உயிர் பானம் ( தொடர் )

[subscribe2]

DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என குடும்பக் கட்டுப் பாடு பிரசாரம் செய்துவந்த அரசு இப்போது, ‘ஒன்று பெற் றால் ஒளிமயம்’ என சொல்லி வருகிறது. ‘நாமே இருவர், நமக்கு எதற்கு ஒருவர்?’ என அரசாங்கம் கேள்வி கேட்கும் காலம் சீக்கிரமே வரக்கூடும்.

நாகரிகம் கற்ற காலத்திலிருந்தே குடும்பக் கட்டுப்பாடு குறித்த அக்கறை மக்களுக்கு இருந்து வந்திருக்கிறது. விதம் விதமான தடுப்பு முறைகளைப் பல நாடுகளில் முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பலவித உபகரணங்களை மக்கள் பயன்படுத்தினர். ஆனால், இவை நூறு சதவிகிதம் நம்பகமானவை என்று சொல்ல முடியாது. இவற்றை மாட்டிக்கொண்டு உறவு கொண்டும்கூட பல பெண்கள் கர்ப்பமாகி, குழந்தை பெற்றனர்.

1960-ம் ஆண்டுகளில் கருத்தடை மாத்திரையும், காப்பர் ‘டி’ போன்ற கருத்தடை வளையங்களும் அறிமுகமான பிறகுதான், குடும்பக் கட்டுப்பாடு மகத்தான முன்னேற்றம் கண்டது. பெண்களும் கர்ப்பம் பற்றிய பயத்தை உதறித் தள்ளி விட்டுத் தைரியமாக இருக்க முடிந்தது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரின் செக்ஸ் செயல்பாட்டில் பெரிய மாற்றம் வந்தது. அதேசமயம், ‘இந்தக் கருத்தடை சாதனங்கள் மக்களைக் கெடுக்கும். கள்ளத்தனமான உறவுகளைத் தேடுகிறவர்களின் எண்ணிக்கை இதனால் அதிகமாகும்’ என கலாசார பாதுகாவலர்கள் ஒருபக்கம் எதிர்ப்பு தெரிவித்தபடிதான் இருந்தனர்.

பழங்காலத்திலிருந்து இந்த நவீன யுகம் வரை கர்ப்பத்தைத் தவிர்க்கும் பொறுப்பு பெண்களின் தலையில்தான் விழுகிறது. இப்போதும்கூட அரசாங்கத்தின் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெண்களை மையப்படுத்தியே இருக்கிறது. அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பெண்களுக்குதான் அதிகமாகக் கருத்தடை ஆபரேஷன் செய்கிறார்கள். ஆண்களுக்கு செய்கிற ‘வாசக்டமி’ ஆபரேஷன் ரொம்ப சிம்பிளானது. ஆனால், செய்து கொள்கிறவர்கள் குறைவு.

முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட கருத்தடை மருந்து, முதலை சாணம்தான். கி.மு. 1800-ம் ஆண்டு இதைப் பயன்படுத்திப் புரட்சி செய்தவர், அழகி கிளியோபாட்ரா. முதலை சாணத்தை காயவைத்துப் பொடி யாக்கி, அத்துடன் சமையல் சோடா மாவு, தேன் ஆகிய இரண்டையும் கலந்து நன்றாகக் குழைத்து பசை மாதிரி ஆக்கி, செக்ஸுக்கு முன்னால் உபயோகிப்பாராம் கிளியோபாட்ரா. உறவின்போது விந்தணுக்கள் உள்ளே நுழைந்ததும், அவற்றின் வேகத்தை இந்த மருந்து தடால டியாகக் குறைத்து, எல்லாவற்றையும் கொன்றுவிடுமாம்.

கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிஸ்டாட்டில், ‘ஆலிவ் ஆயிலையும், தேவதாரு மர எண்ணெயையும் கலந்து, செக் ஸுக்கு முன்னால் உபயோகித்தால் கர்ப்பம் ஆகாது’ என எழுதி வைத்திருக்கிறார்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த சொரானஸ் என்ற மகப்பேறு நிபுணர் கர்ப்பத்தைத் தடுக்க ஒரு டிப்ஸ் கொடுத்தார். இரும்பு அடிக்கும் கொல்லுப் பட்டறைகளில், இரும்பை பழுக்கக் காய்ச்சிய பிறகு அதை சுத்தியலால் அடித்து, தேவையான வடிவத்துக்கு வந்தபிறகு தண்ணீரில் போட்டுக் குளிர வைப்பார்கள். ‘இப்படி காய்ச்சிய இரும்பைக் குளிரவைக்கப் பயன்படுத்திய தண்ணீரைக் குடிக்கும் பெண்கள் கர்ப்பிணி ஆக வாய்ப்பில்லை’ என்பதுதான் சொரானஸ் கொடுத்த டிப்ஸ்.

