‘சிங்கிள் பேரன்ட்’…

[wysija_form id=”1″]

‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல குழந்தை வளர்க்கலையா? இப்ப எல்லாம் அதிசயமாத்தான் இருக்கு!’- நம் அம்மா தலைமுறையின் புலம்பல்கள் இன்று எல்லா வீடுகளிலும் கேட்கின்றன. நாம் வளர்ந்ததையும் நம் குழந்தைகள் வளர்வதையும் ஒப்பிட்டால், ஓர் ஒற்றுமைகூட இல்லை. ‘காலையில் வீட்டுல இருக்கிறதைச் சாப்பிட்டு பள்ளிக்கூடம் போனா, சாயந்திரம் வந்து படிச்சா உண்டு. இல்லைன்னா, விளையாட்டு. வேற என்னத்த இருந்தது?’ என, நம் அம்மாக்கள் நம்மை வளர்த்த கதையை ஒரே வரியில் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், நாம்..?

இன்று காலையிலும், மாலையிலும் அம்மாக்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு டூவீலரிலும், கார்களிலும் வேகமாகக் கடக்கிறார்கள். காலையில் ஸ்கூல், மாலையில் டியூஷன், டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ், செஸ் கிளாஸ், டிராயிங் கிளாஸ் என நிற்க நேரம் இல்லை… பிள்ளைகளுக்கும் அம்மாக்களுக்கும். வேலைக்குப் போகும் அம்மாக்களுக்கு இன்னும் சிரமம். வேலை, வீடு இரண்டோடு சேர்த்துப் பிள்ளைகளின் ஓட்டத்துக்கும் ஈடுகொடுக்க வேண்டும். இல்லையெனில் பிள்ளைகளுக்காக வேலையை விட்டாக வேண்டும். மாலையில் டென்னிஸ் கோர்ட்டில் வாட்டர் பாட்டிலோடு காவல் இருக்கும் அம்மாக்களிடம், ‘என்ன படிச்சிருக்கீங்க?’ எனக் கேட்டால், எம்.பி.ஏ., எம்.டெக் என பதில் வரும். ‘அவ்வளவு படிச்சிட்டு எப்படி வேலைக்குப் போகாம?’ எனக் கேட்டால், குற்றவுணர்ச்சியோடு பிள்ளைகளைக் கை காட்டுவார்கள்.

வேலையை விடும்போது, ‘பிள்ளைங்க வளர்ந்த பிறகு பார்த்துக்கலாம்’ என்ற சமாதானம் எடுபடாது என அவர்களுக்கே தெரியும். 35 வயதுக்கு மேல் வேலையில் ஐந்தாறு வருடங்கள் இடைவெளி விட்டவர்களுக்கு, அவ்வளவு சீக்கிரத்தில் திரும்ப வேலை கிடைக்காது. தன் ஆசை, வேலை, பிடித்த விஷயங்கள் எனப் பலவற்றை பெண்களோ, சில ஆண்களோ தியாகம் செய்தால்தான், இன்றைக்கு ஒரு குழந்தையை வளர்க்க முடிகிறது. வேலைக்குச் செல்லாத, வேலைக்குச் சென்று குழந்தைகள் வளர்ப்பில் கணவர் உதவியைப் பெற்றுக்கொள்ள முடிகிற பெண்களுக்கே இந்த சிரமம் எனில், தனியாகக் குழந்தை வளர்க்கும் பெண்களின் நிலை?

‘சிங்கிள் பேரன்ட்’… ஒற்றைப் பெற்றோராக, அது ஆணோ, பெண்ணோ குழந்தையை வளர்ப்பது நம் சமூகத்தில் அசாத்திய சாதனை. தனியொரு ஆளாகக் குழந்தையின் முழுத் தேவைகளையும் நிறைவேற்றி, அதற்கான பொருளாதாரத் தேவைகளுக்காக வேலையையும் சரியாக பேலன்ஸ் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

பத்திரிகை நிறுவனம் ஒன்றில் என்னோடு வேலை பார்த்த காமாட்சி, பிரின்டிங் ஏரியாவில் இருந்தாள். மிகக் குறைவான சம்பளம். விவாகரத்து ஆனவள். அவளுக்கு ஐந்தாவது படிக்கும் பெண் உண்டு. காலையில் மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு, அரக்கப்பரக்க புறநகரில் இருந்து ட்ரெய்ன் பிடித்து அலுவலகம் வர வேண்டும். ஆனாலும், பாதி நாட்கள் தாமதம்தான். அதற்காக சம்பளம் கட் செய்யப்படுவதைச் சொல்லி வருந்துவாள்.

