ஓரக்கண் நியாயங்களும் – ஒற்றைக் கண் பார்வையும்

தமிழ் பாரம்பரியம் – கலாச்சாரம் காக்க களப் போராட்டம் மேற்கொள்ளும் என் சகோதர – சகோதரிகளுக்கு !

கலாச்சாரம் காப்பதிலும் – பண்பாடு வளர்ப்பதிலும், உங்கள் அக்கறையில் எனக்கு உடன்பாடு உண்டு. பாரம்பரிய கலாச்சாரம் காப்பதில் என் தமிழ் உயிர்ப்போடு இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.jalli kaatu

என் ஐயங்கள் சிலவற்றை – தங்களோடு பகிர்வதில் தீர்வு காணலாம் என விழைகிறேன்.  

எழுத்து பிழையோ – கருத்து பிழையோ , “ ஏறு தழுவுதல் “  என்பது \”ஜல்லி கட்டு “ ஆகிவிட்டது. அது போகட்டும். உச்ச நீதிமன்றமும் ஏதோ உத்தரவிடுகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

என் வினா என்னவென்றால், ஏறு தழுவுதல்- தான் விளையாட்டு  என்றாலும் – தழுவும்போது காளை விலகி ஓடுகிறது என்றால் தழுவுதலில் ‘இறுக்கம்’ இருக்குமோ ? என ஐயம் எழுகிறது. தழுவும்போது அன்பு வெளிப்படலாம் ; அங்கு வீரத்திற்கு அங்கு என்ன வேலை ? தழுவுதல் சுகம் என்றால் தழுவப்படும் உயிர் வசப்பட வேண்டும். ஆனால் மிரண்டு ஓடுகிறது ! என்ன காரணம் இருக்க போகிறது ? புலி துரத்தும் போது உயிர் காக்க ஓடுவதற்கும் – ஜல்லி கட்டில் காளை ஓடுவதற்கும் வித்தியாவம் என்ன ? நீங்களே கூறுங்கள்.chasing

உயிர் காத்தலும் – உயிர் பெருக்கலும் மட்டுமே வாழ்வியலாக கொண்ட பிராணிகளுக்கு , நீங்கள் தழுவத்தான்  அதனை நோக்கி ஓடி வருகிறீகள் என்பது மட்டும் புரிந்து விடுமா என்ன ?

நம் வீரம் – கலாச்சாரம், அந்த காளையை அடக்குவதிலா ? தழுவுவதிலா ? என்பதுதான் என் ஐயம்.   சரி போகட்டும் ?

‘வீரம் ‘ – ‘ விளையாட்டு ‘ இரண்டிற்கும் பொருள் என்ன ? வீரம் என்பது குணம் சார்ந்தது. நம்பிக்கை – பணிவு – விசுவாசம் – மரியாதை – அன்பு – துரோகம் … போன்று வீரமும் ஒரு வகை குணம். அழிவுகளை – ஆபத்துக்களை எதிர்த்து எழும் ஒரு உயிர் உணர்ச்சி.

விளையாட்டு என்பது விதிகளுக்குட்பட்டு வினையாற்றும் ‘ஒரு துரித செயல்பாடு’. வீர விளையாட்டு என்பது புரியவில்லை? ஐந்து அறிவு பிராணிகளை தழுவுவது – அடக்குவது எப்படி வீரத்தில் சேரும் ?

சம பலமுள்ள மனிதர்களோடு விளையாடும் பாரம்பரிய விளையாட்டான கபடி – சிலம்பாட்டம் எங்கே போனது ? அதன் அழிவில் உங்கள் கோபம்  ஏன் எழ வில்லை ? என் ஐயம் நியாயமம்தானா ?

ஒரு ஆற்றின் ஆன்மாவை அழிப்பது போல் – ஆற்றின் நீர் வழிப் பாதையை ஆக்கிரமித்து – மணல் அள்ளி – நீர் ஆதாரங்களை சீரழிக்கும்போது – அந்த அரக்கர்கள் மேல் உங்கள் கலாச்சார கோபம் ஏன் வரவில்லை என்பதும் என்  ஐயம்.

நாட்டு மாடுகளை அழிப்பதுதான் ஒரு அமைப்பின் ( பீட்டா ) வேலை என்று கூறுகிறீகள். வேறு ஒரு மிருக இனத்தினை வணிக ரீதியாக சந்தைப்படுத்துவதற்கு , நாட்டு மாடுகளை அழிக்கிறார்கள் என்கிறீர்கள். ஜல்லி கட்டு என்ற ஒற்றை கலாச்சாரத்தில்தான் ஒரு உயிரினத்தின் வாழ்வியல் அடங்கியிருக்கிறது என்பது, உலக உயிரின தத்துவத்தோடு தர்க்க ரீதியாக முரண்படுகிறது.  உலகத்திற்கே தத்துவ ஞான மரபினை வழங்கிய ‘திருக்குறள் ‘ மறை தந்த தமிழ் இனம், பிழையான கருத்தியலோடு வரலாற்றில் பதிவிடலாமா ?

ஒரு ஆற்றின் ஆன்மாவை அழிப்பது போல் – ஆற்றின் நீர் வழிப் பாதையை ஆக்கிரமித்து – மணல் அள்ளி – நீர் ஆதாரங்களை சீரழிக்கும்போது – அந்த அரக்கர்கள் மேல் உங்கள் கலாச்சார கோபம் ஏன் வரவில்லை என்பதும் என்  ஐயம்.

நதிகளும் – நதியோர விவசாயமும் – நாட்டு மாடுகளும் உயிர் சங்கிலியின் கண்ணிகள். நதியும் – விவசாயமும் அழிவின் விளிம்பில் உள்ளது.

நதியின் கரையில்தான் விவசாயம் – உழவு விவசாயத்தில்தான் நாட்டு காளகள் !

நதிகளை காப்பாற்றுங்கள் – விவசாயம் காக்கப்படும். விவசாயம் காக்கப்பட்டால் நாட்டு மாடுகள் காக்கப்படும்.

காளைகளை காப்பாற்ற போராடும் நீங்கள் நதிகளை காப்பாற்ற வருவீர்களா ?

மற்றவர்களை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே நம் நியாயங்களை  ஒப்பீடு செய்யும் குணமும் – பரந்த மனப்பாங்கில்லாத ஒற்றை கண் நியாயங்களும் நம் தமிழ் இனத்தில் இல்லை என்பதில் எனக்கு ஐயம் இல்லை!

நம்பிக்கையுடன்   நதிக்கரையில் …

தாமிரபரணி