அரேபிய பாலைவன நாடுகளில் வியாபாரிகள் மாதக்கணக்கில் ஒட்டகங்களின் முதுகில் மூட்டைகளை வைத்து எடுத்துப் போவார்கள். அப்படி சுமை தூக்கிச் செல்லும் ஒட்டகங்கள் கர்ப்பமாகி விட்டால், அவற்றால் பயணம் செய்ய முடியாது. அதனால் ஒட்டகத்தின் ஆசனவாய் வழியாகக் கூழாங்கற்களை அதன் கருப்பைக்குள் போட்டு விடுவார்கள். கருப்பையில் இப்படி வேறு ஏதோ ஒரு பொருள் இருக்கும்போது ஒட்டகம் கர்ப்பமாகாது (இந்த ‘ஒட்டக டெக்னிக்’தான் இப்போது உலகம் எங்கும் பாப்புலராக இருக்கும் கருத்தடை வளையங்களுக்கு அடிப்படையாக இருந்தது!).

கி.பி. எட்டாம் நூற்றாண்டுவாக்கில் வட இந்தியாவில் பெண்கள் ஒரு விநோதமான உபாயத்தைக் கையாண்டனர். கல் உப்பை தேன் அல்லது எண்ணெயில் நனைத்து, உறவுக்கு முன் உபயோகித்தனர். இப்படி செய்தால் கர்ப்பம் தரிக்காது என்று அவர்கள் நம்பினர். அரேபிய பெண்களும் இதேபோல எண்ணெயை ஒரு மிருதுவான துணியில் நனைத்து உபயோகிப்பது வழக்கம். சீனா போன்ற ஆசிய நாடுகள் பலவற்றில் துணிக்குப் பதிலாக பேப்பரில் எண்ணெய் தடவி, பெண்கள் பயன்படுத்தினர்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வேறொரு பழக்கம் இருந்தது. தேன் கூடு இருக்கிறதே… அதில் தேனைப் பிழிந்து எடுத்தபிறகு மெழுகு மாதிரி பொருள் மிச்சமிருக்கும். அதைப் பயன்படுத்தினால் கர்ப்பமடைய வாய்ப்பில்லை என அங்கு பெண்கள் நினைத்தார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை ‘புருஹத்ரண்யக உபநிடதம்’ என்ற நூலில் கர்ப்பத்தைத் தடுக்க மந்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது. காமசூத்திரம், கர்ப்பத்தைத் தடுக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகள் பற்றி சொல்கிறது. எந்தெந்த நாட்களில் செக்ஸ் வைத்துக் கொண்டால் கர்ப்பத்தைத் தவிர்க்கலாம் என மனு தர்ம சாஸ்திரத்தில் இருக்கிறது.

இப்படி வரலாற்று காலத்திலிருந்து குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக நிகழ்ந்த ஆராய்ச்சிகளுக்குப் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு பிரேக் விழுந்தது. தொழிற்புரட்சி ஆரம்பித்த நேரம் அது! பல நாடுகளும் படையெடுப்புகளை நிகழ்த்தித் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதில் பிஸியாகின. ‘நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருந்தால்தான் படையில் சேர வீரர்கள் கிடைப்பார்கள்… தொழிற்சாலைகளுக்குக் குறைந்த கூலியில் தொழிலாளர்களும் கிடைப்பார்கள்’ என தலைவர்கள் நம்பினர். அதனால் குடும்பக் கட்டுப்பாடு முயற்சிகளை அவர்கள் தேசவிரோத செயலாகக் கருதினர்.

ஆனால், கருத்தடை சாதனங்களை கலாசார பாதுகாவலர்கள் எதிர்த்தால்-சமூக ஆர்வலர்களோ இதை ஆதரித்தனர். ‘மக்கள் தொகை குறைவாக இருக்கும்போதுதான் வாழ்க்கைத் தரம் மேம்படும். எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும்படி செய்தால் மட்டுமே ஒரு நாடு முன்னேறும்’ என்றனர் இவர்கள்.

1798-ல் தாமஸ் மால்தூஸ் என்ற பாதிரியார், ‘மக்கள் தொகை தத்துவம் பற்றிய ஒரு கட்டுரை’ என்ற நூலை வெளியிட்டார். ‘‘உலகத்தின் மக்கள் தொகை எப்போதும் இரட்டிப்பாகப் பெருகுகிறது. ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக இப்படி அதிகரிக்கிறது. ஆனால், உற்பத்தியாகும் உணவின் அளவு இந்த வேகத்தில் அதிகரிக்கவில்லை. ஒரு கட்டத்தில் உற்பத்தியாகும் உணவைவிட, உண்பதற்கு தயாராக இருக்கும் மக்கள் பெருகி விடுவார்கள். அந்த நிலையில் விளைநிலங்கள் சக்தியிழந்து தரிசாகும்… பஞ்சமும், நோய்களும் தலைவிரித்தாடும்… பிணக்குகள் பெருகி சமூக ஒழுங்கு குலைந்து போர்மூளும்’’ என்று எச்சரித்தார் அவர்.

இதன்பிறகு அவரது பெயரில் ‘மால்தூசியன் லீக்’ என பல நாடுகளில் அமைப்புகள் தோன்றின. அமைப்புரீதியாகக் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் செய்த முதல் கோஷ்டியினர் இவர்கள்தான்! இதில் இந்தியாவும், குறிப்பாக தமிழகம் காட்டிய வேகமும் பிரமிக்க வைப்பது!

DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product