கோவன் மூப்பனின் நகரம்!

 

கோயமுத்தூர் முன்சீப் கோர்ட்டில் வழக்குக்காக உட்கார்ந்திருந்தேன். அது உயரமான கூரைகள்கொண்ட பிரிட்டிஷ் காலத்துக் கட்டடம். மின்சாரம் இல்லாத நீதிமன்றக்கூடம் இருண்டிருந்தது.

தமிழக வரலாற்றில் கோயமுத்தூருக்கு எப்போதும் மிகச் சிறிய இடமே கொடுக்கப்பட்டு வந்துள்ளது. காரணம் பேரரசுகளோ மாபெரும் மன்னர்களோ இங்கு இருந்ததில்லை. அப்படிப்பட்ட அரசுகளை உருவாக்குவதற்குத் தேவையான நிலவளமோ நீர்வளமோ இங்கு இல்லை. இருந்தபோதிலும் இன்று தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக உருவெடுத்திருக்கிறது. ரயில் நிலையத்தின் மேற்குபுறம் இருக்கிறது டவுன் ஹால். கோவையின் பழைய பகுதி. மரங்களே இல்லாத நெரிசல் மிகுந்த இந்த டவுன் ஹால் வீதியில் நடக்கலாம். இந்தச் சாலை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. வெயிலும் நெரிசலும் இரைச்சலுமாக ஏதோ வெப்ப ஆற்றில் அடித்துச் செல்லப்படும் துரும்புபோல நம்மை உணரச்செய்யும் இந்தச் சாலை. இப்போது கோவையில் எல்லாச் சாலைகளும் இதேபோல் ஆகிவிட்டன. அதனால், இந்தச் சாலைமீது மட்டும்  தனியாக எரிச்சல் வருவதில்லை.

தென்புற பிளாட்ஃபாரத்தில் நடந்தால் மணிக்கூண்டுக்குச் சற்றுமுன் இரும்புக்கம்பிகள் மீது கைவைத்து நின்றுகொள்ளலாம். வேடிக்கை பார்த்துக்கொண்டே கதைபேச சரியான இடம். பின்னாலிருக்கிறது கோனியம்மன் கோயில்.

கோவை நகரின்  மையத்தில் உள்ளது  கோனியம்மன் கோயில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம்வரை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகள் பரந்து இருந்தனவாம். இடையிடையே சின்னஞ்சிறு கிராமங்கள் இருந்தன. அவற்றில் இப்போது மலைகளில் நாம் பார்க்கும் இருளர் பழங்குடிகள் வாழ்ந்துவந்தனர். இதோ நாம் நிற்கிறோமே இந்த இடத்தில்  அப்படிப்பட்ட ஓர் இருளர் கிராமம் இருந்தது. அதன் தலைவன் கோவன் மூப்பன். அக்கிராமத்தின் காவல் தெய்வம் கோனியம்மன் எனப்படும் கோனையஃகா. இந்த கோவன் மூப்பனின் பெயரால்தான் கோயமுத்தூர் அழைக்கப்படுகிறது.

சுற்றிலும் இருக்கும் சூலூர், பல்லடம், இடிகரை, துடியலூர் போன்ற பல ஊர்களின் பெயர்கள் இருளர் மொழிப்பெயர்கள் என்று மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர். அந்தப் பழங்குடிமக்கள் என்ன ஆனார்கள், புதிதாகக் குடியேறியவர்களோடு கலந்து போய்விட்டார்களா அல்லது மலைகளுக்குள் விரட்டப்பட்டுவிட்டார்களா என்பது தொடர்பாக எந்தக் குறிப்புகளும் இல்லை. இன்று மருந்துக்கும் கோவையில் பழங்குடியினமக்கள் இல்லை. ஆனாலும் தனது பழங்குடி வேர்களை இன்னும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் வேறு ஒரு பெருநகரம் தமிழகத்தில் இருக்குமா என்பது சந்தேகம்தான். இந்த விதத்தில் கோவையின் வரலாறு வித்தியாசமானது. எந்த அரசையும் கட்டி ஆளாத எளிய மாந்தர்களின் வாழ்க்கைதான் பெரும்பாலும் கோவை வரலாறு.

