கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மகனுடன் கவிஞர் தாமரை திடீர் உண்ணாவிரதம்!

சென்னை: பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். சூளைமேடு பெரி யார் சாலையில் இருக்கும் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று அவர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்த்திரையுலகின் பிரபலமான பாடலாசிரியர் தாமரை. இவரும் தமிழ்த்தேசியவாதியும் பெரியாரிஸ் ட்டுமான தோழர் தியாகுவும் கடந்த 2001 ல் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர். ஏற்கனவே திருமணமாகி கருத்துவேறுபாட்டில் மனைவியை பிரிந்துவாழ்ந்த தியாகு, தாமரை வீட்டாரின் சம்மதத்தின்படி அவரை மணந்தார். இவர்களுக்கு சமரன் என்ற 7 வயது மகன் உள்ளான்.

இருப்பினும் சில ஆண்டுகளில் அவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.  இருப்பினும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2012 ல் கருத்துவேறுபாடு முற்றிய நிலையில் தியாகு, தாமரையுடன் வசித்துவந்த வீட்டிலிருந்து வெளியேறினார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தோழர் தியாகு மற்றும் தாமரையின் நெருக்கமான நண்பர்கள் அவர்களிடையே கலந்துபேசினர்.

இதையடுத்து மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழத்துவங்கினர். இருப்பினும் நண்பர்களின் இந்த முயற்சி தோல்வியடைந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக தஞ்சை செல்வதாக சென்ற தியாகு, அதன்பின் தாமரையுடன் எந்தவித தொடர்பினையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகவே விவகாரம் வெளியே தெரியாதபடி இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இன்று தாமரை அதிரடியாக கணவர் தியாகுவின் கட்சி அலுவலம் இயங்கிவரும் சூளைமேடு பெரியார் சாலையில் உள்ள கட்டடம் முன் உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார். அவரது மகன் சமரனும் அவருடன் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

உண்ணாவிரதம் இருந்துவரும் தாமரை, தனது பக்க நியாயத்தை வலியுறுத்தி மக்களுக்கும் மற்ற தோழர்களுக்கும் எழுதிய 9 பக்க கடிதத்தில், தனக்கும் தோழர் தியாகுவுக்குமான கடந்தகால பிரச்னையை குறிப்பிட்டுள்ளதோடு,  தியாகுவின் செயலை வன்மையாக கண்டித்தும் எழுதியிருக்கிறார்.

கடிதத்தின் இறுதியில், இந்த விவகாரத்தில் தான் எந்த தற்காலிக தீர்வுக்கும் உடன்படமாட்டேன் என்றும் தியாகு தன் வீட்டிற்கு திரும்ப வருவது வரை தன் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தியாகுவுக்கு எதிராக பாடலாசிரியர் தாமரையின் இந்த அதிரடி போராட்டம் தோழர்கள் மத்தியிலும் திரையுலகிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.