குழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…

ரஷ்யாவின் ஓபீன்ஸ்க் (Obninsk)  நகரில் உள்ள அபார்ட்மென்ட் பகுதியில், ஒரு பெட்டிக்குள் விடப்பட்ட குழந்தையைக் காப்பாற்றியுள்ளது, மார்ஷா என்ற பூனை. கடும் பனிப்பொழிவு நிலவும் நேரத்தில் பெட்டிக்குள் இருந்த குழந்தையைப் பார்த்த மார்ஷா, உள்ளே குதித்து, தன் நீண்ட முடிகளால் குழந்தையைச் சுற்றிக்கொண்டது. வெகு நேரத்துக்குப் பிறகு இதைக் கவனித்த சிலர், உடனே குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பூனை, தனது உடலால் அளித்த வெப்பமே, குழந்தையின் உயிரைக்  காப்பாற்றியதாம். இப்போது, மார்ஷா பூனை பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. 

சமீபத்தில், 2014ம் ஆண்டுக்கான புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுள்ளனர். இதன்படி, உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவிகிதம் இந்தியாவில்தான் உள்ளன. மற்ற நாடுகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. 2011ம் ஆண்டு கணக்கின்படி, இந்தியாவில் மொத்தம் 1,706 புலிகள் மட்டுமே இருந்தன. 2014ம் ஆண்டில் 2,226 புலிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. புலிகளைக் காக்க, அரசும் தன்னார்வ அமைப்புகளும் மேற்கொண்ட முயற்சியும், மக்களிடையே ஏற்பட்ட விழிப்புஉணர்வும்தான் இந்தப் பெருமிதத்துக்குக் காரணம்.

புல்லட் ரயில் என்றதும் ஜப்பான், சீனாதான் நினைவுக்கு வரும். கண் மூடித் திறப்பதற்குள் மின்னல் வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்கள் இந்த நாடுகளில் அதிகம். ஆனால், இந்தப் படத்தில் பார்ப்பது, புல்லட் ரயில் கிடையாது. மத்திய சீனாவின் லோயாங் (Luoyang) பகுதியில், பொருட்காட்சி ஒன்று தொடங்கப்பட்டது. அதில், பார்வையாளர்களைக் கவர்வதற்காக, ‘ஹை ஸ்பீட் ரயில்’ வடிவில் ஒரு செட் போட்டு, ஒவ்வொரு கம்பார்ட்மென்ட் உள்ளேயும் கடைகளை அமைத்தனர். அங்கே ஷாப்பிங் செய்தவர்கள், இடத்தைவிட்டு நகராமலேயே ரயிலில் பயணித்த சந்தோஷத்தை அடைந்தார்கள்.

ஜனவரி 5ம் தேதி, பல்வேறு நாடுகளில் ‘தேசியப் பறவைகள் தினம்’ கொண்டாடப் படுகிறது. பறவைகளைக் காக்கும் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். இந்த ஆண்டு, பாலஸ்தீனத்தின் பெத்லஹேம் நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில், அரிய வகைக் கழுகு, ஆந்தைகளை சுதந்திரமாகப் பறக்கவிட்டனர். அழிந்துவரும் இந்தப் பறவைகள், சுற்றுச்சூழலைக் காப்பதில் பெரும் பங்காற்றுகின்றனவாம். அதனால்,’பறவைஇனங்களைப் பெருக்குவோம்’ என்று பிரசாரம் செய்தனர்.

இந்தியாவில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, ‘யுனெஸ்கோ’ (UNESCO) மற்றும் ‘யுனிசெப்’ (UNICEP) அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 20002012 வரை தெற்காசியாவில் பள்ளி செல்லாதக் குழந்தைகளில் சுமார் 2.3 கோடிப் பேர், மீண்டும் பள்ளிகளில் காலடி எடுத்துவைத்துள்ளனர். அவர்களில் 1.6 கோடி பேர், இந்தியக் குழந்தைகள். இது, ஆரோக்கியம் தரும் விஷயம் என்று கல்வி ஆர்வலர்கள் மகிழ்கிறார்கள்.

பிரிட்டனைச் சேர்ந்த 57 வயது வில்லர்ட் விகன் (willard wigan) என்பவர், சிறுசிறு சிற்பங்கள் செய்வதில் வித்தகர்.  ஊசியின் காதுத் துளைக்குள் சிற்பங்களைச் செதுக்கிவைத்து அசத்துகிறார். ஐந்து வயது முதலே சிற்பங்களின் மீது ஆர்வம்கொண்ட வில்லர்ட், மைக்ரோஸ்கோப் உதவியுடன், ஊசிக் காதின் இடைவெளியில் சிற்பங்களை உருவாக்குகிறார். அந்தச் சிற்பங்களை மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து வியக்கிறார்கள். தான் உருவாக்கிய மினி சிற்பங்களைக் கண்காட்சியாக வைக்கப்போகிறார் வில்லர்ட்.