மாலை 3 மணி ஆனதும், அவளது இதயத் துடிப்பு எகிறுவது எங்களுக்கே கேட்கும். பள்ளிக்கு எதிரே இருக்கும் பரபரப்பான சாலையை மகள் எச்சரிக்கையாக கிராஸ் செய்தாளா, வீடு வந்து சேர்ந்தாளா என நினைத்து நினைத்துப் பதறிக்கொண்டே இருப்பாள். அந்தக் குட்டிப் பெண் வீட்டுக்கு வந்து, வீட்டில் இருக்கும் மொபைல் போனில் இருந்து மிஸ்டு கால் கொடுத்ததும்தான் கொஞ்சம் உயிர் வரும். ‘கதவைச் சரியாப் பூட்டு; அம்மா வந்தாதான் கதவைத் திறக்கணும்; பக்கத்துல விளையாடக் கூப்பிட்டா போகாத; யார் எது தந்தாலும் வாங்கிச் சாப்பிடாத…’ என தினமும் ஆயிரம் அறிவுரைகள். அலுவலகம் முடிந்ததும் ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல், ஷேர் ஆட்டோ பிடித்து, ரயில் பிடிக்க ஓடுவாள். அலுவலகத்துக்கு அருகே வீடு பிடிக்க, குழந்தையைப் பள்ளியில் சேர்க்க அவள் வருமானம் போதாது. குழந்தையைப் பார்த்துக்கொள்ள தனியாக ஆள் போடவும் பணம் இல்லை. தனியாகக் குழந்தை வளர்க்கும் பெரும்பாலான பெண்களின் நிலைமை இதுதான்.

விவாகரத்துகள் அதிகம் ஆகிவிட்ட இந்தக் காலத்தில், பெண்கள் குழந்தைகளோடு தனியாக வாழ்வது அதிகமாகிவிட்டது. விவாகரத்தான பெண்களுக்கு பொதுவாக உறவினர்களிடம் இருந்து பெரிய ஆதரவு இருக்காது. மனைவியைப் பிரிந்து குழந்தையோடு வசிக்கும் ஆண்கள், குழந்தை வளர்ப்பைக் காரணம் காட்டியாவது இன்னொரு திருமணம் செய்துகொண்டுவிடலாம். பெண்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. பெண்களின் மனத்தடை ஒருபுறம் என்றால், அம்மாக்களின் திருமணத்தை குழந்தைகளும் அங்கீகரிப்பது இல்லை. அம்மாவைத் தங்களுக்கான ஒருத்தியாக மட்டுமே பார்த்து, யாருக்கும் விட்டுக்கொடுக்காத பொசசிவ்னெஸ் அவர்களுக்கு அதிகம்.

என் தோழி ஒருத்தியின் கணவர் இறந்துவிட, மகளுக்கு நான்கு வயது ஆகும்போது அவள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாள். அந்தக் குழந்தைக்கு புது அப்பாவைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. அவள் அவரோடு ஒட்டவே மாட்டேன் என அடம்பிடித்து, தாத்தா, பாட்டியோடு சென்றுவிட்டாள். வளரவளர அம்மாவையும் அவளுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. ‘என்னைவிட உனக்கு அவன் முக்கியமா, என்னை யோசிக்காம ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட, நான் சந்தோஷமாவே இல்ல. அதுக்கு நீதான் காரணம். உன் புருஷனை விட்டுட்டு என்கூட வா…’ என்ற ரேஞ்சில், அந்தப் பெண் 13 வயதில் அம்மாவுக்கு எழுதிய மெயிலைப் பார்த்து தோழி அரண்டுபோய்விட்டாள். இத்தனைக்கும் தோழியின் இரண்டாவது கணவர் அந்தக் குழந்தை மீது அக்கறையோடு இருந்தார். மகளின் மனநிலைக்காக தற்காலிகமாகக் கணவரைப் பிரிந்து மகளுடன் வாழத் தொடங்கிவிட்டாள். இப்படியான கேள்விகளை இந்தக் குழந்தைகள் அப்பாவைப் பார்த்து ஒருபோதும் கேட்பது இல்லை.

