குழியில் மூழ்கும் தமிழகம்

[wysija_form id=”1″]

ற்றுப்படுகைகளில் கேட்பாரற்றுக் கிடந்த மணல், தங்களை குபேரர்களாக்கும் வியாபாரப் பொருள் என்பதை 1990களில் உணர்ந்தனர் சிலர். பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய கார்ப்பரேட் கம்பெனிகளும் பல லட்சம் கோடி ரூபாய்களைக் கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்தனர். பெருநகரங்கள் தொடங்கி நாட்டின் பல பகுதிகளில் பிஸியாகத் தொடங்கிய கட்டுமானத் தொழிலின் அகோர மணல் பசிக்கு நம்முடைய ஆறுகள் பலியாகின. ராட்சத எந்திரங்களின் துணையுடன் 24 மணி நேரமும் ஆற்று மணல் சூறையாடப்பட்டு வருகிறது. கோடி கோடியாய் பணம் கறக்கும் மணல் கொள்ளைக்குக் குறுக்கே யார் வந்தாலும் அவர்களுக்கு சமாதி கட்டுவது என்பது மணல் மாஃபியாக்களின் கறார் பாலிசி.

சமூக அக்கறைகொண்ட அரசியல் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நேர்மையான அதிகாரிகள் என மணல் மாஃபியாக்களுடன் மோதி உயிர்பலியானவர்களின் பட்டியல் மிரள வைக்கிறது.

மணல் கொள்ளை விவகாரத்துக்கு முன், இதனால் பலியான உயிர்களை அறிந்து கொள்வோம்!

வீச்சரிவாளால் வீழ்த்தப்பட்ட சுடலைமுத்து

”என்னோட வீட்டுக்காரர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில இருந்தாரு. ஊர்ல யாருக்கு என்ன பிரச்னைன்னாலும் முதல் ஆளா போய் நிப்பாரு. ‘ரொம்ப  துடிப்பா செயல்படுறே’ன்னு நல்லகண்ணு அய்யாவே பாராட்டினாங்க. எங்க ஊரு ஆத்துல திருட்டுத்தனமா மணல் அள்ள ஆரம்பிச்சப்போ… அதை என் வீட்டுக்காரர் கடுமையா எதுத்தாரு. ‘உம் புருசன் பெரிய மனுசங்களோட பகைய சம்பாதிக்கிறாரு… பாத்து இருந்துக்கச் சொல்லு’ன்னு சில பேரு சொன்னாங்க. ‘நமக்கு எதுக்குங்க ஊர் பொல்லாப்பு… பேசாம இருங்க’ன்னு சொன்னேன். ஆனா, மணல் அள்ளுறதைத் தடுக்கணுங்குறதுல ரொம்ப உறுதியா இருந்தாரு. நான் பயந்த மாதிரியே அந்த சம்பவமும் நடந்துருச்சு…’ என்று, அதற்கு மேல் பேச முடியாமல் கேவிக்கேவி அழுகிறார் அந்தோணி அம்மாள்.

அந்தோணி அம்மாளின் கணவர் சுடலைமுத்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் நெல்லை மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டவர். அரிகேசவல்லூரைச் சேர்ந்த இந்த இளைஞர், அரசியலில் மட்டுமின்றி சுற்றுச்சூழலிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை ஆரம்பித்தபோது, திருட்டு மணலை எடுத்துச் செல்லும் லாரிகளையும் டிராக்டர்களையும் மறிப்பது, அதிகாரிகளுக்குத் தகவல் சொல்வது என்று தீவிரமாகச் செயல்பட்டுள்ளார். அவருக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டார்.

