எப்படி செய்ய வேண்டும் நிதித் திட்டமிடல்?

மக்குத் தெரிந்த வழிகளில் பணத்தைச் சிறுக சிறுக சேமித்தாலே அது எதிர்காலத்தில் ஒரு பெரிய தொகையாகக் கிடைக்கும்!

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய நிதி ஆண்டு பிறக்கப்போகிறது. இந்த நிதி ஆண்டில் நம்முடைய வரவையும் செலவையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டியது அவசியம்.  எதிர்காலத்தில் ஏற்படப் போகும் இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்க நிதித் திட்டமிடல் மிக மிக முக்கியம். எதிர்காலத்துக்கான நிதித் திட்டமிடலை எப்படி செய்வது என்பது குறித்து  விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் நிதி ஆலோசகர் அபுபக்கர்.

திட்டமிட்டுத்தான் பாருங்களேன்!

‘‘போரில் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியம். நிதித் திட்டமிடலில் பட்ஜெட்தான் முதல் பாகம். எனவே, முதலில் நம்மைப் பொருளாதார ரீதியில் பாதுகாத்துக் கொள்ள நமக்கு வரும் வருமானத்தை ஆண்டின் தொடக்கத்திலேயே (ஏப்ரல் முதலே) கணக்கிட்டு சிறிய அளவில் பட்ஜெட் தயார் செய்யுங்கள். இந்த பட்ஜெட்டில் வருங்காலத்தில் உங்களுக்கு வரப்போகும் கூடுதல் கமிஷன், சம்பள உயர்வு, ஊக்குவிப்புத் தொகை போன்றவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

இனி உங்கள் நிதித் திட்டமிடலை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மூன்று படிநிலைகளாக பிரித்துச் சொல்கிறேன்.

1. அவசிய செலவுகளுக்கு சேமியுங்கள்!

மாதம் பிறந்தவுடன் வந்த சம்பளத்தில், அடுத்த ஒரு வருடத்துக்குத் தவிர்க்க இயலாத செலவுகளான காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு கல்விக் கட்டணங்கள், இன்ஷூரன்ஸ் பிரீமியம், வங்கிக்கு செலுத்தும் இஎம்ஐயில் 25 – 30%, ஆண்டின் இறுதியில் செலுத்தவேண்டிய வரிகள் போன்றவைகளை கணவன், மனைவி இருவரின் பெயரிலும் ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்கி, அதில் பணத்தைச் செலுத்துங்கள். இந்தப் பணம் எந்தச் செலவுகளுக்குக்காகக் கணக்கில் இருக்கிறதோ, அந்தச் செலவுகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

2015 ஏப்ரல் மாதம் தொடங்கி 2016 மார்ச் வரையான ஒரு வருட இறுதியில் உங்கள் கையில் ரூபாய் 50,000 – 2,50,000 வரை எமர்ஜென்சி ஃபண்டாகக் கட்டாயம் இருக்க வேண்டும். இதற்குத் தகுந்தாற் போல் மாதாமாதம் ஒரு சிறு தொகையை ஆர்டியில் செலுத்தி வரலாம் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். உங்கள் முதலீடு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இணையாக வருமானத்தை ஈட்டும். அது மட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் உங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். எஃப்.டியை போல் குறிப்பிட்ட முதலீட்டுக் காலம் வரை வைத்திருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

இப்படி பட்ஜெட் போட்டுச் சேமிப்பது முதலில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், மேற்கூறியபடி திட்ட மிட்டு சேமித்து வந்தால் 3 – 5 ஆண்டுகள் கழிந்து அடுத்த ஒரு வருடத்தில் செய்யப்போகும் கட்டாயச் செலவுகளான பள்ளி, கல்லூரிக் கட்டணங்கள், இஎம்ஐ-க்கு தேவையான தொகை உங்கள் கையில் இருக்கவேண்டும். அதேபோல் எமர்ஜென்சி ஃபண்டாக கையில் 2.5 லட்சம் ரூபாயும் இருக்கும். அப்படி இருந்தால், உங்கள் திட்டமிடல் சரியான பாதையில் செல்கிறது என்பதை நீங்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

2. செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்!

