சாக்லேட் வீட்டிலேயே சுத்தமாகவும், சுவையாகவும் செய்வது ?

சாக்லேட் டபுள் பாயிலிங் முறையில் உருக்க:

ரெடிமேட் டார்க் சாக்லேட் பார் – அரை கிலோ
ரெடிமேட் மில்க் சாக்லேட் பார் – அரை கிலோ

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பார் சாக்லேட்டுகளை சிறிய துண்டுகளாக உடைத்துப் போடவும். இதைவிட பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பில் அடுப்பில் வைத்து சுட வைக்கவும். தண்ணீர் கொதி வர ஆரம்பிக்கும் போது, இதன் உள்ளே சாக்லேட் பாத்திரத்தை வைத்தால், தண்ணீர் சூட்டில் சாக்லேட் நன்கு உருக ஆரம்பிக்கும். இதை ஒரு மரக்கரண்டியால் நன்கு கிளறிவிட்டால், இதுதான் டபுள் பாயிலிங் முறை.


மைக்ரோவேவ் டபுள் பாயிலிங் முறை

ரெடிமேட் டார்க் சாக்லேட் பார் – அரை கிலோ
ரெடிமேட் மில்க் சாக்லேட் பார் – அரை கிலோ

செய்முறை:
சாக்லேட் பார்களை சிறு சிறு துண்டுகளாக உடைத்து மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு, அவனில் உள்ளே வைத்து ஹையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால், சாக்லேட் உருகிவிடும். சாக்லேட் பாத்திரத்தை மூட வேண்டும் என்பதில்லை.

குறிப்பு:
இவை இரண்டிலும் சாக்லேட் வைக்கும் பாத்திரத்தினுள் எண்ணெய் அல்லது தண்ணீர் ஒரு சொட்டு கூட படக்கூடாது. உருக்கிய சாக்லேட் கலவையிலும் தண்ணீர் படக்கூடாது. டார்க் மற்றும் மில்க் இரண்டையும் சேர்த்தே குலுக்க வேண்டும். டார்க் சாக்லேட் மட்டும் சேர்த்தால் கசப்புச் சுவையாக இருக்கும்.


சாக்லேட் செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:

 சாக்லேட்டை உருக்கியதும் ஒரு சாஸ் பாட்டிலில் ஊற்றிக்கொண்டால், கீழே சிந்தாமல், மோல்டின் துவாரத்தில் மிகச் சரியாக ஊற்ற ஏதுவாக இருக்கும்.

 செய்து முடித்த சாக்லேட்டை, உடனே கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். வெளியில் வைத்தால் சட்டென உருகிவிடும்.

 ஃப்ரிட்ஜில் இருந்து சாக்லேட் மோல்டை எடுத்ததுமே, மோல்டின் பின்புறம் லேசாக தட்டினாலே சாக்லேட் பட்டென வெளியே வந்து விழுந்து விடும், டபுள் பாயிலிங் முறையில் தயாரிக்கும் போது தண்ணீரை அதிகம் வைத்து கொதிக்கவிட வேண்டியதில்லை.

 சாக்லேட்டை ஃப்ரீசரில் வைக்கத் தேவையில்லை.

 விதவிதமான வடிவங்களில் கிடைக்கும் சாக்லேட் மோல்டுகளை வாங்கி வைத்துக்கொண்டால், எளிதில் ‘ஹோம்மேட் சாக்லேட்’ ரெடி செய்யலாம்.

 தயாரித்த  சாக்லேட்டை சின்னச்சின்ன அலங்கரிக்கப்பட்ட சுருக்குப் பைகளில்  போட்டு தெரிந்தவர்களுக்குக் கொடுக்கலாம்.

 சாக்லேட்டுக்கே உரிய டெக்கரேட்டட் பேக்கிங் பைகள் கடைகளில் கிடைக்கின்றன.

 சாக்லேட்டை அலுமினியம் ஃபாயில் பேப்பரிலும் பேக் செய்து கொடுக்கலாம்.


ரவுண்ட் சாக்கோ பிஸ்கட்

தேவையானவை:
சாதாரண மேரி பிஸ்கட் – 10
உருக்கிய சாக்லேட் – தேவையான அளவு
ரவுண்ட் பிஸ்கட் மோல்ட் – 1

செய்முறை:
பிஸ்கட் மோல்டில் உருக்கிய சாக்லேட் சிறிது விட்டு, அதன் மேல் பிஸ்கட்டை வைக்கவும். (Marrie பெயர் இருக்கும் பக்கம் அடிப்பக்கத்தில் வருவது போல்) அதன் மேல் மீண்டும் உருக்கிய சாக்லேட்டால் நிரப்பவும். இதனை அப்படியே ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். மோல்டில் இருந்து வெளியே எடுத்து,  பிளைன் ஃபாயில் கோல்ட் அல்லது சில்வர் ஃபாயில் பேப்பரால் சுற்றி அழுத்தித் தேய்த்தால் பிஸ்கட்டில் உள்ள, டிசைன் பேப்பரில் தெரிந்து குழந்தைகளைச் சாப்பிட தூண்டும்.


