சர்க்கரை நோய் தொடங்கி புற்றுநோய் வரை…

ருத்துவமனைக்குப் போக வேண்டும்  என்றாலே, சிலருக்கு ஒருவித இறுக்கமும் பயமும் தொற்றிக்கொண்டுவிடும்; அவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும். சிலருக்கு டாக்டரிடம் பேசும்போது வார்த்தைகளுக்குப் பதிலாக வெறும் காற்றுதான் வரும். என்ன பிரச்னை என்பதை சரியாகச் சொல்லாமல் வந்துவிடுவார்கள்; தங்களுக்கு என்ன பிரச்னை எனக் கேட்கவும் தயங்குவார்கள். சிலர், ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார்கள். ‘வரும் முன் காப்போம்’ என்பதை உணராததால்தான் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சர்க்கரை நோய் தொடங்கி புற்றுநோய் வரை எதுவும் ஒரே நாளில் வந்துவிடுவது கிடையாது. ஆண்டுக்கணக்காக உடலில் நோய் வேர்விட்டு, அதை கவனிக்காமல் விடுவதன் காரணமாகவே பூதாகரமாகி, முற்றி மருத்துவமனையில் படுக்கவைக்கிறது. இதைத் தடுக்க முடியுமா? நிச்சயம் முடியும். அதற்கு அடிப்படையான மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்வதும், அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதும், மருத்துவர்களுடன் நல்லுணர்வு பேணுதலும் அவசியம். அதற்கான  எளிய ஐந்து வழிமுறைகள் இங்கே…

மருத்துவமனை விசிட்டுக்குத் தயாராகுங்கள்!

நமக்கு உடலில் தலைவலியா? வயிற்றுவலியா? சரியாகச் சாப்பிட முடியவில்லையா?… என்ன பிரச்னை என்பதை நம்மால் நன்கு உணர முடியும். மருத்துவமனை விசிட்டுக்குச் செல்ல வேண்டிய முதல் அறிகுறி இது.

நம்முடைய பிரச்னைக்குப் பிறரிடம் ஆலோசனை பெறுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இணையம் உள்ளிட்டவற்றைப் பார்த்து, நமக்கு இந்தப் பிரச்னையாக இருக்குமோ என நாமாகவே முடிவு செய்துகொண்டு, டாக்டரிடம் தேவை இல்லாத கேள்வி்களைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

உங்களுக்குத் தோன்றும் சந்தேகங்களை ஒரு பேப்பரில் எழுதுங்கள். டாக்டரைச் சந்திக்கும்போது, அவற்றைக் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.

பரிசோதனைக்கு, சிகிச்சைக்குத் தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். எதையும் அரைகுறையாக கேட்டுக்கொண்டு பயமுறுத்தாத,  எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் உறவினர் அல்லது நண்பரை உடன் அழைத்துச் செல்வது நல்லது.

மருத்துவமனைக்குள் செல்லும்போது, தேவையற்ற பயம், பதற்றத்தைத் தவிர்க்கவும். பயம், பதற்றம் இயல்பாகவே ரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும்.

பிரச்னைகளைப் பகி்ர்ந்துகொள்ளுங்கள்!

சிகிச்சைக்காக வந்தவரிடம் ‘உங்களுக்கு என்ன பிரச்னை?’ என டாக்டர் கேட்க, ‘அதை நீங்கதானே கண்டுபிடிக்கணும்’ என்றாராம் நோயாளி. இப்படி இருந்தால் சரியான சிகிச்சை கிடைக்காது. அதோடு மருத்துவர்களிடம்  எப்போதுமே பொய் சொல்லக் கூடாது. கூச்சப்படாமல் பிரச்னைகளைச்  சொன்னால்தான் மருத்துவரால் நோயை, நோயின் தன்மையைப் புரிந்துகொண்டு, அதற்குப் பொருத்தமான சிகிச்சையளிக்க முடியும்.