ஒரு நாள் இரவு, கட்சித் தோழர்கள் இரண்டு பேருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். பயங்கர ஆயுதங்களுடன் அவருக்காகக் காத்திருந்த ஒரு கும்பல், மோட்டார் சைக்கிளை மடக்கியது. சுடலைமுத்துதான் அவர்களின் ‘டார்கெட்’. சுடலைமுத்துவின் தலையைக் குறிவைத்து வீச்சரிவாள் வீசப்பட்டது. அவரோடு வந்த ஒருவர் தன் கைகளால் மறித்தார். அவரது மூன்று கைவிரல்கள் சீவப்பட்டு தூரப் போய் விழுந்தன. பின்னர், சுடலைமுத்துவை ரவுண்டு கட்டி சரமாரியாக வெட்ட ஆரம்பித்தது அந்தக் கும்பல். ரத்தவெள்ளத்தில் மரித்தார் சுடலைமுத்து. 2007ல் நடைபெற்ற அந்தச் சம்பவம், நெல்லை மாவட்டத்தையே அதிரவைத்தது. கொலையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தியது.

அரிகேசவல்லூரியில் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என அஞ்சினார், ஆதரவற்றுப்போன அந்தோணி அம்மாள். தாய் ஊரான மூலச்சிக்குக் குழந்தைகளுடன் சென்றுவிட்டார். தங்கள் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கருதிய சுடலைமுத்துவின் தந்தையும் தம்பியும்கூட அரிகேசவநல்லூரில் இருந்து வெளியேறி மூலச்சி கிராமத்துக்குச் சென்றுவிட்டனர். மிகவும் வறிய நிலையில், தன் மூன்று குழந்தைகளுடன் காலத்தை ஓட்டிவருகிறார் அந்தோணி அம்மாள்.

‘கூலிப்படைய வெச்சு அவரைக் கொன்னுட்டாங்க. அப்போ, என் கடைசிப் பையன் மூணு மாசக் கைக்குழந்தையா இருந்தான். மூத்த பொண்ணுக்கு நாலு வயசு. புள்ளைகள வச்சுக்கிட்டு அந்த ஊர்ல இருக்க எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. அங்கிருந்து வெளியேறி எங்க அம்மா ஊருக்கு வந்துட்டேன். அவரு இறந்த ஒடனே நல்லகண்ணு அய்யா வந்து ஆறுதல் சொன்னாங்க. கட்சியில இருந்து மூணு லட்ச ரூபா குடுத்தாங்க. அரசாங்கத்துல இருந்து ஒண்ணரை லட்சம் குடுத்தாங்க. அப்ப இருந்த கலெக்டர் எனக்கு அரசாங்க வேலை குடுக்கறதா உறுதி சொன்னாரு. பக்கத்துல இருந்த கவர்மென்ட் பெண்கள் விடுதியில தற்காலிகமா உதவியாளர் வேலை குடுத்தாங்க. ஒரு மாசம் வேலை செஞ்சேன். அந்த வேலையை நிரந்தரமாக்குறதா உறுதி சொன்னாங்க. ஆனா, அந்த கலெக்டர் மாறிப்போனப்புறம் தற்காலிக வேலையில இருந்தும் என்னைய நீக்கிட்டாங்க. இப்போ குழந்தைகளை வளக்குறதுக்கு ரொம்ப சிரமமா இருக்கு. எங்களுக்குச் சொந்தமா விவசாய நிலம்கூட இல்ல. தெனமும் கூலி வேலைக்குப் போறேன். ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்று கட்டுப்படுத்த முடியாத கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் அந்தோணி அம்மாள்.

அரிகேசவநல்லூர் பஞ்சாயத்து துணைத் தலைவரான பழனி மற்றும் முருகன், சுரேஷ், ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர்  அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். சுடலைமுத்துவின் கொலைவழக்கு நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கொலை நடந்தபோது உடன் இருந்த ஒருவர் கொலைக்கு நேரடி சாட்சி. அவர் பிறழ்சாட்சியாக மாறிவிட்டார். இதற்கெல்லாம் நிர்ப்பந்தம் அளித்த ‘பெரிய மனிதர்கள்’ வெள்ளை வேட்டி சட்டையோடு தலைவர்களாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

