல், கிருமித்தொற்று போன்றவற்றைக் குணமாக்கும்.


லெமன் கிராஸ்

அனைத்து நர்சரி கடைகளிலும் கிடைக்கும் இந்தச் செடி, புல் போன்ற தோற்றத்தில் இருக்கும். இலையைக் கசக்கிப்பார்த்தால், எலுமிச்சை வாசனை வரும்.

பலன்கள்: கொசுக்களை விரட்டியடிக்கும் மூலிகை லெமன்கிராஸ். இதன் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது. கொசுக்கள் வீட்டினுள் வராது. வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, செரிக்க முடியாமல் அவஸ்தைப்படுவோர், இந்த லெமன் கிராஸை வெந்நீரில் போட்டுக் குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும்.  பிளாக் டீயில், லெமன் க்ராஸை சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.


வெற்றிலை

வெற்றிலைக் கொடியை ஜன்னல் கம்பிகளில் படரவிடலாம். அதிகத் தண்ணீர் செலவும் ஆகாது. நீரைத் தெளித்தாலே போதும். வெற்றிலை வளர காற்றில் கொஞ்சம் ஈரப்பதம் அவசியம். மணி பிளான்ட் வளர்ப்பவர்கள் வெற்றிலையை வளர்க்கலாம்.

பலன்கள்: செரிமானத்துக்கு உதவும். உணவில் துவர்ப்புச் சுவை இல்லாததை உணவுக்குப் பின் சாப்பிடும் வெற்றிலை ஈடு செய்யும். மாதவிலக்குப் பிரச்னைகளைச் சரிசெய்யும். பூச்சிகள் ஏதாவது கடித்தால், வெற்றிலையும் மிளகும் சேர்த்துச் சாப்பிட அலர்ஜி சரியாகும். உடலின் நஞ்சும் முறியும். தலைவலி வந்தால், வெற்றிலையைச் சுட்டுவைக்கலாம்.


வசம்பு

குழந்தைகள் இருக்கும் வீட்டில் வசம்பு அவசியம். இதை சிறு தொட்டியில் வளர்க்க முடியும்.

பலன்கள்: இருமல், தலைவலி, வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கும். நீரில் வசம்புத் துண்டுகளைப் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து துண்டுகளை நீரிலிருந்து நீக்கிவிட்டு குழந்தைகளைக் குளிப்பாட்டினால், சரும நோய்கள் தாக்காது.


தூதுவளை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படக்கூடிய மூலிகை. தொட்டியில் வளர்த்துப் பராமரிக்கலாம்.

பலன்கள்: கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்பு, பற்கள் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். இருமல், சளி, ஆஸ்துமா இருப்பவர்கள், தூதுவளை ரசம் குடிக்கலாம். கை, கால் நடுக்கம் இருப்பவர்களுக்கு அருமருந்து. நரம்பு தொடர்பானப் பிரச்னைகளைச் சரிசெய்யும். மலச்சிக்கலைப் போக்கும்.


கீழாநெல்லி

தொட்டியில் வளர்க்கலாம். மொட்டை மாடி, பால்கனியில் நன்றாக வளரும். இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிட முடியாது. மாதம் இருமுறை சாப்பிடலாம்.

பலன்கள்: மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் கீரை இது. சிறுநீரகப் பாதிப்பு, சிறுநீர்க் கடுப்பு, சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவுகளுக்கு கீழாநெல்லி சூப் அருந்தலாம். அதிகக் கசப்புச் சுவையுடையது என்றாலும், உடலைக் குணமாக்கும் வல்லமை இதற்கு அதிகம். கல்லீரலைச் சுத்தம் செய்யும். நகங்களில் கோடு விழுந்தவர்கள் இந்தக் கீரை சூப்பை மாதம் இருமுறை சாப்பிட்டுவர, அந்தக் கோடுகள் மறையும்.


கருநொச்சி

நொச்சிச் செடிகளை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் வராது. தொட்டியில் செடிகளாக வளர்க்கலாம். இவற்றை பால்கனி அல்லது வீட்டு வாசலில் வளர்க்கலாம்.