கொங்கு நாட்டைப்பற்றி கம்பர் பாடியதாக ஒரு பாடல் உள்ளது. செய்யுள்களை மேற்கோள் காட்டுவது எனக்கும் கொஞ்சம் அலர்ஜியாகவும் பிரம்புடனான தமிழாசிரியர்களை நினைவுபடுத்துவதாகவும்தான் உள்ளது. இருந்தாலும் விருப்பம் இருப்பவர்கள் படிக்கலாம் அல்லவா? ‘ஊரெல்லாம் பட்டி தொட்டி உண்பதோ கம்மஞ்சோறு பேரெல்லாம் பொம்மன் திம்மன் பெண்களோ நாயும் பேயும்… காருலாங்கொங்கு நாட்டை கனவிலுங் கருதொணாதே’

கம்பர் இப்படி ஒரு பாடலைப் பாடக்கூடியவர் அல்ல. பெண்களை இவ்வளவு கேவலமாக அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார் என்று கொங்கின்மீது பற்றுக் கொண்டவர்கள் கூறுகின்றனர். சோழநாட்டின் குனிந்ததலை நிமிராத பெண்களைப் பார்த்துப் பழகிய கம்பருக்கு கொங்கு நாட்டின் சுதந்திரமான பழங்குடிப் பெண்களைப் பார்த்தால் இப்படித்தான் தோன்றியிருக்கும் என்பது முற்போக்காளர்கள் கருத்து. எது எப்படி இருந்தாலும் நாகரீகம் வளர்ந்த தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து வந்தவர்களுக்கு கொங்குநாடு இப்படித்தான் காட்சியளித்தது. ஆனால், தமிழ்நாட்டில் கிடைத்த ரோமானிய நாணயங்களில் 90 சதவிகிதம் கொங்குப் பகுதிகளில் கிடைத்தவை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

வறண்ட காங்கேயம் புல் வெளிகளில் பச்சை, நீலம், பழுப்பு வண்ணங்களில் கற்கள் கிடைக்கின்றன. மரகதம், கோமேதகம் என்றெல்லாம் சரித்திரக் கதைகளில் படித்திருக்கிறோமே, அதே கற்கள்தான் இவை. இக்கற்கள் தென்னிந்தியாவில் வேறெங்கும் கிடைப்பதில்லை. இவற்றின் விலை தங்கத்தைவிட அதிகமாகவும் வைரத்தைவிட குறைவாகவும் உள்ளது. சுரங்கம் எதுவும் இல்லாமலேயே அதிர்ஷ்டக்காரர்களுக்குத் தரையிலேயே கிடைக்கின்றன இந்தக் கற்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கேயத்தில் ஒரு சாமியார் தன் பெண் பக்தையைப் பார்க்க ரகசியமாகப் போயிருந்தாராம். பக்தை, சாமியாருக்குப் பிடிவாதமாக சமைத்துப் போட்டே தீருவேன் என்று அம்மி அரைத்தபோதுதான் தெரிந்ததாம் அம்மிக் குழவியாக அவர் பயன்படுத்தியது ஒரு நீலக்கல் என்பது. அதன் மதிப்பு பல லட்சம் இருக்கும். அது தெரியாமல்  அழகாக இருக்கிறது என்பதற்காகவே பக்தை  வைத்திருந்தாராம். சாமியார், வேறு அம்மிக்குழவி வாங்கிக் கொடுத்துவிட்டு நீலக் கல் குழவியை லவட்டிக்கொண்டு வந்துவிட்டாராம். தற்போது அவர் பெரும் கோடீசுவராக வாழ்ந்துவருகிறாராம். இதுபோன்ற ஏராளமான கதைகள் எங்கள் பகுதியில் உண்டு.

யார் அந்த சாமியார் என்பது முக்கியமே இல்லை. அந்த அம்மையார் யார் என்பதுதான் முதன்மையானது. அவர் யார் என்று தெரிந்து அவரிடம் இன்னொரு கல் இருக்கும்பட்சத்தில் சாமியாரைவிட சிறந்த முறையில் வியாபாரம்பேச ஏராளமானவர்கள் ஆர்வமாக இருப்பதாகக் கேள்வி.

இந்தக் கற்களுக்காகத்தான் 1,800 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானிய வியாபாரிகள் கொங்குப் பகுதிகளுக்குக் கூட்டம் கூட்டமாக வந்தார்களாம். அவர்கள் வந்திறங்கிய மேற்குக் கடற்கரையிலிருந்து காங்கேயம் வரும் வழியில் இருக்கிறது கோயமுத்தூர் எனப்படும் கோவை. ரோமானிய அணங்குகளுக்கு இந்தக் கற்களின்மீது தீராத மோகம். எனவே,  வியாபாரிகள் பணம்  கொடுத்து இந்தக் கற்களை வாங்கிச் சென்றார்கள்.