லாரி ஏற்றி கொல்லப்பட்ட தாசில்தார்

2004ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு உட்பட அனைத்து ஆறுகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, ஆற்றுமணலைச் சூறையாடிக் கொண்டிருந்தனர் மணல் கொள்ளையர்கள். அந்த நேரத்தில், மணப்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் மணல் கொள்ளை நடப்பதாக தாசில்தார் வெங்கடேசனுக்குத் தகவல் கிடைத்தது. அதிகாலை நேரத்தில் எழுந்து அலுவலக காரை எடுத்துக்கொண்டு, மணல் கொள்ளை நடந்த இடத்துக்குச் சென்றார். பாலாற்றில் லாரிகளை நிறுத்தி மணலை ஏற்றிக் கொண்டிருந்தது ஒரு கும்பல். அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க முயன்றார் தாசில்தார். தப்பிக்க நினைத்த அந்தக் கும்பல், தாசில்தாரை கொலை செய்யத் துணிந்தது. தாசில்தாரை முரட்டுத்தனமாகக் கீழே தள்ளிவிட்டு, அவர் மீது லாரியை விட்டு ஏற்றியது. லாரி டயர்களில் நசுங்கினார் தாசில்தார் வெங்கடேசன். அந்த சம்பவத்தால் ஒட்டுமொத்தத் தமிழகமும் அதிர்ந்தது.

அப்போது, மூத்த மகள் ரேகாவுக்கு திருமணம் ஆகியிருந்தது. மனைவி நிர்மலா, இளையமகள் ஆஷா ஆகியோருடன் வசித்துவந்தார் தாசில்தார் வெங்கடேசன். அவர் கொலை செய்யப்பட்டதால், அவரது குடும்பம் நிலைகுலைந்து போனது. வெங்கடேசன் மறைந்து 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. சமீபத்தில், மூத்த மகள் ரேகாவை செங்கல்பட்டில் சந்தித்தோம். ‘எங்களுக்கு எல்லாமே அப்பாதான். அப்போ, அவருக்கு 45 வயசு. எனக்கு கல்யாணம் ஆயிருச்சு. தங்கை காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்தா. எங்க அப்பா ராத்திரி பகலா வேலை செய்வாரு. ரொம்ப நேர்மையானவர். நாங்களே சின்னதா ஒரு தப்பு செஞ்சாகூட ரொம்ப கோபப்படுவாரு. தவறை ஒருபோதும் ஏத்துக்கவே மாட்டார். அப்பாவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்னு நாங்க நெனச்சுக்கூட பாக்கல. அந்த அதிர்ச்சியில இருந்து மீள்றதுக்கு எங்களுக்கு பல வருஷம் ஆச்சு’ என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசினார்.

தாசில்தாரை கொலை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெறும் அம்புதான். ‘எவன் குறுக்கே வந்தாலும் லாரியை விட்டு ஏத்துங்கடா… எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கிறேன்’ என்று தைரியமூட்டிய அந்த ‘மணல் தாதா’ சட்டத்தின் பிடியில் சிக்கவே இல்லை.

போலீஸ் என்றாலும் போட்டுத்தள்ளு!

‘மணல் கொள்ளைக்குக் குறுக்கே வந்தால், போலீஸ் அதிகாரியாகவே இருந்தாலும் அவரைப் போட்டுத்தள்ளுவோம்’ என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர் மணல் கொள்ளையர்கள். அப்படி, சமீபத்தில் கொலை செய்யப்பட்டவர், ஏட்டு கனகராஜ்.

கடந்த ஜூலை 20ம் தேதி. வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக பானாவரம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. எஸ்.ஐ. ராஜன், ஏட்டு கனகராஜ் ஆகிய இருவரும் மணல் அள்ளப்பட்ட இடத்துக்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும் மணல் கொள்ளையர்கள் தப்பி ஓட முன்றனர். ஏட்டு கனகராஜ் வேகமாக டிராக்டரில் ஏறினார். டிராக்டரை நிறுத்த முயற்சி செய்தபோது, ஏட்டு கனகராஜை பலமாகத் தள்ளிவிட்டு டிராக்டரை ஏற்றினார்கள். அவர், அதே இடத்தில் துடிதுடிக்க உயிரிழந்தார்.

