குற்றம்சாட்டுபவர்களை பயமுறுத்தும் 5 சாட்சிகள்!

[wysija_form id=”1″]

ஊழல் வழக்கில் பெங்களூரைத் தொடர்ந்து டெல்லி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அங்கேதான் 2ஜி வழக்கின் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை தனது வழக்குகளை நடத்தி வருகிறது.

2ஜி வழக்கில் ஆ.ராசா மற்றும் 17 பேர் மீது 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதே மாதம் இறுதியில், கனிமொழியையும் சேர்த்து இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதே ஆண்டு நவம்பரில்தான் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் மொத்தம் 153 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுவிட்டார்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக் கேள்விகளை வைத்து அவர்களது பதில்களை வாக்குமூலங்களாகப் பதிவு செய்வது வழக்கம். அதுவும் முடிந்துவிட்டது.

சாட்சியங்களின் விசாரணை தொடங்கியது. இரு தரப்பிலும் கூடுதலாக சாட்சியங்களையும் ஆவணங்களையும் தாக்கல்செய்ய அனுமதி கோரினர். குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பில் 29 சாட்சியங்களை நிறுத்த, சிறப்பு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. ஆ.ராசா, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்களை சாட்சியாக அழைக்கக் கோரினார். ஆனால் நீதிமன்றம், சி.பி.ஐயின் வாதத்தை ஏற்றுக்கொண்டு ஆ.ராசாவின் கோரிக்கையை மறுத்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் சாட்சியங்களின் விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. இந்தநிலையில், சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் யு.யு.லலித் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வந்துள்ள வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், வழக்கின் விவரங்களைப் படிக்க அவகாசம் கேட்டுக்கொண்டதால், டிசம்பர் 19ம் தேதிதான் இறுதி வாதங்கள் தொடங்க உள்ளன. அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள வழக்கு சூடு பிடித்துள்ளது.

2ஜி வழக்கை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சி.பி.ஐ மட்டும் இதனை விசாரித்தால் போதாது என்று நினைத்த உச்ச நீதிமன்றம்,  வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அமலாக்கப் பிரிவு ஆகிய புலனாய்வு அமைப்புகளும் சி.பி.ஐயோடு விசாரணையில் பங்கு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இவர்களது விசாரணைப்படி, கலைஞர் டி.விக்குத் தரப்பட்ட 200 கோடி ரூபாய் பணத்தில் முறைகேடு நடந்திருப்பதாகச் சொன்னார்கள். ஒரு நிதியமைப்பில் அல்லது ஒரு நிறுவனத்தின் நிதியில் லஞ்சம், ஹவாலா என எந்தக் குற்ற நடவடிக்கைகள் மூலமும் உருவாக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட பணத்தை யார் வைத்திருந்தாலும் பெற்றிருந்தாலும் அது சட்டவிரோதம். இதன்படி பணம் கொடுக்கக் காரணமாக இருந்த ஆ.ராசாவும், பணத்தைப் பெற்ற சரத்குமார், தயாளு அம்மாள், கனிமொழி, பி.அமிர்தம் ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டனர். தவிர டெலிகாம் உரிமைகளுக்காக ரூ.200 கோடி பணம் கொடுத்த வகையில், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் உஸ்மான் பால்வா, வினோத் கோயங்கா மற்றும் இவர்களது துணை நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிப் பால்வா, ராஜீவ் அகர்வால், கறீம் மொராணி மற்றும் இவர்களது எட்டு நிறுவனங்களும், கலைஞர் டி.வியையும் சேர்த்து மொத்தம் 19 பேரை குற்றவாளிகளாகக் குற்றப்பத்திரிகையில் காட்டியது அமலாக்கப் பிரிவு. குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்த பின்  கடந்த 17ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. இதில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர்களைக் கூடுதல் சாட்சிகளாக நிறுத்த சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இந்தக் கூடுதல் சாட்சிகள் யார் யார்?

1. அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குநர் சத்யேந்திர சிங்.  இவர் குற்றம்சாட்டப்பட்டுள்ள வினோத் கோயங்கா, ராஜீவ் அகர்வால், சரத்குமார் மற்றும் 2ஜி வழக்கில் சாட்சிகளாக உள்ள பி.அமிர்தம், ஆசீர்வாதம் ஆச்சாரி ஆகியோர்களிடம் வாக்குமூலங்கள் பெற்றவர்.

2. டாக்டர் ராஜேஸ்வர் சிங்.  இவர் அமலாக்கப் பிரிவின் துணை இயக்குநர். ஆசிப் பால்வா, கறீம் மொராணி ஆகியோர்களை விசாரித்தவர். ஆ.ராசா தொடர்புடையவரும் தற்கொலை செய்துகொண்டவருமான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்தியவரும் இவர்தான்.