லாலிபாப் சாக்லேட்

தேவையானவை:
 உருக்கிய சாக்லேட் – தேவையான அளவு
லாலிபாப் மோல்ட் – 1

செய்முறை:
உருக்கிய சாக்லேட்டை லாலிப்பாப் மோல்டில் ஊற்றவும். இனி, அதற்கான குச்சியை மோல்டில் வைத்து, ஃப்ரிட்ஜில் பத்து நிமிடம் வைத்து எடுக்கவும். இப்போது சாக்லேட்டோடு ஸ்டிக் ஒட்டிக்கொள்ளும். மோல்டின் பின்புறம் லேசாகத் தட்டி எடுத்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் இனி, நீங்கள்தான் சூப்பர் மம்மி.


சாக்லேட் ஹோல் (போலோ சாக்லேட்)

தேவையானவை:
 உருக்கிய சாக்லேட் – தேவையான அளவு
போலோ மிட்டாய் – 10
ஓவல் ஷேப் சாக்லேட் மோல்ட் – 1

செய்முறை:
ஓவல் ஷேப் (முட்டை வடிவ) சாக்லேட் மோல்டில், உருக்கிய சாக்லேட்டை சிறிது விட்டு, அதன் மேல் ஒரு போலோ மிட்டயை வைக்கவும். இதனை உருக்கிய சாக்லேட்டால் மூடவும். இந்த மோல்டை ஃப்ரிட்ஜில் வைத்து, 10 நிமிடம் ஆனதும் எடுத்து மோல்டின் பின்புறம் லேசாக தட்டினால், அழகாக வெளிவரும் சாக்லேட் ஹோல். சுவைப்பதற்கு ஸ்ட்ராங் பெப்பர்மின்ட் சாக்லேட் போல் இருக்கும்.


கோகனட் பால் சாக்லேட்

தேவையானவை:
கொப்பரைத் தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
ஐஸிங் சர்க்கரை – அரை டேபிள்ஸ்பூன்
பால் பவுடர் – முக்கால் டேபிள்ஸ்பூன்
கன்டென்ஸ்டு மில்க் – சிறிதளவு
உருக்கிய சாக்லேட் – தேவையான அளவு
முக்கோண வடிவ சாக்லேட் மோல்ட் – 1

குறிப்பு:
கொப்பரைத் தேங்காய் கிடைக்காவிட்டால், டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் டெஸிக்கேடட் கோகனட்டைப் பயன்படுத்தலாம். அல்லது தேங்காய்த்துருவலை வெறும் வாணலியில் வறுத்துப் பயன்படுத்தலாம்.

செய்முறை:
மேற்கூறியவற்றில் உருக்கிய சாக்லேட், மோல்ட் தவிர, மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கண்டென்ஸ்ட் மில்க் தேவையான அளவு விட்டுப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கவும். முக்கோண வடிவ சாக்லேட் மோல்டில் உருக்கிய சாக்லேட் சிறிது விட்டு, நடுவில் கோகனட் உருண்டை ஒன்றை வைக்கவும். இதன் மீது உருக்கிய சாக்லேட் ஊற்றி நிரப்பவும். இதை 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.


காபி பைட் சாக்லேட்

தேவையானவை:
 கன்டென்ஸ்டு மில்க் – 2 டீஸ்பூன்
இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 2 டீஸ்பூன்
உருக்கிய சாக்லேட் – தேவையான அளவு
விருப்பமான சாக்லேட் மோல்ட் – 1

செய்முறை:
கன்டென்ஸ்ட் மில்க், இ்ன்ஸ்டன்ட் காபி பவுடர் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பைக் குறைத்து தணலில் வைத்துக் கிளறவும். சிறிது கெட்டிப்படும். பிறகு அடுப்பை நிறுத்தி ஆறவிடவும். இதுதான் சாக்லேட் நடுவே ஊற்றப் போகும் இப்பொழுது வழக்கம் போல உங்களுக்கு விருப்பமான சாக்லேட் மோல்டில், உருக்கிய சாக்லேட்டை சிறிது ஊற்றி, நடுவில் இந்த காபி பில்லிங்கை ஊற்றவும். பின்னர் மறுபடியும் உருக்கிய சாக்லேட்டை மேலே ஊற்றி, ஃபிரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். காபி பைட் ரெடி.


நட்ஸ் சாக்லேட்

தேவையானவை:
உருக்கிய சாக்லேட் – தேவையான அளவு
வறுத்து பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி – 50கிராம்
விரல் நீள வடிவ மோல்ட் – 1

செய்முறை:
சாக்லேட் மோல்டில் உருக்கிய சாக்லேட் சிறிது விட்டு, அதில் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் போட்டு மேலே சாக்லேட்டால் நிரப்பி, ஃபிரிட்ஜில் பத்து நிமிடம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.


ஊட்டி நட்ஸ் சாக்லேட்

தேவையானவை:
உருக்கிய சாக்லேட் – தேவையான அளவு
மீந்து போன பாதாம் முந்திரி – சிறிதளவு

செய்முறை:
கடைசியாக மிகுதியாக உள்ள உருக்கிய சாக்லேட்டில் மீதமுள்ள முந்திரி, பாதாம் சேர்த்துக் கிள்ளுவற்றல் வைப்பது போல், பட்டர் பேப்பர் மேல் சாக்லேட்டை கிள்ளி வைத்து ஃப்ரிட்ஜில்
10 நிமிடம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.