ஒரு சங்க காலப் பயணம்!

 

துரை ஒத்தக்கடையில் இருக்கும் யானை மலை வரலாற்று சிறப்பு வாய்ந்ததொரு இடமாக இருக்கிறது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மலையில் சமணர் குகைகள், சங்ககால கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள் என்று பல முக்கியமான இடங்கள் இருக்கின்றன.

 

அறிவிப்புப் பலகையே பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கிறது.

யானை மலையில் முதலாவதாக நம்மை வரவேற்பது சமணர் குகை. மலையில் வெட்டப்பட்டு இருக்கும் சுமார் 40, 50  படிகளில் மேலேறிப்போனால் குகையை அடையலாம். அந்த இடம் ஒரு சுற்றுலாத்தலம் என்றாலும் கவனிப்பின்றிதான் கிடக்கிறது. உள்வாங்கிப் போய்க்கொண்டே இருக்கும் குகைக்குள் இரண்டு அல்லது மூன்று ஆட்கள் தங்கலாம். குகையின் முகப்பில் சமண தீர்த்தங்கரின் சிற்பம், பாகபலி, அம்பிகா ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் இருக்கின்றன. அதன் கீழேயே வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. குகையின் பக்கவாட்டில் மிக அழகான மகாவீரரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. எல்லாச் சிற்பங்களிலும் சுதை பூசப்பட்டு இருந்தாலும் காலப்போக்கில் அவை அழிந்துபோய் இன்று அதன் எச்சங்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

 

இந்தச் சமண குகைகளின் முக்கியத்துவம் என்ன?

100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான விஷயங்களைக்கூட வெளிநாடுகளில் பத்திரமாகப் பாதுகாக்கிறார்கள். ஆனால், பல நூற்றாண்டுகள் தொன்மையான சின்னங்கள்பற்றி நம் அரசு கவலை கொள்ளவில்லை. இந்த மலையில் ரொம்பப் பழமையான பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இருக்கின்றன. எழுத்து என்பது ரொம்ப காலம் முன்பே தோன்றிவிட்டது. கி.மு.1500- வரையான எழுத்து வடிவங்கள் பற்றிய விவரங்கள் இருக்கின்றன. அதன் பின்னர் 1,000 வருடங்களுக்கு என்ன மாதிரியான எழுத்துகள் உபயோகத்தில் இருந்தன என்று தெரியவில்லை. ஆனால் கி.மு.500 முதலான கல்வெட்டுகள் மீண்டும் நமக்குக் கிடைத்துள்ளன.

சமணர் குகை!

பண்டைய மனிதன் தன்னுடைய எண்ணங்களைப் பொறித்துவைக்க மூன்று விஷயங்களைப் பயன்படுத்தினான். கல்வெட்டு, காசு மற்றும் மண்பாண்டங்கள். அந்தக் காலத்து வாழ்க்கையை அறிந்துகொள்ள இவையே நமக்குச் சான்றாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் சமணம் மிக முக்கியமான மதமாக இருந்து வந்திருக்கிறது. சுவேதம்பரர்கள், திகம்பரர்கள் என்று இரு பிரிவினராகச் சமணர்கள் இருந்தார்கள். திசையையே ஆடையாய்க் கொண்டவர்கள் என்பதே திகம்பரர்கள் ஆனது. எனவே சமண முனிவர்களுக்கு வேண்டிய வசதிகளை அந்தந்த ஊரின் அரசர்களோ தானாதிபதிகளோ செய்து வந்திருக்கிறார்கள். குகையை சீர்செய்து படுக்கை போன்றவற்றைச் செய்து கொடுத்து, அந்தக் குகையின் முகப்பில் தங்கள் பெயரையும் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

தீர்த்தங்கரர் இயக்கன் இயக்கி!

