உள்ளீடற்ற குவளைகள்

அவனி மாடசாமி ரசித்த கவிதை

என் குழந்தையின் தண்ணீர் தேவைக்காக நீர் நிரப்பிய குவளை ஒன்று கொடுத்தனுப்புவேன். தாகம் எப்போது வரும் என்று தெரியாததால் எப்போதும் அது குழந்தையின் தோளில் மாட்டப்பட்டிருக்கும்.
எப்படியும் அந்த குழந்தையின் மூளையில் தந்தை என்ற எண்ணக் குவளை உருவாக்க பட்டிருக்கும். அவற்றில் எதை கொண்டு நிரப்புவது ? புத்தி தாகமெடுக்கும் வேளைகளில் இந்த குவளையைத்தான் குழந்தை பயன்படுத்தும். அதனால் கொஞ்சம் கவனமாகத்தான் நிரப்ப வேண்டும். என் தந்திரங்களை நிரப்பினால் அவைகள் நீண்ட காலம் பயன் தராது; என் முன்னோர்கள் தந்த புத்திமதிகளை அந்த குவளைக்கு கொண்டு செல்லலாம் என்றால், கால மாற்றத்தால் அவை எனக்கே சரியாக பயன்படுவதில்லை; கடவுள் நம்பிக்கைகள் குவளைக்குள் அடங்காது. ஏற்கனவே அதில் சினிமாவும், கவர்ச்சி விளையாட்டு பந்தயங்களும் இரசனைகளை கொட்டியிருக்கும். அவைகள் தானாகவே காலாவதியாகிவிடும் தன்மை கொண்டவை. அதனால் கவலை இல்லை.

தாமாகவே உதித்தது தீர்வு; குழந்தைகளின் மூளையில், சூழ் நிலையில் தன்னை தகவமைக்கும் திறன் இயல்பாகவே உண்டு. அந்த திறனின் உற்பத்தி சேமிப்புகள் தானாகவே அந்த குவளையில் சேர்மானமாகும். அவைகள் உள்ளீடற்ற குவளைகளாக இருப்பதுதான் நலம்.