பலன்கள்: தீராத தலைவலிக்கு நொச்சி இலைகளை வெந்நீரில் போட்டு ஆவிபிடித்தால், தலைவலி சரியாகும். தலையில் நீர் கோத்த பிரச்னையும் தீரும். நொச்சியின் இலைகளை எரித்தால், இதன் வாசனையால் மற்ற பூச்சிகளும் வராது.


கற்றாழை

பெண்களுக்கு மிகவும் உபயோகமான மூலிகை இது. இளமையைத் தக்கவைக்கும்  கற்றாழையின் இன்னொரு பெயர்  குமரி. சருமத்தின் பெஸ்ட் மாய்ஸ்சரைசர். தொட்டியில் வைத்து வளர்க்கலாம். தேவைப்படும் போது, ஓர் இலையை வெட்டி, அதன் சதைப்பகுதியை மோருடன் கலந்து குடிக்கலாம்.

பலன்கள்: தோல் சீவி, கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து நன்றாகக் கழுவிய பின் மோருடனோ கருப்பட்டியுடனோ சாப்பிட்டுவர கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் தீரும். உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல் குணமாகும். சைனஸ், ஒற்றைத் தலைவலி பிரச்னை இருப்போர் கற்றாழையைச் சருமத்தில், கூந்தலில் பூசுவதைத் தவிர்க்கலாம்.


பிரண்டை

எந்தவிதப் பராமரிப்பும் பிரண்டைக்குத் தேவை இல்லை. அதுவே வளர்ந்துவிடும். சிறிதளவு தண்ணீர்விட்டாலே போதும். நிலத்தில் வைப்பதாக இருந்தால் தண்ணீர் ஊற்றாமல் விட்டாலும் வளர்ந்துவிடும். மருத்துவக்குணங்கள் நிறைந்த இந்தக் கொடியை வீட்டினுள் வளர்க்க முடியாது. மொட்டை மாடி, வெளி இடங்களில் வளர்க்கலாம்.

பலன்கள்: மூல நோயாளிகள் அவசியம் சாப்பிட வேண்டும். மூட்டுப் பிரச்னை இருப்பவர்களுக்கு அருமருந்து. அப்படியே பறித்துச் சாப்பிடக் கூடாது, அரிப்பெடுக்கும். நெய்யிலோ, நல்லெண்ணெயிலோ வதக்கிய பிறகே சாப்பிட வேண்டும். வயதானவர்கள் உள்ள வீட்டில்  பிரண்டை வளர்ப்பது பெரும் உதவியாக இருக்கும்.


மணத்தக்காளி

மணத்தக்காளிச் செடியின் தண்டினைத் தொட்டியில் வைத்தாலே போதும். அதுவே செடியாக வளர்ந்துவிடும்.

பலன்கள்: வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்து. வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். நச்சுக்களை நீக்கும் வல்லமை பெற்றது. மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள், மணத்தக்காளிப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட குணமாகும். நல்ல தூக்கத்தை வரவழைக்கும் ஆற்றல் மணத்தக்காளிக்கு உண்டு.


அருகம்புல்

அருகம்புல் வளர்க்க அதிகப் பராமரிப்பு தேவை இல்லை. தானாக வளரக்கூடியது.

பலன்கள்: உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்போருக்கு, மிகவும் நல்லது. இது ஒரு எனர்ஜி பூஸ்டரும்கூட. காலை நேர டிரிங்க்காகக் குடித்துவந்தால், வயிறு சுத்தமாகும். நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும். ரத்தசோகை பிரச்னை இருப்பவர்கள், அருகம்புல் சாற்றைக் குடித்துவர, ரத்தம் பெருகும். அனைத்துவித சருமப் பிரச்னைகளுக்கும் அருகம்புல் சாற்றை அருந்தலாம்.