மிகப் பழமையான கல்வெட்டுகள் நமக்குக் கிடைத்து இருக்கின்றன. ஒரு கல்வெட்டில் ‘ஆங்கோல்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது பொதுவாகத் தமிழில் பயன்பாட்டில் இல்லாததொரு வார்த்தை. தொல்காப்பியத்தில் மட்டுமே காணக் கிடைக்கிறதென்றால் அதன் முக்கியத்துவம் எத்தகையது? அதே போலத்தான் சில வரலாற்று உண்மைகளை எளிதில் விளங்கிக்கொள்ள கல்வெட்டுகள் உதவுகின்றன. அசோகர் காலத்தைச் சேர்ந்த கலிங்கக் கல்வெட்டு ஒன்றில் சேர, சோழ, பாண்டியர்களோடு சதபுதோ என்றொரு வார்த்தை இருந்திருக்கிறது. அது என்னதென்று தெரியாமல் நிறைய நாட்கள் அறிஞர்கள் குழம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டு ஒன்றால் அத்தனை குழப்பமும் ஒரே நாளில் தீர்ந்துபோனது. சதபுதோ என்பது சத்யபுத்ரா என்பதின் மருவு என்றும் அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறிக்கக் கூடியது என்றும் பொருளாகிறது.

மகாவீரர் அம்பிகா சிற்பங்கள்!

சேரர்களின் தலைநகராக இருந்த வஞ்சியான இன்றைய கரூரில் ஒரு கல்வெட்டு கிடைத்து இருக்கிறது. ஒரு சமண முனிவருக்கு ஒரு இளவரசன் முடிசூடிக் கொண்டபோது குகை வெட்டிக் கொடுத்ததைப் பற்றிய கல்வெட்டு. அதில் மூன்று சேர அரசர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அவர்கள் யாரென்றால், பதிற்றுப்பத்தின் ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் பத்தின் நாயகர்கள். இதன் மூலம் சங்கப்பாடல்கள் என்பவை கற்பனை அல்ல என்பதும், அந்த அரசர்கள் பற்றிய தகவல்களும் கிடைத்து இருக்கின்றன என்பது குறிப்பிடப்பட வேண்டியது. வெகு சமீபமாக வத்தலகுண்டு அருகில் மிகப் பழமையான நடுகற்களும் கிடைத்திருக்கின்றன. ஆக, மிகப் பழமையானதொரு கலாசாரத்தின் எச்சமாகத்தான் நாம் இருக்கிறோம்.

சுதை பூசப்பட்ட மகாவீரரின் மிகப்பெரிய சிற்பம்!

சமண குகையிலிருந்து கிளம்பி லாடன் கோயிலுக்குப் போகலாம். மிகப் பெரிய குடைவரைக் கோயிலின் உள்ளே முருகன் தெய்வானையின் (வள்ளி?!!) சிற்பங்கள், வேலின் மீதிருக்கும் சேவல் மற்றும் மயிலின் சிற்பங்கள், மற்றும் இரண்டு மனிதர்களின் சிற்பங்களும் இருக்கின்றன. மிகப் பிரசித்திப்பெற்ற யோக நரசிம்மர் கோயிலின் பின்னே இருக்கும் இந்தக் கோயிலை யாருக்கும் தெரிவதில்லை என்பது சோகமான விஷயம்.

லாடன் கோயில் குடைவரைக் கோயில்!

லாடன் என்பது கல்லாடன் என்பதின் மாறிய வடிவமாக இருக்கலாம். ஏனென்றால் தமிழில் ரா, லா ஆகியவை முதலெழுத்தாக வராது. எனவேதான் ராமன், ராவணன் ஆகியோருக்குத் தமிழ் மண்ணுடன் தொடர்பு இருக்காது எனத் தோன்றுகிறது. முருகன் என்பவன் தமிழ் மண்ணின் தெய்வமாக இருந்தவன் பின்பு கடவுளாக்கப்பட்டான். அவரவர் வீட்டில் இருக்கும் குலதெய்வம் என்பதே தெய்வம். அது ஒரு மதம் சார்ந்து பெரிய தளத்துக்குப் போகும்போது கடவுளாக மாற்றப்படுகிறது. நாம் இன்று பார்க்கும் முருகனும் சங்க கால முருகனும் வெவ்வேறு. தமிழ்க்கடவுளான முருகன் பின்பு சிவனின் மகனாக்கப்பட்டான். அவன் ஒரு குறத்தியை மணம் புரிவதா? எனவே அவனுக்குத் தெய்வானை என்றொரு பெண்ணிடம் திருமணம் முடிகிறது. அவள் இந்திரனின் மகள். இப்படியாகத்தான் மார்க்கங்கள் கட்டமைக்கப்படுகின்றன. நரசிம்மம் என்பது வெற்றியின் சின்னம். எனவே பாண்டியர்கள் ஏதேனும் வெற்றியைக் கொண்டாடும் வகையில், சமணர்களைக் கழுவில் ஏற்றியதாகக்கூட இருக்கலாம், அதனைக் கொண்டாட இங்கே நரசிம்மத்தின் சிலையை உண்டாக்கி இருக்கலாம். பிற்பாடு வந்த வைஷ்ணவ மக்கள் முருகனைப் பின்தள்ளி இன்று இந்த இடம் நரசிம்மர் கோயிலாக மாறிப் போய்விட்டது. அதன் பின்னர் நரசிம்மர் கோயில் செழித்தோங்க தமிழ்க் கடவுளான முருகன் கோயில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