ரொம்பவும் எளிமையாகவும் சரியாகவும் இருக்கிறது. அப்படி இருக்கக்கூடாது அல்லவா? சமீபத்தில்தான் அந்த ஆச்சரியமான உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. கணிசமான ரோமானிய நாணயங்கள்… கள்ள நாணயங்கள்! எங்கோ மூலையில் பனைமரக்காடுகளுக்கு அருகே வாழும்  பழங்குடி மக்களுக்கு ரோமானிய நாணயங்களை அள்ளித்தருவதா என்று அங்கலாய்த்த ரோமானிய வியாபாரிகள் கள்ள நாணயங்களை அடித்துக் கொடுத்துவிட்டார்களாம். அவர்கள் பேரரசரே இதற்கு உத்தரவிட்டதாகவும் கதை இருக்கிறது. கோவைக்குக் கள்ளநாணயங்களோடு அன்றே பழக்கம் ஏற்பட்டுவிட்டது. கொங்கு மக்கள் இதை அறிந்துகொள்ளவுமில்லை, பெரிதாகக் கண்டுகொள்ளவுமில்லை. சேர, சோழ, பாண்டியர்கள் இந்தக் கற்களுக்காக அடித்துக்கொண்டபோது மக்கள் சாமியாரின் பக்தைபோல அமைதியாக, நிம்மதியாக வாழ்ந்துகொண்டேயிருந்தனர்.

இப்படித் தொடங்கிய இந்த நகரம் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சிஸ் புக்கானன் வரும்வரை 2,000 வீடுகள்கூட இல்லாத எளிமையான சிறு நகராகவே நீடித்தது. இன்று ரோமானிய வியாபாரிகள் இல்லை. ஆனால் ஐரோப்பிய யூனியன் வியாபாரிகள் கோவை விமான நிலையத்தில் இறங்கி திருப்பூர் செல்கிறார்கள். தமிழகத்தின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வந்த பல்லாயிரம் தொழிலாளர்கள் இரவு பகலாகப் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இன்று கள்ளநோட்டு சாத்தியமில்லை. அன்னியச் செலாவணி கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது. கோவையின் ஒரு சிறுகிளை போல இருந்த திருப்பூர், இன்று பெரும் நகராக வளர்ந்து ஒரு மாவட்டத்திற்கே தலைநகராகியுள்ளது. ஆனால், துன்பியல் போனஸாக  ஒரத்துப்பாளையம் அணையைத் தமிழகம் பெற்றுள்ளது.

கோவையின் கதையே இதுதான். ஒவ்வொரு வளர்ச்சிக்குப் பின்பும் ஒரு சோகம். ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்பும் ஒரு வளர்ச்சி. காங்கேயம் கற்களினாலும் பாலக்காட்டுக் கணவாய் ஓரம் இருப்பதாலும் கோவை வரலாற்றில் இடம்பெற்றது. அதனால் கோவைக்குப் படியெடுத்தவர்களால் பழங்குடியினங்கள் காணாமல் போய்விட்டன.

பின்பு கோவையில் பருத்தி விளைந்தது. கொஞ்சம் வெப்பநிலை குறைவாக இருந்தது. பஞ்சாலைத்தொழில் கோவைக்கு வந்தது. கோவைக்கு உணவும், மின்சாரமும் வழங்க சிறுவாணி அணையும் பைக்காரா அணையும் கட்டப்பட்டன. நகரம் வளர வளர சேரிகள் பெருகின. 1910-லிருந்து 40 வரை கோவை ஒன்பது முறை பிளேக் நோயால் தாக்கப்பட்டது. பஞ்சத்தையும் பிளேக்கையும் எதிர்த்து கோவை மக்கள் நடத்திய போராட்டங்கள் பற்றிய கதைகள் ஹாலிவுட் படங்களையும் மிஞ்சக்கூடியவை.  இன்று கோவையின் வசதியானவர்கள் வாழும் பகுதிகள் எல்லாமே பிளேக்குக்குப் பயந்து உருவாக்கப்பட்டவைதான்.

