கூப்பிடுங்கள் – கொடிகாத்த குமரனை

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் நம் தேசம் வீழ்ந்து கிடந்த போது வ.உ.சி, சிவா, பாரதி, திலகர் போன்ற தீரர்களும் மற்றும் பெயர் தெரியாத பலரும் பிரிட்டிஷ் ஆட்சியினை அகற்ற போராடி வந்தனர். அந்த மரபில் வந்த கொடி காத்த குமரன், போலீஸ் தடியால் தாக்கி அவர் உயிர் பிரியும் வரையிலும் பிடிவாதமாய் தேசியக் கொடியினை விடாது பிடித்துக் கொண்டார் என்பது வரலாறு. இதில் தேசிய கொடி என்பது ஒரு குறியீடுதான். அதில் வேறு புனிதம் எதுவும் இல்லை. ஆண்டான் – அடிமை என்பது ஒரு மனப்பாங்கு. அடிமைத்தனத்தை அனுமதிக்க மாட்டேன் என்பதன் குறீயீடாகத்தான் தேசக்கொடியை விடாமல் பிடித்தார் திருப்பூர் குமரன்.

தற்போது காஷ்மீரத்தில் தேசக்கொடியை ஏற்றுவோம் என ஒருவரும் ஏற்றவிடமாட்டோம் என மறுசாரரும் சொல்வதும் ஒரு அரசியல் யுக்தி. நன்கு யோசனை செய்து பார்த்தால் இந்தியா என்பது ஒரு பூகோள கற்பனை. உலகம் எனது வீடு என்று நான் நினைத்துவிட்டால் எல்லைகள் உதிர்ந்துவிடும்.
பாகிஸ்தான் அல்லது இந்திய என்பதெல்லாம் நமது மனம் கொள்ளும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாகும். பின்பு இதில் ஏன் வந்தது தேசக் கொடி. தற்போது தேசியக் கொடி எதன் குறியீடு ?
இதில் உண்மைகள் கிடையாது. ‘ரோஜா’  என்றோர் திரைபடத்தில் தேசக்கொடியை எரிப்பதை கண்ட கதாநாயகன் போலியாக ஆவேசம் கொண்டு அதைக்கட்டிப்பிடித்து அணைப்பதும், அதை கண்ட ரசிகர்கள் ( போலியாக ) உணர்ச்சிவயப்பட்டு கைத்தட்டி விசில் அடித்தும், அதை பத்திரிகைகளும் போலியாக பாராட்டியதும் பரமபத விளையாட்டுத்தான். அதே காரியத்தைத்தான் தற்போது காஷ்மீரத்தில் அனைவரும் செய்து வருகிறார்கள். நாடு, இனம், மொழி, மதம் இன்னும் நிறம் இவைகளெல்லாம் ஒரு கருவிதான், யாருக்கென்றால் சண்டையிடுபவர்களுக்கு. அதாவது சண்டை போடுவதுதான் நோக்கம் என்றிருப்பவர்களுக்கு கருவியாக பயன்படுவதுதான் மேற்சொன்னவை. நாடோ, மதமோ, இனமோ, மொழியோ யாரையும் சண்டை போட்டு கொள்ள சொல்லவில்லை. இங்கு சண்டையிடும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற மனோபாவம்தான் முதலில் நிற்பது. இன்னொன்று உலகத்தில் இருக்கும் இராணுவங்களில் எந்த நாட்டு இராணுவமும் மனிதகுலத்தின் அவமானச் சின்னங்கள்தாம்.
பிறகு இராணுவ மடியாதை, செலவு, உயிரிழப்புகள் அப்பாடா…….. யாதும் ஊரே – யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா..
திரு . மதுரை கண்ணன் அவர்கள் – மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.