சிறியாநங்கை

வீட்டுத் தோட்டம் வைத்துள்ள அனைவரும் இதை வளர்க்க வேண்டும். ஏனெனில், செடிகளை வளர்த்தால் சில விஷ ஜந்துக்கள் வரும்.  சிறியாநங்கைச் செடியை சேர்த்து வளர்த்தால், விஷ ஜந்துக்கள் வராது.

பலன்கள்: ஏதாவது விஷக்கடி ஏற்பட்டால், அதன் மேல் சிறியாநங்கையின் இலைகளைக் கசக்கித் தேய்த்துவிடலாம். இந்த இலைகள் கசப்புச் சுவை உடையவை. இரண்டு நாட்கள் வரை அந்த கசப்புச் சுவை நாக்கில் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.


5 கட்டளைகள்

இயற்கை எரு கலந்த செம்மண், செடியின் வேர்ப் பகுதியை உறுதியாகப் பிடித்துக்கொள்ளும்.

ஆற்றுமணல் சேர்த்தால், வேர்கள் எளிதாக ஊடுருவிச் செல்லும்.

மண்புழு,  தாவரங்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து பூ, காய், கனி வளர உதவும்.

கோகோ பீட் (Coco peat)  எனப்படும் தேங்காய் நார்ப் பொடி, செடிகள் எப்போதும் ஈரமாக இருக்க உதவும்.

சூரிய ஒளி இருந்தால்தான் செடிகள் வளரும். சில செடிகளுக்கு சன் ஷேட் (Sun shade) இருந்தாலே போதும், போதுமான நீர் தேவை.


ஜன்னல் ஓரச் செடிகள்

ஜன்னல் ஓரங்களில் வளரும் செடிகளுக்கு 70 சதவிகிதம் தேங்காய் நாரும் 30 சதவிகிதம் மண்புழு உரமும் சேர்ப்பது நல்லது. கீரைகளையும் ஜன்னல் ஓரச் செடிகளாக வளர்க்கலாம்.


வீட்டை அலங்கரிக்கும் அழகுச் செடிகள்

பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்கள் இல்லாதவர்களும் வீட்டினுள் செடி வளர்க்க முடியும். தற்போது வீட்டுக்குள் வளர்ப்பதற்கான செடிகள் கடைகளில் கிடைக்கின்றன.

தண்ணீர் அதிகமாகச் செலவு ஆகாது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்றினால் போதும்.

பூக்கும் செடிகளை மட்டும் வாரத்துக்கு ஒருமுறை, ஒரு மணி நேரம் வெயில்படும் இடத்தில் வைத்திருந்து, மீண்டும் வீட்டினுள் வைத்துக்கொள்ளலாம்.

மணிபிளான்ட் செடி ஒரு மாதம் வரை பச்சை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

சாதாரண கண்ணாடி பாட்டில், கிளாஸில் நீர் நிரப்பி, கடைகளில் விற்கும் பூக்களை அதில் வைக்க 7 நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

சின்னச் சின்ன குடுவை போன்ற பானைகளில்கூட தேங்காய் நாரைக் கொட்டி செடி வளர்க்க முடியும்.

மண், தேங்காய் நார் இல்லாத சின்னக் கண்ணாடி பவுலில் ஜெல்லிகளைக் கொட்டி, மூங்கில் செடிகளை வளர்க்கலாம்.


பிளாஸ்டிக் கவரில் வளரும் காய்கறிச் செடிகள்

ஐந்து கிலோ குரோ பேக்கில் (Grow bag) காய்கறிச் செடிகளை வளர்க்கலாம். வேஸ்ட் பிளாஸ்டிக் பக்கெட் போன்றவற்றில்கூட வளர்க்க முடியும். நீர் வெளியேற வேண்டியது அவசியம். குரோ பேக்கின் அடியில் 25 பைசா அளவுக்கு ஓட்டை போட்டு, அதை தேங்காய் சிரட்டை அல்லது மண் சட்டி ஓடுகொண்டு  அடைக்கவும். இது நீர் சிறிது சிறிதாக வெளியேற உதவும். ஓட்டையை அடைக்கவில்லை எனில், மண், நீர் முழுவதுமாக வெளியேறி இடம் அசுத்தமாகும். அடியில் இலை, தழைகளை ஒரு படிவம் (Layer) போட்டு, பிறகு மண், உரம், தேங்காய் நார் போடலாம். முள்ளங்கி, கொத்தவரங்காய், பீன்ஸ், செடி அவரை, கேரட், பீட்ரூட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற செடிகளையும் தொட்டியில் வீட்டிலே வளர்க்கலாம்.

