உயிர் பணியும் – திருப்பணியும்

மின்சார ரயில் சப்தமும் – வாகன இரைச்சலும் படிந்து உறைந்த மூளையில்,

கொலுசு சப்தம் மூளையின் உயிர் பாகம் வரை கேட்டது;

கோவில் தெப்பகுள படிக்கட்டில் இவள் கால் நனைத்து திரும்புகையில்,

அமர்ந்திருந்த என் முகத்தில் தாவணி பட்டது, காற்றில் ஆக்ஸிஜனை விட அதிக சதவிகிதம் தாவணி வாசமிருந்தது;

முகர்வதும், நுகர்வதும் ஐம்புலன்களின் உயிர்ப் பணி ; ஆலயத்தில் மட்டும் அடக்கி வைத்தல் மானுடருக்கு சாத்தியமா ?

ஈர விழிகளும் , ஓரப்பார்வையும் மறந்து தீபமும் – மூலவரின் திரு உருவமும்  கண்களில் காட்சியாகும், உள்ளாவதில்லை

கோயில் மணி ஒசையும் , கொலுசு சப்தமும் ஒரே ஒலி அளவில் மூளையில் பதியுமா ?

வாசனை வாயுக்களும், ஒளி உருவ சிலைகளும், பிரார்த்தனை ஒலிகளும் என புலன் வழி பக்தி புறமனதில் சேரும் !

புலன் வழி செய்தியெல்லாம் மூளையில் மூலக்கூறுகளால், அறிவு படிமமாகும்,

மூளை, கனவும் – காட்சிப் பிழைகளும் – தர்க்கமும் – அறிவு தாக்கமும் நிறைந்த  உடலின் பௌதீக கருவி ;

பிழை கொண்ட கருவியால் நிலை கொண்ட ஞான பிரபஞ்சம் அறிவது கடினம் ;

உருவம் மறைந்து – உணர்வுகள் கரைந்து – உயிர் பாதை அறியும் உயிர் ஞானப் பக்தி உய்வது எப்படி ?

உடலோடு உயிர் சேர்ந்த உயிர் ரகசியம் உணர்வது எப்போது ?

உடல் மறந்து – புலன் கடந்து சுகம் உணரும் உடல் வழி உயிர் பணி ;

உடல் கடந்து – அகம் அறிந்து உயிர் ஞானம் அடைவது திருப்பணி ;

உயிர்ப்பணிக்கும் / திருப்பணிக்கும் களமாகும் நம் உடல் கர்மயோக ஆலயம் அன்றோ !