க்ரவுட் ஃபண்டிங்கில் உருவாகும் தமிழ் சினிமாக்கள்!

[wysija_form id=”1″]

மிழ் சினிமாவில் புதுமையான பல சிந்தனைகள், பிசினஸ் கான்செப்டுகள் நுழைந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது உண்டு. அதுமாதிரி சமீபத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து பலரையும் பேச வைத்திருக்கிறது க்ரவுட் ஃபண்டிங் என்கிற கருத்தாக்கம்.

க்ரவுட் ஃபண்டிங்

ஊர் கூடி தேர் இழுக்கிற மாதிரி, ஓரளவுக்கு பணம் வைத்திருக்கும் பலரும் கூட்டாக சேர்ந்து ஒரு சினிமாவை எடுப்பதுதான் க்ரவுட் ஃபண்டிங். அதாவது, ஒரு படத்தை எடுப்பதற்கான பணத்தை ஒருவரே முதலீடு செய்யாமல், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்து படத்தை எடுப்பது. இதில் தயாரிப்பாளர் என்பவர் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பார்கள். இப்படித் தயாராகும் சினிமாவின் மூலம் கிடைக்கும் லாபமும், நஷ்டமும் பணத்தை முதலீடு செய்தவர்கள், முதலீடு செய்த தொகைக்கேற்ப பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் க்ரவுட் ஃபண்டிங்கின் அடிப்படை.

க்ரவுட் ஃபண்டிங் மூலம் சினிமா எடுப்பது தமிழ் சினிமாவுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். பிற மாநிலங்களில் இது ஏற்கெனவே வழக்கத்தில் வந்துவிட்டது. இதற்கு முன் 1978ல் வங்காள இயக்குநரான ஷியாம் பெனகல், குஜராத் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடமிருந்து ஒரு உறுப்பினருக்கு ரூ.2 என ஐந்து லட்சம் விவசாயிகளிடமிருந்து 10 லட்சம் ரூபாய் வசூலித்து, குஜராத்தில் ஏற்பட்ட பால் புரட்சியை பற்றி ‘மந்தன்’ என்கிற படத்தை இயக்கினார். இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி, ஷியாம் பெனகலுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

2013ல் 75 லட்சம் ரூபாயில் கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கி வெளியான லூசியா என்கிற திரைப்படம்கூட இந்த க்ரவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டு சூப்பர் ஹிட்டான படமாக ஓடியது. இப்போது தமிழிலும் இந்த க்ரவுட் ஃபண்டிங் மூலம் சினிமா எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். வேடியப்பன் இயக்கத்தில் ‘உச்சிமாகாளி’, முத்துராமலிங்கன் இயக்கத்தில் ‘ரூபசித்திர மாமரக்கிளியே’ என்கிற இரண்டு படங்களும் இந்த க்ரவுட் ஃபண்டிங் மூலம் தயாராகி வருகிறது.

புதுமுக இயக்குநரான மு.வேடியப்பனிடம் பேசிய போது ”என் படத்தின் பட்ஜெட் ஒரு கோடி ருபாய். சிறிய பட்ஜெட் படம்தான். ஏக்நாத் என்பவரின் ‘கெடைக்காடு’ என்கிற நாவலை தழுவி படத்தை எடுக்க இருக்கிறேன். இதற்கு என் பங்காக 20 லட்சம் ரூபாயும், பாக்கியுள்ள 80 லட்ச ரூபாயை க்ரவுட் ஃபண்டிங் முறையிலும் வசூலிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். தற்போது 10 லட்சம் ரூபாய் வரை கிடைத்திருக்கிறது. மீதியுள்ள 70 லட்சமும் வரும் டிசம்பர் 31க்குள் கிடைத்துவிடும்.

இந்த படம் வெற்றி பெற்று லாபம் கிடைத்தால், வருகின்ற லாபத்தை அனைத்து முதலீடு செய்பவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும். அதேபோல் படம் தோல்வி அடைந்தால், கொடுத்த பணத்தை மறந்துவிடவும் என்று தெளிவாக விளக்கி உறுதிமொழி கொடுத்துதான் பணத்தை வாங்கிக் கொள்கிறேன். இதில் முதலீட்டாளர்கள் பிரஸர் எதுவும் இல்லாமல் இருக்கவும் அவர்களிடம் பேசிதான் பணம் வாங்குகிறேன்.

இந்த படத்தை வெற்றிகரமாக முடித்து விற்றுவிட முடியும் என்று நம்புகிறேன். ஒருவேளை இதை வாங்க யாரும் முன் வரவில்லை என்றால், படத்தை நாங்களே வெளியிட  வேண்டிய சூழல் ஏற்படலாம். அதற்கு மேற்கொண்டு 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். எனவே, அதற்கும் சேர்த்து மொத்தமாக 1.20 கோடி தேவை என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்” என்று தன் பக்கத்தில் செய்யும் பணிகளை விவரித்தார் வேடியப்பன்.

சமீபத்தில் கார்த்திக் ரவி இயக்கி வெளியான ‘குறையொன்றும் இல்லை’ என்கிற படமும் க்ரவுட் ஃபண்டிங் என்கிற கான்செப்ட்டின் அடிப்படையில்தான் எடுக்கப்பட்டது. ஆனால், இந்த படம் பெருவாரியான மக்களின் கவனத்தைப் பெறாமலேயே தியேட்டரை விட்டு ஓடிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் முத்துராமலிங்கன் சமீபத்தில் இயக்கிய ‘சிநேகாவின் காதலர்கள்’ பலரையும் கவர்ந்தது. க்ரவுட் ஃபண்டிங் குறித்த இவரது கருத்துக்களை தெரிந்துகொள்ள அவருடன் பேசினோம்.

”சிநேகாவின் காதலர்கள் எடுத்து முடித்தபின் அடுத்த படத்துக்கான புள்ளியை எங்கிருந்து தொடங்குவது என்பதில் ஒரு சின்னக் குழப்பம் இருந்தது. க்ரவுட் ஃபண்டிங் மூலம் அடுத்த படத்துக்கான பணத்தைத் திரட்டலாமே என்று ஐடியா தந்தார் ‘கேள்விக்குறி’ பட இயக்குநர் ஜெய்லானி.

‘இப்ப தயாராகிற முக்கால்வாசிப் படங்கள் ஒருவிதமான மறைமுக கிரவுட் ஃபண்டிங்’ படங்கள்தான். நடிக்க விருப்பமுள்ளவங்க, முன்னப்பின்ன தெரியாதவங்க போய் ஏமாந்து நிக்கிறாங்க. அதையே நாம வெளிப்படையா எல்லா நிகழ்வுகளையும் ஒரு வெப்சைட் மூலமா அப்டேட் பண்ணி செஞ்சா கண்டிப்பா சக்சஸ்’ ஆகும்னார். அதைத்தான் நாங்க இப்ப செஞ்சுகிட்டு இருக்கோம்.

‘சவுண்ட், கேமரா, ஆக்‌ஷன்’ என்கிற படத்தை சுமார் 1.10 கோடி ரூபாயில எடுக்கத் திட்டமிட்டிருக்கோம். இதுக்கான பணத்தையும் திரட்டிவிட்டோம். இனி படம் எடுக்க வேண்டியதுதான் பாக்கி. அடுத்து, ‘ரூபசித்திர மாமரக்கிளியே’ என்கிற படத்துக்கான நிதியை கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வரை திரட்டிவிட்டேன். மீதமிருக்கும் பணத்தையும் கூடிய விரைவில் திரட்டிவிடுவேன்.

என்னைப் பொறுத்தவரை, க்ரவுட் ஃபண்டிங் முறைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சினிமா தயாரிப்பில் முதலீடு செய்வதற்கு பல லட்சம் பேர் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் தரும் பணத்தை எந்த வகையிலும் தவறாக செலவு செய்யாமல், சரியாக செலவு செய்ய வேண்டும். அக்கவுண்டபிலிடிட்டி, அதாவது பணத்தை சரியாக செலவழித்து, அதற்கான கணக்கு வழக்குகளை முறைப்படி வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே இந்த தொழில் முறையில் பணத்தைப் போடுகிறவர்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெற முடியும்.

உதாரணமாக, நாங்கள் ஒரு நாள் ஷூட்டிங் நடத்தினால் அதற்கு ஆகும் செலவை, ஒரு ரூபாய் குறையாமல் பணம் தந்த முதலீட்டாளர்களிடம் சொல்லி விடுகிறோம். ஒரு நாள் ஷூட்டிங் என்றால் அன்று எத்தனை பேர் சாப்பிட்டார்கள், போக்குவரத்து செலவு எவ்வளவு என்பது உள்பட எல்லா செலவுகளையும் அன்றைக்கே சம்பந்தப்பட்டவர்களுக்கு இ-மெயிலில் அனுப்பி விடுகிறோம். இப்படி எந்த வகையிலும் ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக நடந்துகொள்வதால், முதலீட்டாளர்களுக்கு எங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது.

எங்களைப் பொறுத்தவரை, இந்த இரண்டு படங்களுடன் நாங்கள் நின்றுவிடப் போவதில்லை. இந்த முதலீட்டு முறையை இன்னும் பெரிதாக கொண்டு சென்று, இன்னும் பல படங்களை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று முடித்தார் முத்துராமலிங்கன்.

தமிழ் சினிமா புதிய திசையில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டது. இந்தத் திசையில் புதிய சினிமாக்கள் பல ஆயிரம் வரட்டும்!

[wysija_form id=”1″]