உலகின் மிகப் பெரிய இயந்திரம் மனித மூளை..

நாம் யோசனை செய்ய, நடக்க, நிற்க, கேட்க, சுவை, வாசனையை உணர… என அத்தனைக்கும் பொறுப்பு மூளைதான். மூளை, மின்னணு சமிக்ஞைகளை உருவாக்குகிறது. இது மூளையில் உள்ள சில ரசாயனங்களுடன் வினைபுரிந்து உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புடனும் தொடர்புகொள்கிறது. இந்த சிக்னல்களைக் கொண்டுசெல்லும் ஊடகமாக நரம்பு மண்டலம் இருக்கிறது. உடலின் மொத்த எடையில்  இரண்டு சதவிகிதம்தான் மூளை. ஆனால், மொத்த ஆக்ஸிஜனில் 20 சதவிகிதத்தை மூளைதான் பயன்படுத்துகிறது. 20 சதவிகித ரத்தம் மூளைக்குத்தான் செல்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் தடை ஏற்பட்டு, ஆக்சிஜன் கிடைக்கவில்லை எனில், இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் மூளை செல்கள் இறக்கத் தொடங்கிவிடும்.

மூளையில் 86 பில்லியனுக்கும் மேற்பட்ட நியூரான்கள் உள்ளன. இதை அமேசான் மழைக்காடுகளில் உள்ள மரங்களின் எண்ணிக்கைக்கு ஒப்பிடலாம். ஒவ்வொரு நியூரானும் 10 ஆயிரம் நியூரான்களுடன் தொடர்பில் உள்ளது. இப்படி, ஒவ்வொரு நியூரானுக்கும் உள்ள தொடர்பைக் கணக்கிட்டால் அது 1,000 டிரில்லியன் வரும்.  இதை, அந்த மரங்களில் உள்ள இலைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடலாம். உலகில் உள்ள தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளைவிட மூளையின் நெட்வொர்க் பிரமாண்டமானது. உலகின் மிகப் பெரிய இயந்திரம் மனித மூளையாகத்தான் இருக்க முடியும். மூளையைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், அதன் பகுதிகளைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

மூளையை இரண்டு அரைக் கோளங்களாகப் பிரிக்கலாம். அரைக் கோளத்தை பெருமூளை (Cerebrum), சிறுமூளை (Cerebellum), லிம்பிக் சிஸ்டம் (Limbic System), மூளைத்தண்டு (Brain Stem) என நான்காகப் பிரிக்கலாம். இதில், பெருமூளைதான் மூளையின் மிகப்பெரிய பகுதி. பல்வேறு செயல்படுகள் இங்கேதான் நடக்கின்றன. முன் மடல், சுவர் மடல், பின்பக்க மடல், நெற்றிப்பொட்டு மடல் என பெருமூளையை நான்கு மடல்களாகப் பிரிக்கலாம்.

மூளை டவுட்

“ஆணின் மூளையைவிட பெண்ணின் மூளை சிறியது என்பதால், அவர்களின் அறிவுத்திறன் குறைவாக இருக்குமா?”

“ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளை அளவில் சிறிய வித்தியாசம் உள்ளது. இதற்கு, அவர்கள் உடல் அமைப்பு காரணமாக இருக்கலாம். இதற்கும் அறிவுத்திறனுக்கும் தொடர்பு இல்லை. உடலியல் அமைப்பு காரணமாக செயல்திறன் வேறுபடலாம். ஆனால், ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும் போது நியூரான்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை பாலியல்ரீதியாகச் சொல்ல முடியாது. ஒரே பாலினத்துக்குள்கூட, கற்றல்திறன் மாறுபடுவதைக் காணலாம். அறிவுத்திறன் அவரவர் மூளையின் செயல்திறனைப் பொருத்து மாறுபடுமே தவிர, ஆண் பெண் என்று பாகுபாடு ஏதுமில்லை.”

சுவர் மடல்(Parietal Lobe): யாராவது நம்மைத் தொட்டால் உணர்கிறோம் அல்லவா, இதற்கு இந்த சுவர் மடல்தான் காரணம். வலி என்ற உணர்வையும் இந்த சுவர் மடல்தான் ஏற்படுத்துகிறது. ஆனால், மூளைக்கு வலி என்பதே இல்லை என்பதுதான் ஆச்சர்யம். இது மூளையின் மையப்பகுதியில் இருக்கிறது. உச்சந்தலையில் ஏதேனும் காயம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் மொழித்திறன், கூர்ந்துபார்க்கும் திறன், குறைந்துவிடும்.

பின்பக்க மடல் (Occipital Lobe): நாம் பார்க்க இந்த மடல்தான் காரணம். பார்க்கும் காட்சியைக் கண்கள், மூளைக்கு சிக்னல்களாக அனுப்புகின்றன. இதை, இந்த மடல் ஆய்வுசெய்து, அது என்ன என உணரச் செய்கிறது. இது, பின் மண்டைப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி பாதிக்கப்படும்போது, பார்வைத்திறன், நிறம், வார்த்தை, பொருட்களை அறியும் திறன் பாதிக்கப்படும்.

சிறுமூளை: ‘சின்ன மூளை’ என்று சொல்லலாம். பெருமூளையைப் போன்ற பணிகளைச் செய்வதுடன், நம்முடைய உடல் அமைப்பு, இயக்கம், தடுமாற்றம் இல்லாமல் இருக்க, இந்தப் பகுதிதான் உதவிபுரிகிறது. இது பெருமூளைக்கு அடியில், மிகச்சிறிய வரிவரியான அமைப்புடன் காணப்
படுகிறது.

முன் மடல் (Frontal Lobe): மொழி, காரணம் அறிதல், இயங்குதல் போன்ற முக்கிய வேலைகள் இங்கேதான் கண்காணிக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் காயம் காரணமாகப் பாதிப்பு ஏற்படும்போது, சமூகமாக வாழும்திறன் பாதிப்பு, கவனக்குறைவு, பாலியல் செயல்திறன் பாதிப்பு போன்றவை ஏற்படும்.

நெற்றிப்பொட்டு மடல் (Temporal Lobe): நினைவுகளை உருவாக்கவும் காதால் கேட்கப்படும் சப்தத்தை உள்வாங்கி உணரவும் உதவுகிறது. இது மூளையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி பாதிக்கப்பட்டால், மொழித்திறன், பேச்சு, நினைவாற்றல் பாதிக்கப்படும்.

லிம்பிக் சிஸ்டம்: இதை உணர்ச்சிபூர்வமான மூளை என்று சொல்லலாம். இங்கேதான், ஹைபோதாலமஸ் சுரப்பி மற்றும் அமிக்டலா (Amygdala), தாலமஸ், ஹிப்போகாம்பஸ் என்ற முக்கிய பகுதிகள் உள்ளன.