‘எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை!’- ஜெ.

சென்னை: “எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத்தான்; தமிழக மக்களுக்காகத்தான்” என்று அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், ” இந்திய அரசியல் வானில் தன்னிகரற்ற பேரியக்கமாக ஒளி வீசிக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 44-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, என் உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை, எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, இந்த மடல் வழியாகச் சந்திப்பதில் பேருவகை அடைகிறேன்.

எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத்தான்; தமிழக மக்களுக்காகத்தான். ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம்முடைய இயக்கத்தைப் பற்றியும், தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் தான் நான் சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்.

தமிழக மக்களின் மகிழ்ச்சிதான் எனது லட்சியம்.  தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும்தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன்.  இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பல்வேறு அரசியல் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.  அடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில், இதற்கு முன் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் பெரிய வெற்றியை அதிமுக பெற்றாக வேண்டும்.  அதுவே நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, சூளுரை ஏற்கும் தருணமாக இந்த ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் அமைந்திட வேண்டும்.

உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசு, துறை தோறும் ஆற்றி வரும் மகத்தான மக்கள் நலப் பணிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.  அனைவரும் மகிழும் வண்ணம் மக்களுக்குத் தொண்டாற்றுங்கள்.  பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வரும் மக்கள் பிரதிநிதிகளாகிய கழக நிர்வாகிகளும், கழக நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் உடன்பிறப்புகளும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும் செய்யுங்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உங்கள் ஒவ்வொருவருடைய பணியும் அமையட்டும்.

வெற்றி ஒன்றே நம் குறிக்கோள் என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள்.

எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் பணிகள் அமையட்டும். வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்திலேயே தொடங்கிடுவீர் என்று உங்கள் அனைவருக்கும் அன்புக் கட்டளை இடுகிறேன் ” என்று கூறியுள்ளார்.