3. நவில் கபூர். இவர் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையில் தொலைக்காட்சிகளுக்கான செயற்கைக்கோள் பிரிவில் பொறுப்பு[சார்புச் செயலாளர்] வகித்தவர். இவர் கலைஞர் டி.விக்குச் செயற்கைக்கோள் இணைப்புக்கு அனுமதி கொடுத்த விவகாரம் குறித்தும் கலைஞர் டி.விக்கு அப்போது இருந்த தகுதி குறித்தும் சாட்சியம் கூற சி.பி.ஐ அழைத்துள்ளது.

4. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளர் டி.மணி. இவர் 2007ம் ஆண்டு கலைஞர் டி.வி தொடங்கப்பட்ட சமயத்தில், கடன் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட கடிதங்கள், ஆவணங்கள் குறித்து சொல்ல இருக்கிறார்.

5. ஜி.ராஜேந்திரன். 2007ம் ஆண்டு கலைஞர் டி.வியில் நிதி மேலாளராக இருந்தவர் இவர்.  இப்படி புதிதாக சி.பி.ஐயால் நிறுத்தப்பட்ட சாட்சிகளுக்குக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன. புதிய சாட்சிகளைக் கொண்டுவரக் கூடாது என்று இவர்கள் சொன்னார்கள். இவர்களுக்கு வாதாடிய வழக்கறிஞர்கள் லெபக்கா ஜான், மனு சர்மா ஆகியோர். ”சி.பி.ஐ தொடர்ந்த மூலவழக்கு சம்பந்தமான சாட்சிகள் அல்ல இவர்கள். இதை அனுமதிக்கக் கூடியதும் அல்ல. சி.பி.ஐயால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இல்லை என்கிற பட்சத்தில் இந்த சாட்சிகள் ஆவணங்களைப் புதிதாகச் சேர்க்க முடியாது. இதை அனுமதிக்கக்கூடாது” என்றனர். கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சுப்பிரமணியம், ”மிகவும் தாமதமாகக் கொண்டு வரப்பட்டவை. இது இந்த வழக்குக்குப் பொருத்தமானதோ, சட்டத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியதோ அல்ல. கனிமொழி மீது[அரசியல்ரீதியாக] புதிய வழக்கு ஒன்றைத் தொடர சி.பி.ஐ முயற்சிக்கிறது” என்றார்.

”ஏற்கெனவே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வாக்குமூலங்களைப் பற்றிச் சொல்ல சாட்சிகள் அழைத்து வரப்படுகின்றனர். அதிலும் இறந்தபோன சாதிக் பாட்சா கொடுத்த வாக்குமூலத்தை சாட்சியமாக அளிக்க ஓர் அதிகாரி வருகிறார். இதை அனுமதிப்பது எப்படி? அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பெற்ற வாக்குமூலங்கள் ஒரு பிரத்யேகச் சட்டத்தின்படி பெறப்பட்டவை. அதை மற்றொரு பொதுவான சட்டத்தின்படி நடக்கும் வழக்கில் உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது” என்று வாதிட்டார்கள், பால்வாக்கள் மற்றும் ராஜீவ் அகர்வால் வழக்கறிஞர் விஜய் அகர்வால்.

இந்த வாதங்களை ஏற்காமல் புதிய சாட்சிகளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார் நீதிபதி சைனி. ”2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூடுதல் ஆவணங்கள் கிடைத்துள்ளன. சி.பி.ஐ விசாரணையில் தவறுதலாக விடுபட்டு இருக்கலாம். சிலரை விசாரணை செய்யாமல் விட்டு இருக்கலாம். மனிதத் தவறுகள் ஏற்படுவது வழக்கம். இது குற்றவாளிகளுக்குச் சாதகமாகவும் பிராசிக்யூஷனுக்கு பாதகமாகக்கூட போக வாய்ப்பு உண்டு. இதை நிரப்ப தவறக் கூடாது. எந்தச் சாட்சியங்களையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு பிராசிக்யூஷன் கொண்டுவரலாம். சிலசமயம் நீதிமன்றமே சுயமாகக்கூட சில சாட்சிகளை அழைக்கும். தாமதமாகிவிட்டது என்பதற்காக சாட்சிகள் வருவதைத் தடுக்க முடியாது. கலைஞர் டி.விக்கு ஷாகித் உஸ்மான் பால்வா, வினோத் கோயங்கா போன்றவர்கள் ரூ.200 கோடி கொடுக்கப்பட்டுள்ள ஊழல் கையூட்டில் கனிமொழி, சரத்குமாருக்கு உள்ள பங்கை இரண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து உள்ளனர். இதில் தகவல் ஒளிப்பரப்புத் துறை அதிகாரி நவில் கபூர், வங்கி அதிகாரி டி.மணி, ஜி.ராஜேந்திரன் போன்றவர்கள் அளித்துள்ள ஆவணங்களில் கலைஞர் டி.வியில் கனிமொழியின் பங்கு எந்த அளவு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது பிராசிக்யூஷனுக்கு முக்கியமானது என்பதால், இந்தச் சாட்சிகளை விசாரிக்க உத்தரவிடுகின்றேன்” என்றார் நீதிபதி சைனி.

புதிய சாட்சிகளைப் பார்த்து இவர்கள் ஏன் பயப்படுகிறார்களோ?!

[wysija_form id=”1″]