கனகராஜின் மனைவி முத்துக்குமாரியிடம் பேசினோம். ”18ம் தேதி மீட்டிங்னு எஸ்.பி. ஆபீஸுக்குப் போயிட்டு வந்தாரு. 19ம் தேதி காலையில ஸ்டேஷன்ல இருந்து போன் வந்துச்சு. உடனே கிளம்பிப் போயிட்டாரு. 20ம் தேதி காலையில் ஆறரை மணிக்குப் போன் பண்ணாரு. ரெண்டு நாள் கழிச்சு வருவேன்னு சொன்னாரு. பேசி அரை மணி நேரம்கூட ஆகல. அவரை கொன்னுட்டாங்கன்னு தகவல் வந்துருச்சு’ என்று கதறினார் முத்துக்குமாரி.

”ஜெயலலிதா அம்மாவை நேரில் போய் பார்த்தோம். எல்லாத்தையும் பார்த்துக்கிறதா சொன்னாங்க. ஆனா, பென்ஷன் விஷயமா தாலுகா ஆபீஸுக்குப் போனா, ரெவின்யூ அதிகாரிங்க கையெழுத்துப் போட்டுத்தராம ரொம்ப இழுத்தடிக்கிறாங்க. அவரோட விஷயமா எந்த ஆபீஸுக்குப் போனாலும் வேலை நடக்க மாட்டிங்குது. ரொம்ப அலையவிடுறாங்க. அதிகாரிங்க யாருமே எங்களைக் கண்டுக்கலை. இப்போ, நான் தனி மரமா நிக்கிறேன். என்னோட நிலைமையைப் பார்த்து கவர்மென்ட்ல ஏதாவது வேலை கொடுத்தா, என் மகளை காப்பாத்த முடியும்’ என்று கலங்கினார்.

ஏட்டு கனகராஜின் தாயார் லட்சுமியை சந்தித்தோம். ”சின்ன வயசுல இருந்தே போலீஸ்ல சேரணும்ன்னு அவனுக்கு ஆசை. அவன் வேலைக்குப் போனப்புறம்தான் எங்க குடும்பத்துல கஷ்டம் தீர்ந்துச்சு. அநியாயமா அவனை கொன்னுப்புட்டாங்க. ஒவ்வொரு மாசமும் எனக்கு 2,000 ரூபா கொடுப்பான். இப்போ மூத்த மகன் கூலி வேலை செஞ்சி குடும்பம் ஓடுது’ என்று கண்கலங்கினார்.

தக்கோலத்தில் ஏட்டு கனகராஜ் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் அண்ணன் தம்பிகளான தே.சுரேஷ் (23), தே.சத்யா (21) உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுரேஷ், பா.ம.கவின் உறுப்பினர். தந்தை தேவராஜ், தே.மு.தி.கவின் தக்கோலம் கிளைச்செயலாளர். தாயார் செண்பகவள்ளி தே.மு.கவின் கவுன்சிலர். சுரேஷ், சத்யா உட்பட 4 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அரக்கோணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

”எல்லாமே மணல் கொலைகள்தான்!”

தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை அடிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தேவசகாயம் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், நெல்லை, தூத்துக்குடி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘நெல்லை மாவட்டத்துல கடந்த 15 வருசத்துல நூத்துக்கணக்கான படுகொலைகள் நடந்துருக்கு. இந்த வருசத்துல ஜனவரி 1ம் தேதி ஆரம்பிச்சு, இப்போ வரைக்கும் 69 கொலைகள் நடந்துருக்கு. பெரும்பாலானவை தாமிரபரணி ஆத்துக்கரையோரப் பகுதிகள்ல நடந்தவை. இந்த 69 கொலைகள்ல அஞ்சு பத்து கொலைகளைத் தவிர மத்த எல்லாமே மணல் கொள்ளை சம்பந்தப்பட்டவைதான்’ என்று அதிர்ச்சியூட்டுகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட துணைச்செயலாளர் சேவியர்.

தென் மாவட்டங்களில் மணல் கொள்ளையை எதிர்த்த காரணத்தால் நடந்த கொலைகள் மற்றும் மணல் மாஃபியாக்களின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அரசியல்வாதிகள், சமூகவிரோதிகள் குறித்த மிரள வைக்கும் உண்மைகள் அடுத்த…

[wysija_form id=”1″]