சிறிய இடத்தில் வெண்டையை லேசாக ஊன்றிவைத்தாலே போதும். ஆழமாக நடக் கூடாது. விதை தூவி, தண்ணீரைத் தெளிக்க வேண்டும். ஊற்றக் கூடாது. ஒரு குரோ பேக்கில் மூன்று நான்கு வெண்டைச் செடிகளை வளர்க்கலாம். அதுபோல, அவரையையும் லேசாக ஊன்றிவைத்தாலே போதும். சின்ன கவரில் கத்தரி, மிளகாய், தக்காளி ஆகிய விதைகளை மேலாகத் தூவி, ஒரு விரல் நீளச் செடியாக வந்த பின், பெரிய தொட்டியில் மாற்றி வைத்துக்கொள்ளவும். ஒரு குரோ பேக்கில் ஒன்று அல்லது இரண்டு கத்தரிச் செடி மட்டுமே வளர்க்க முடியும்.

கொடிகளுக்கு பெரிய தொட்டி அவசியம். சிறிய இடத்தில் வைத்தால் பூக்கும். ஆனால், காய்க்காது.

முள்ளங்கி, முட்டைக்கோஸ், குடமிளகாய், கேரட் ஆகியவற்றை விதைகளாகத் தூவி வளர்க்கலாம். தொட்டியில் வளர்த்தால், ஒன்றிரண்டு மட்டுமே வளரும். நிலத்தில் வைத்தால், நிறைய விதைகள் செடிகளாக வளரும். பாத்தி முறையில் தூவிவிடுவது நல்லது.


மாடியில் பழ மரங்கள்

தற்போது மரங்களை மொட்டைமாடியில் வளர்ப்பதுதான் ஃபேஷன். மொட்டைமாடியில் பெரிய தொட்டியில் சாத்துக்குடி, எலுமிச்சை, வாழை, கொய்யா, பனீர் பழம் (வாட்டர் ஆப்பிள்), செர்ரி, அன்னாசி போன்ற மரங்களைத் தொட்டியில் வளர்க்கலாம்.

ஒட்டுமரக் கன்றுகளாகக் கிடைப்பதை வாங்கி நட்டால், மரங்கள் நன்றாக வளரும்.

நர்சரியில் கிடைக்கும் வாழைக் கட்டைகளை வாங்கி நடலாம்.

அன்னாசியை நிலத்தில் வளர்த்தால் சீக்கிரமே நன்றாக வளரும்.

ஒரு கோணிப்பை அளவு மணலில் மூன்று கரும்புகளை வளர்க்க முடியும்.

கொய்யா, சப்போட்டா, முருங்கை மரங்கள் வளர ஒரு கோணிப்பையே போதுமானது.


செடி வளர தொட்டி அவசியமா?

செடிகள் வளர தொட்டியோ, நிலமோதான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப், தேவைப்படாத வீட்டு உபயோகப் பொருட்கள், கடைகளில் விற்கும் குரோயிங் பேக் (Growing bag), டயர், கோணிப்பை போன்றவற்றைக்கூடப் பயன்படுத்தலாம்.

எதைச் செடி வளர்க்கப் பயன்படுத்தினாலும், தண்ணீர் வெளிவர அடியில் 25 பைசா அளவுக்கு ஓட்டை போட வேண்டும். ஓட்டையைத் தேங்காய் ஓடுகொண்டு லேசாக அடைக்கலாம். தண்ணீர் உடனடியாக வெளிவருவதைத் தடுத்து சிறிது சிறிதாக வெளிவர உதவும்.