மேற்கூறிய கட்டாயச் செலவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.  ஆனால், நாம் அன்றாடம் செய்யும் செலவுகளான உணவு, உடை, எரிபொருள், லைஃப் ஸ்டைல் பொருட்கள் போன்றவைகளில் நாம் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். வாரம் இரண்டுமுறை அசைவ உணவு உண்பவர்கள், வாரம் ஒருமுறையாகக் குறைத்துக் கொள்ளலாம். ஒரு சட்டையை 3,000 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பெரிய பிராண்டில் எடுப்பதற்குப் பதில், பாதி விலையில் ஒரு நல்ல இந்திய பிராண்டின் சட்டையை வாங்கலாம். தெருமுனையில் இருக்கும் கடைக்குச் செல்வதற்குக்கூட இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்குப் பதில் நடக்கலாம். இதனால் மருத்துவனைக்குச் செய்யும் செலவும், எரிபொருளுக்குச் செய்யும் செலவும் மிச்சம். உங்கள் உடலுக்கு ஆரோக்கியமும்கூட!

இப்படி எல்லாம் மிச்சம் செய்தால், கோடி ரூபாயா மிச்சப்படுத்த முடியும் என்று கேட்கலாம். இப்படி நமக்குத் தெரிந்த வழிகளில் பணத்தைச் சிறுக சிறுக சேமித்தாலே அது எதிர்காலத்தில் ஒரு பெரிய தொகையாகக் கிடைக்கும். எனவே, நம்பிக்கையோடு மிச்சப்படுத்துங்கள்.

3. எதிர்கால இலக்குகளை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள்!

நம்மில் பலர் எது இலக்கு என்பதே தெரியாமலேயே இருக்கிறார்கள். உதாரணமாக, உங்கள் தாய், தந்தைக்கு மருத்துவக் சிகிச்சை, குழந்தைகளின் கல்வி, திருமணம், உங்கள் ஓய்வுக்காலத்துக்குத் தேவையான பணத்தைச் சேமிப்பது போன்றவை உங்கள் கடமைகள். இவைகளைக் குறிப்பிட்ட காலத்தில் செய்துமுடித்தே ஆகவேண்டும். இவற்றை தேவை என்று சொல்ல வேண்டும்.

ஆனால், சொந்த வீடு வாங்க விரும்புவது, இமயமலைக்கு யாத்திரை செல்ல விரும்புவது, வாழ்வில் ஒருமுறையாவது வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லவேண்டும், ஆடி காரை வாங்க விரும்புவது என்பவை எல்லாம் உங்கள் இலக்குகள். இந்த இலக்குகளை நீங்கள் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, இதற்கு ஒரு குறிப்பிட்ட காலவரம்பும் இல்லை.

இவற்றில் எது முக்கியம், முக்கியமான இலக்குகளை நிறைவேற்ற எவ்வளவு செலவாகும் என்பதைப் பட்டியலிடுங்கள். அதற்குத் தகுந்தாற் போல் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் பி.எஃப் தொகையை நீங்கள் ஓய்வுபெறுவதற்குமுன் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் வேறு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தால்கூட, பழைய நிறுவனத்தின் மூலம் கிடைத்த பி.எஃப் தொகையை அந்தப் புதிய கணக்கோடு இணைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தொகை மட்டும்தான் உங்களுக்குத் தெரியாமல் பிற்காலத்தில் பெரிய தொகையாகக் கிடைக்கும்.

இவையெல்லாம் ஓ.கே. ஆனால், நான் சம்பாதிப்பதை நிறுத்திவிட்டால் என் குடும்பம் அவ்வளவுதான்; என்னை நம்பித்தான் குடும்பம் இருக்கிறது என்றால் வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்தே ஒரு நல்ல தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் அல்லது லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளுங்கள். வேலைக்குச் சேர்ந்த அன்று எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் இப்போது உடனடியாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையானதை நீங்களே செய்துகொண்டால்தான் உங்களுக்கும், உங்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும், சூழ்ந்துள்ளவர்களுக்கும் நல்லது” என்று முடித்தார் அவர்.

இதுவரை எந்த நிதித் திட்டமிடலும் செய்யாமல் காலத்தை ஓட்டியவர்கள், இனி இவர் சொல்கிறபடி செயல்பட்டால், எதிர்காலத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாமே!