எலக்ட்ரிக் ஹார்லி !

சாதாரண பைக்குகளைத் தயாரிக்கும் நிறுவனங்களே எதிர் காலத்தை அச்சத்துடன் நோக்கியிருக்கும்போது, சத்தத்தையே ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டாகக் கொண்டிருக்கும் ஹார்லி டேவிட்சன், எவ்வளவு தூரம் தயாராக இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில்தான் ஹார்லியின் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக். ஹார்லி கான்செப்ட் பைக்கான லைவ்வயர் எப்படி இருக்கிறது?

நிற்கும்போதே டைனமிக்காகத் தெரிகிறது லைவ்வயர். பழசும் புதுசும் கலந்த ரெட்ரோ ஸ்டைலிங்குடன், எதிர் காலத்துக்கான பைக்கை டிஸைன் செய்த ஹார்லியைப் பாராட்ட வேண்டும். சாண்ட்-ஃபினிஷ்டு அலாய் ஃப்ரேம், செம ஸ்டைல்.

TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸ்பிளேவில் பேட்டரி, ரேஞ்ச், டெம்ப-ரேச்சர், ஸ்பீடு, ரைடிங் மோடு போன்ற தகவல்கள் ஒளிர்கின்றன. பவர், ரேஞ்ச் என இரண்டு ரைடிங் மோடுகள் உள்ளன. ரேஞ்ச், முழுக்க முழுக்க க்ரூஸிங்குக்கான மோடு. பவர் மோடு, பைக்கை விரட்டுவதற்கு!

எலெக்ட்ரிக் இதயம்

பெல்ட் டிரைவ் மூலம் இயங்கும் லைவ்வயர் பைக்கில் லித்தியம் -அயான் பேட்டரியுடன் ஆயில் கூல்டு எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. பைக்கின் ஒட்டுமொத்த சக்தி 75bhp, 7kgm டார்க். 0-100 கி.மீ வேகத்தை அடைய, வெறும் 4 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. டாப் ஸ்பீடு மணிக்கு 150 கி.மீ-யில் லிமிட் செய்யப்பட்டிருந்தாலும், அதை அடைவது சிரமமாக இல்லை.
ஒரு சார்ஜில் 85 கி.மீ தூரம்!

வழக்கமான கிளட்ச், கியர் லீவர்கள் இல்லை என்பதால், ஆக்ஸிலரேட்டரை மட்டும் திருகிக்கொண்டு பறக்கலாம். ஹார்லி டேவிட்சனின் ட்ரேட்மார்க் ‘தட்… தட்’ சத்தம் கேட்டுப் பழகிவிட்டு, இந்த பைக்கின் ‘ஜெட்’ விமானச் சத்தம் தரும் அனுபவம் வித்தியாசமாக உள்ளது. திராட்டில் ரெஸ்பான்ஸ் ஸ்மூத். எலெக்ட்ரிக் மோட்டார் தரும் ஸ்மூத்னெஸ் நிச்சயம் கம்பஷன் இன்ஜின்களில் கிடைக்காது. கியர்கள் இல்லை என்பதால், ஆக்ஸிலரேஷன் ஒரே சீராக வெளிப்படுகிறது. பைக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 85 கி.மீ தூரம் வரை செல்ல முடியும். பைக் தயாரிக்கப்பட்டால், இது இன்னும் அதிகரிக்கும் என்கிறது ஹார்லி.

கையாளுமை

கொஞ்சம் ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷனைக்கொண்டிருக்கிறது லைவ்வயர். முழுவதும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள், மோனோ ஷாக் Showa நிறுவன சஸ்பென்ஷன்கள் உள்ளன. ஓட்டுதல் தரம், வழக்கமான ஹார்லி பைக்குகளைப் போல இல்லை. வளைவுகளிலும் ஸ்போர்ட்டியான ஃபீட்பேக்கை அளிப்பதால், கையாளுமை நன்றாகவே இருக்கிறது. மிஷ்லின் டயர்கள் நல்ல கிரிப் அளிக்கின்றன. சிங்கிள் ரோட்டார் டிஸ்க் பிரேக்குகள் ‘கப்’பெனப் பிடிக்கின்றன.

எப்போது விற்பனைக்கு வரும்?

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், மேஜிக் போல லைவ்வயர் பைக் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது ஹார்லி. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இந்த பைக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாம் ஹார்லி டேவிட்சன். அதனால், நிச்சயம் லைவ்வயர் தயாரிப்புக்கு வரும் என எதிர்பார்க்கலாம். லைவ் வயர் பைக் மூலம் தனக்கு மட்டும் அல்ல, பைக் உலகத்துக்கே ஒரு புதிய பாதையைக் காட்டி உள்ளது ஹார்லி!