சூரியஒளி எந்த செடிவகைகளுக்குத் தேவை?

பூப் பூத்து, காய், கனி கொடுக்கும் செடி வகைகளுக்குச் சூரிய வெளிச்சம் அவசியம். கீரை மற்றும் அழகுச் செடிகளுக்கு சன் ஷேடு இருந்தாலே போதும். அதாவது, ஜன்னல் ஓரங்களில் கிடைக்கும் சூரிய ஒளியே போதும்.


ஆரோக்கியமான மண் எது?

எந்தச் செடி வளர்த்தாலும் 20 சதவிகிதம் இயற்கை எரு கலந்த செம்மண் இருப்பது அவசியம்.  இதனால், செடியின் ஆயுள் நீடிக்கும். காய்ப்புகள் அதிகமாக இருக்கும். மேலும், செடிகள் நன்றாக வளர ஆற்றுமண், மண்புழு உரம், தேங்காய் நார்ப் பொடி தேவை. தற்போது பெரும்பாலானோர், தேங்காய் நார்த் பொடியிலேயே செடிகளை வளர்க்கின்றனர். இது தவறு. வெறும் தேங்காய் நாரில் வளர்த்தால் வேர் அழுகிவிடும். காய்ப்புகள் அதிகமாக இருக்காது. செடியின் வேர் பிடிப்புடன் இல்லாமல் போகும். இதைத் தடுக்க செம்மண் சேர்க்கலாம்.


தேங்காய் நார் ஏன்?

தண்ணீர் ஊற்ற முடியாமல்போனால், தேங்காய் நார், இரண்டு நாட்கள் வரை ஈரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். மேலும், தொட்டிகள் எடை இருக்காது.


தரையைப் பாதுகாக்கும் வழிகள்

மொட்டைமாடியில் தண்ணீர்படுவதால், கட்டடம் வீணாகும் என நினைத்து, பலரும் மாடியில் செடிகளை வளர்க்கப் பயப்படுகின்றனர். வாட்டர் ப்ரூஃப் பெயின்ட்டை ஒரு கோட்டிங் அடித்தால், தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும். தரையும் வீணாகாது. தண்ணீர் தளத்தினுள் இறங்காமல் இருக்க, பாலிதீன் ஷீட் போட்டுக்கொள்ளலாம். செங்கல்களை இருபுறமும் அடுக்கி, நடுவில் கம்புகளை வைத்து, அதன் மேலும் செடிகளை வளர்க்கலாம். கனம் இல்லாத குரோ பேக்கில் செடிகளை வளர்க்கலாம். முழுமையாக மண் போடத் தேவை இல்லை. தேங்காய் நார் சேர்க்கலாம். இதனால் எடை அதிகரிக்காது. பில்டிங்கும் வீக் ஆகாது.


வீட்டு உரம்

வீட்டில் இடம் இருப்பவர்கள், இயற்கையான முறையில் உரம் தயாரிக்கலாம். இதற்கு இலைச் சருகு, சமையல் அறைக் கழிவுகள் போன்றவற்றை ஒரு கோணிப்பையில் சேகரிக்க வேண்டும். கோணிப்பையில் மட்கும் குப்பைகளைப் போடும் போது, அதன் மீது ஒரு கைப்பிடி அளவுக்கு மண் அல்லது மண் புழு உரம் போட்டுக் கட்டிவைக்க வேண்டும். வாரம் ஒருமுறை இரண்டு நிமிடங்கள் திறந்து வைத்தால் போதும். அதனால், உள்ளே உருவாகியிருக்கும் வெப்பம் வெளியேறிவிடும். பிறகு, மண்ணைக் கிளறி மூடிவைக்க வேண்டும். மூன்று மாதங்களிலேயே இயற்கை உரம் தயாராகிவிடும்.


பூச்சித் தாக்குதலுக்கு…

வேப்ப எண்ணெயை நேரடியாக செடிக்கு அடிக்கக் கூடாது. வேப்ப எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிதளவு சோப்பு தூள் கலந்து தண்ணீரில் நீர்த்து பிறகு அடிப்பதுதான் சரியான முறை.

வேப்ப இலைச் சருகுகள், குப்பைகளை வெறுமனே மண்ணில் போட்டால், வேர்ப்பூச்சி தாக்காது.

ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலைகளை எடுத்து, மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதைச் செடிகளின் மீது தெளித்தால், பூச்சிகள் தாக்காது. இதற்கு செலவும் ஆகாது.


எறும்புத் தொல்லைக்கு…

தண்ணீரை அதிகமாக ஊற்றினால், ஈரத்துக்காக எறும்பு வரும். எறும்புகள் போக, எறும்பு மருந்தைப் போடலாம். செடியைச் சுற்றிலும் ஓரமாகத் தூவலாம். தேவையான தண்ணீர் ஊற்றினாலே எறும்பு வராது.


தண்ணீர் எவ்வளவு?

ஒரு ஐந்து லிட்டர் குரோ பேக்குக்கு வெயில் இருந்தால் இருவேளை தண்ணீர் விடவும்.  இல்லை எனில், ஒருவேளை நன்றாகத் தண்ணீர்விட்டாலே போதும்.

ஊருக்குப் போகிறோம் என்றால், சொட்டு நீர்ப்பாசனம் போல ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, சின்ன ஓட்டை போட்டு தலைகீழாகத் தொங்கவிடலாம்.


தண்ணீர் அதிகமானதை எப்படிக் கண்டுபிடிப்பது?

செடியின் வேர் லூஸாக இருக்கும்.

வேர் அழுகல் நோய் செடிக்கு வந்திருக்கும்.

செடி துவண்டுபோகும். இலைகள் பழுப்பாக மாறியிருக்கும்.


தண்ணீர் குறைவை எப்படிக் கண்டுபிடிப்பது?

செடி வறண்டுபோகும். மண் வறட்சியாக பிளவுபட்டிருக்கும்.

இலைகள் காய்ந்துபோகும்.


தண்ணீர் ஊற்றும் நேரம்

காலை 7 மணிக்கு முன், மாலை 5 மணிக்குப் பின் தண்ணீர் ஊற்றுவது நல்லது. புதிதாக விதைப்பதையும் நடுவதையும் காலை 7 மணிக்குள் செய்தால், செடிகள் நன்றாக வளரும். வானிலை சூடாக இருக்காது. செடிகள் புத்துயிர் பெற்று வளர சிறந்த நேரம் காலைவேளைதான்.


வீட்டுத் தோட்டத்தின் பலன்கள்

வீடு குளிர்ச்சியாகும்.

மின் கட்டணம் 30 சதவிகிதம் குறையும்.

ஆர்கானிக் முறையில் விளைந்த காய், கனிகளில்  சுவையும் அதிகம்; சத்துக்களும் அதிகம். பக்கவிளைவுகள் இருக்காது; நோய்கள் அண்டாது.

வீட்டுக்குத் தேவையான காய், கனி, கீரைகள் கிடைப்பதால், வெளியில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இருக்காது.

வீட்டு பட்ஜெட்டில் பெருமளவு சேமிப்பாகும்.

பசுமையான சூழலைப் பார்க்கும்போதும் அதனோடு வசிக்கும்போதும் டென்ஷன், தலைவலி, மன உளைச்சல்  பிரச்னைகள் ஓரளவு தடுக்கப்படும்.

மனம் மற்றும் உடல் தொடர்பான நன்மைகளைப் பெற முடியும்.

குழந்தைகளைத் தோட்டக்கலையில் ஈடுபடுத்தும்போது, அவர்கள் உணவை வேண்டாம் என்று சொல்கிற வாய்ப்புகள் குறையும். தான் வளர்த்த செடியின் மூலம் கிடைக்கும் காய்களை விரும்பிச் சாப்பிடும் பழக்கம் ஏற்படும்.