எல்லா நோய்களுக்கும் பரிசோதனைகள் தேவைப்படாது. நோயாளிகள் சொல்லும் விஷயம், நோயின் அறிகுறிகள் மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக்கொண்டே நோயாளிக்கு என்ன பிரச்னை என்பதைச் சொல்லிவிட முடியும். எனவே, மருத்துவருக்குத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் தெரிவிக்க வேண்டியது நோயாளியின் கடமை.

ஏற்கனவே மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் அல்லது மாற்று வைத்தியம்  செய்துகொண்டிருந்தால் அவற்றையும் மருத்துவரிடம் பகிர வேண்டும். சிலருக்கு, சில மருந்து ஒவ்வாமை இருக்கும். அதையும் மறக்காமல் டாக்டரிடம் தெரிவித்துவிட வேண்டும்.

சந்தேகம் களையுங்கள்!

அத்தனை சந்தேகங்களையும் பொறுமையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். எந்தக்  கேள்வியையும் கேட்கலாமா, வேண்டாமா எனக் கூச்சப்படத் தேவை இல்லை.

நோய் ஏன் வந்துள்ளது, அதற்கு என்ன காரணம், நோய்க்கு என்ன சிகிச்சை, எவ்வளவு காலம் சிகிச்சை எடுக்க வேண்டும், சிகிச்சை எடுத்துக்கொண்டால் முழுமையாக நோய் குணமாகிவிடுமா அல்லது நோயின் தீவிரத்தைக் குறைக்க மட்டும்தான் முடியுமா,  சிகிச்சைக்குப் பின் எந்த மாதிரியான வாழ்வியல்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் உட்பட அனைத்துச் சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்.

மருந்துகள் கவனம்!

என்ன நோய் எனப்  பரிசோதித்து டாக்டர்கள் தரும் மருந்துகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். காய்ச்சலுக்கு மூன்று நாட்கள் மருந்து சாப்பிடச்  சொன்னால், அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரண்டாவது நாளே  காய்ச்சல் குணமாகிவிட்டாலும், மூன்றாவது நாளும் அந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிரச்னை சரியாகவில்லை எனில், உதாரணமாக காய்ச்சல் என்றால், மூன்று நாட்களுக்கு மேலும் தொடர்ந்தால், டாக்டர் பரிந்துரைத்த மருந்தை அவரின் ஆலோசனை இன்றி மீண்டும் வாங்கிப் பயன்படுத்துவது தவறு.

நீங்கள் ஒரு பிரச்னைக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது, வேறொரு உடல்நலக் கோளாறுக்கு ஏற்கனவே தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தால், அந்த மருந்துச் சீட்டை அவசியம் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.

ஃபேமிலி டாக்டர் அவசியம்!

நீங்கள் எளிதில் அணுகும் வகையில் உள்ள ஒரு  பொது மருத்துவரை, உங்களது குடும்ப மருத்துவராக அமைத்துக்கொள்வது அவசியம். குடும்ப மருத்துவர் என்றால், அவர் உங்கள்  வீட்டுக்கே வந்து பார்க்க வேண்டும் என அர்த்தம் செய்துகொள்ள வேண்டாம். குடும்பத்தில் யாருக்காவது, ஏதாவது பிரச்னை என்றால் அவரை நேரிலோ, கைப்பேசியிலோ அணுகும்போது ஆலோசனை அளிப்பவராக இருப்பது நல்லது.

ஃபேமிலி டாக்டருக்கு நம் உடல் நலம், குடும்பத்தினரின் உடல்நலம் பற்றிய முழுத் தகவலும் தெரிந்து இருக்கும். நமது நிலையைக் கருத்தில்கொண்டு எந்தவொரு பிரச்னைக்கும் ஆலோசனை தருவார்.

டாக்டர்களை கடவுளாக எண்ணுவதைவிட நண்பர்களாக மாற்றிக்கொண்டால், நோய்களை சிரமமின்றி வெல்லலாம்.