பண்டைய காலத்தில் முருக வழிபாடு என்னவாக இருந்தது?

சங்க காலத்து முருகனின் குணாதிசியங்களே வேறாகச் சொல்லப்படுகிறது. ஒரு சங்க காலப்பாடல். தலைவனைப் பிரிந்து பசலையால் மெலிந்து நோயுற்றவளாக இருக்கிறாள் நாயகி. அவள் வீட்டில் இருப்பவர்கள் அவளுக்கு முருகன் பிடித்திருப்பதாகச் சொல்லி பூசாரியைக்கொண்டு குணம் செய்விக்கிறார்கள். ஆக முருகன் என்பவன் பெண்களோடு மையல் கொள்ளும் ஒரு தெய்வமாக இருந்து வந்திருக்கிறான். இன்றைக்கு எல்லாம் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் குடைவரைக் கோயில்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கின்றன. அதற்காக எழுப்பட்டக் கோயில்கள் இல்லை என்று அர்த்தமில்லை. நமக்குத் தெரிந்து பழமையான,  கோயில் கும்பகோணத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில்  ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால், சமீபமாக சுனாமி தாக்கிய தமிழ்நாட்டின் வடபகுதியன்றில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த  கோயில் கிடைத்துள்ளது. அது ஒரு முருகன் கோவில் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

இங்கே ஒரு சிற்ப நகரம் அமைக்க முந்தைய அரசு தீர்மானம் நிறைவேற்றியதால் இப்போதும் யானைமலை ஆபத்தில்தான் இருக்கிறது. தொன்மங்களின் உறைவிடமாக இருக்கும் யானைமலைக்கு எந்தத் தீங்கும் வராமல் இருக்கும் என அரசு உறுதிகூற வேண்டும் என்பதுதான் இங்கு வாழும் மக்களின் கோரிக்கையும் ஆசையும். புராதனச் சின்னங்களுக்கும் தொன்மங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமேயில்லை. ஆனால், அவற்றைச் சரியாகப் பாதுகாப்பதில்தான் சிரத்தை இல்லாதவர்களாக இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். மாறும் என நம்புவோம்!

நன்றி விகடன்

 

VISIT OUR GROUP OF DOMAINS

FOLLOW OUR BLOGS BY MAIL TO GET NEW UPDATES IN YOUR INBOX

EDITOR – www.tamilagamtimes. com

CONTACT : tamilagamtimes@post.com

knowledgeocean2014.blogspot.com FOR E BOOKS IN 75 SUBJECTS 

 

madhuvanthana.wordpress.com FOR ENTERTAINMENT ARTICLES

yazhinimaran.wordpress.com FOR MEDICAL ARTICLES

isaipriyanka.wordpress.com FOR ECONOMICAL ARTICLES

kitchapacha.wordpress.com FOR CURRENT AFFAIRS

kaviazhaku.wordpress.com FOR POLITICAL & SOCIAL ARTICLES

sarumathipappa.wordpress.com FOR STUDENTS

devadharsinivinayagam.wordpress.com FOR AUTOMOBILE

shanthivinayagam.wordpress.com FOR WOMEN

kaviazhakuvinayagam.wordpress.com FOR AGRICULTURE

alagusundari.wordpress.com FOR SPIRITUAL