எல்லாவற்றையும் கடந்துதான் இன்று இது இரண்டாவது பெரிய நகரம். சென்னைக்கு வெளியே மிகப்பெரிய மால்கள் கோவையில்தான் உள்ளன. கே.எஃப்.சி, மக்டொனல்ட் எல்லாம் கைக்கெட்டும்  தூரத்தில். நகரம் அசுரவளர்ச்சியைச் சந்தித்துவருகிறது. ஜூரவேகத்தில் நடந்துவரும் கட்டுமானப் பணிகளுக்குத் தீனிபோட 800 செங்கல் சூளைகளும், நூற்றுக்கணக்கான குவாரிகளும் இரவுபகலாக இயங்குகின்றன.

கோவைக்கு மேற்கே மலைகளுக்குக் கீழே உள்ள செங்கல் சூளைகளில் பல்லாயிரம் வெளிமாவட்டத் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். போலீஸ்காரர்கள் கழிப்பறை கட்டச்சொல்லி பிரசாரம் செய்து எங்காவது பார்த்திருக்கிறீர்களா? மலையோரம் இருக்கும் செங்கல் சூளைகளில் தற்காலிக ஷெட் போன்ற குடியிருப்புகளில் பல்லாயிரம் மக்கள் வாழ்கின்றனர். பல்வேறு காரணங்களால் தங்கள் கிராமங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் குடியிருக்கவே இந்தத் தற்காலிக ஷெட்களைச் சூளைமுதலாளிகள் அமைத்துக் கொடுத்துள்ளனர் என்னும்போது கழிப்பறைபற்றி நினைத்தே பார்க்கமுடியாது அல்லவா? காட்டுக்குத்தான் செல்ல வேண்டும். அங்கே இருப்பிடங்களையும், வலசைப் பாதைகளையும் இந்த வளர்ச்சியால் இழந்த யானைகள் கோபங்கொண்டு அலைகின்றன. தொழிலாளிகள் யானைகளால் கொல்லப்பட்டால் போலீஸுக்கும், வனத் துறைக்கும் சிரமம்தானே?

மேற்கே செங்கல் சூளைகள் கிழக்கே கல் குவாரிகள், விசைத் தறிகள், கேம்ப் கூலிகளைக்கொண்டிருக்கும் மில்கள்…  50 ஆண்டுகளுக்குமுன் ஒழிக்கப்பட்ட கங்காணி முறை திரும்பவும் வந்துவிட்டது. முன்பணம் கொடுத்து மக்கள் வேலைசெய்யக் கூட்டி வரப்படுகிறார்கள். அதைக் கழிப்பதற்காக உழைக்கிறார்கள். இந்த வளையத்துக்கு நடுவே நவீன மருத்துவமனைகளும், சர்வதேசப் பள்ளிகளும், ஐந்து நட்சத்திர அடுக்குமாடி குடியிருப்புகளும், ஐ.டி. பார்க்குகளும் கண்ணைப்பறிக்கின்றன.

வளர்ச்சி என்பது மக்களின் நல்வாழ்வுக்குத்தான் என்பது மற்ற நகரங்களைவிட கோவைக்கு நன்றாகத் தெரியும். அதைக் குறுகியகாலத்தில் சாதித்துக்காட்டிய அனுபவம் இந்த நகரத்துக்கு உண்டு. எனவே இந்த கடின உழைப்புத் தொழிற்சாலைகளை சூழ்ந்துநிற்கும் தூசிப்படலம் விரைவில் விலகிவிடும் என்றுதான் தோன்றுகிறது!

நன்றி விகடன்

 

VISIT OUR GROUP OF DOMAINS

FOLLOW OUR BLOGS BY MAIL TO GET NEW UPDATES IN YOUR INBOX

EDITOR – www.tamilagamtimes. com

CONTACT : tamilagamtimes@post.com

knowledgeocean2014.blogspot.com FOR E BOOKS IN 75 SUBJECTS 

 

madhuvanthana.wordpress.com FOR ENTERTAINMENT ARTICLES

yazhinimaran.wordpress.com FOR MEDICAL ARTICLES

isaipriyanka.wordpress.com FOR ECONOMICAL ARTICLES

kitchapacha.wordpress.com FOR CURRENT AFFAIRS

kaviazhaku.wordpress.com FOR POLITICAL & SOCIAL ARTICLES

sarumathipappa.wordpress.com FOR STUDENTS

devadharsinivinayagam.wordpress.com FOR AUTOMOBILE

shanthivinayagam.wordpress.com FOR WOMEN

kaviazhakuvinayagam.wordpress.com FOR AGRICULTURE

alagusundari.wordpress.com FOR SPIRITUAL