ஒரு புத்தகம் போதுமே…..

நமக்கு மிக எளிதான யோசனை தோன்றிவிடும் ஆலோசனைகள் ஏன் மிகப்பெரிய அரசியல் கட்சிகள் நடத்தும் தலைவர்களுக்கு தோன்றவில்லை என நமக்கு புரியவில்லை. நம் அன்றாட உபயோகத்தில் பயன்படுத்தும் அனுகூல இயந்திரங்களை நமக்கு இலவசமாய் தருவதில் போட்டி போடும் இவர்கள், பரிணாம வளர்ச்சியில் பணக்காரத்தனத்தை எட்டியவர்கள் இல்லை என்பது – அரசியல் சாசன சட்டங்களை தவிர – நம் அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியும்.

இவர்கள் நடைமுறை வாழ்வில், பணம் ஈட்டுவதற்கான வெற்றி காரணிகளை எப்படி அடையாளங்கண்டு கொண்டார்கள் – அடையாளங்கண்ட சந்தர்ப்பங்களில் மற்றவர்களை விட சாதுர்யமாய் சூழ் நிலையை தனக்கு மட்டுமே சாதமாக பயன்படுத்திய சூட்சுமம் – வாழ்நாள் முழுவதும் உழைப்பதற்கு தொண்டர்களும் / தந்திரமாய் செயல்பட்டு , சந்தேகம் வராத அளவுக்கு பொது பணங்களை கையாடல் செய்பவர்களை மந்திரிகளையும் செயல்படுத்தும் ஐந்தறிவு ஜீவ தந்திரங்கள் – மிக குறுகிய காலங்களில் பணம் ஈட்டுவதும், பணம் ஈட்டிய விபரம் பொது வாழ்வில் தெரிய வந்தால் , எதுவுமே நடக்காதது போல வாழ்வதற்கு பழகும் உள் மன குணமும் எப்படி உங்களுக்கு கைவசமானது என்ற ரகசியத்தை புத்தகமாக எழுதி, ஒரு குடும்பத்திற்கு ஒன்று என வழங்கிவிட்டால் ஒவ்வொருவரும் தமது சாமர்த்தியத்திற்கு தகுந்தாற்போல் புத்தகத்தை புரிந்து கொண்டு வாழ்வில் முன்னேறலாம் அல்லவா ?

இப்படி, தொலைநோக்கு பார்வை இல்லாத – பொருளாதார தர்க்க ஞானத்தில் பொருந்தாத தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும்போதோ – அதை வெளியிடும்போதோ அவர்களுக்கு, நாம் இந்த அறிக்கைகளை வெளியிடும்போது மக்களால் கேள்விகேட்கபடுவோம் – நம் அறிவீனம் பரிகாசத்துக்கு உள்ளாகும் என்ற உணர்வு இல்லாமல் போன காரணம் என்ன தெரியுமா ?

இவர்களுக்கென்று, இவர்கள் கட்சியின் கொள்கை(?) ஈர்ப்பால் ஈர்க்கப்பட்ட கூட்டம் ஒன்றும் கிடையாது என்பது அவர்களுக்கும் தெரியும். எதையாவது – எப்படியாவது செய்து பணம் சேர்த்து விடும் கும்பலும் , அந்த பணத்தை குறிவைத்து அவர்களை சார்ந்து வாழும் ஒட்டுண்ணி இன உயிரின மனிதர்களும்தான் இவர்கள் வாக்கு வங்கியாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வகை வாக்கு வங்கி மனிதர்களிடம் தேர்தல் அறிக்கை பற்றி கருத்து மதிப்பீடு கேட்பது, நேரம் விரயம் செய்யும் வேலை.

இவர்கள் பொது மக்கள் நலன் கருத்தில் கொண்டு – திட்டமிட்டுதான், தேர்தல் அறிக்கை தயார் செய்தார்கள் என்றால் இதன் சாதக பாதங்களை பொதுமக்களோடு நம் இணையம் வழியாக பொது விவாதம் செய்ய தயாரா ? தேர்தல் அறிக்கை குறித்து கேள்வி எழுப்ப பொதுமக்கள் தயாராக உள்ளனர்.

அரசியல் கட்சிகள் தயாரா ? நம் உடலுக்காக சுற்று சூழலையும் – நம் அறிவு சார்ந்த வாழ்க்கைக்காக நாட்டிம் ஜனநாயகமும் காக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.

editor@tamilagamtimes.com