‘சிங்கிள் விமன்’ பெண்கள் ஓர் உறவில் இருந்து வெளிவந்ததுமே, ஒருவிதப் பதற்றத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள்… செய்யக் கூடாத ஏதோ ஒரு தவறைச் செய்துவிட்டதுபோல. ‘இந்தக் குழந்தையை உனக்கு முன்னாடி சரியா வளர்த்துக்காட்டுறேனா இல்லையானு பாரு’ என மனதில் யார், யாரிடமோ சவால்விட்டு, அதை குழந்தையின் மீது திணிக்கும் பெண்களும் உண்டு. பிரபல டி.வி ஷோக்களில் குழந்தைகளைப் பாட, ஆடவிட்டு, ரசிகர்கள் மத்தியில் உட்கார்ந்து கண்ணீர் வடிக்கும் பெண்களில் பல ‘சிங்கிள் விமன்’ அம்மாக்களைக் கவனித்திருப்போம். நான் தனியாக என் குழந்தையைச் சரியாக வளர்த்திருக்கிறேன் என யாரிடமாவது நிரூபித்தாக வேண்டிய அழுத்தம் அந்தப் பெண்களுக்கு இருக்கிறது.

சிங்கிள் விமன் அல்லது சிங்கிள் மதர் பெண்கள் குடும்பத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக்கூட, ‘சரி பார்த்துக்கலாம், இவங்க இப்படித்தான்’ எனக் கடந்துவிடலாம். ஆனால், சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கடந்துவிடவே முடியாது. திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் தனியாக வாழ்ந்தால், அவளுக்கு எத்தனை பெரிய பிள்ளைகள் இருக்கிறார்கள், அவளுக்கு என்ன வயது என்பது எல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்வது இல்லை. ‘அப்புறம் ஆபீஸ் முடிஞ்சு நேரா வீட்டுக்கா? ஒரு காபி சாப்பிட்டுப் போலாமே… எப்படி இந்த வயசுலயும் சிக்குனு அழகா இருக்கீங்க?’ என்பது போன்ற வசனங்களை அடிக்கடி கேட்க வேண்டிவரும். மகனை கல்லூரிக்கு  அனுப்பிவிட்டு, 40 வயதில் 80 கிலோ எடையோடு அலுவலகம் வரும் பெண்ணும் இதில் இருந்து தப்பிக்க முடியாது.

இதுபோன்ற சமூகப் பிரச்னைகளைக்கூட தன் குழந்தையை முன்னிறுத்தி  அவள் கடந்துபோய்விடக் கூடும்.  ஆனால், ‘நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும். பிள்ளைங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாது’ எனப் பிள்ளைகளுக்கு அம்மாக்கள் கொடுக்கும் செல்லம்தான், தனியாக வாழும் பெண்கள், தங்களுக்குத் தாங்களே வைத்துக்கொள்ளும் சூன்யம். ‘உனக்காக அம்மா என்ன வேணா செய்வேன்’ என்கிற அம்மாவின் எமோஷனை பிள்ளைகள் சரியாகப் ‘பயன்படுத்தி’க்கொள்கிறார்கள். அம்மாக்களின் பலவீனத்தில் மிகச் சரியாக ஆணி அடிக்கிறார்கள்.

அம்மாக்கள் யாரோடும் பேசக் கூடாது, எங்கேயும் செல்லக் கூடாது, விரும்பிய எதையும் செய்யக் கூடாது… என தன்னைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ‘பாவம் நம்மளை விட்டா யார் இருக்காங்க?’ என்ற பயத்தில் அம்மாக்களும் கேட்பதை எல்லாம் செய்துவிடுகிறார்கள். உண்மையில், ‘சிங்கிள் பேரன்ட்’ பெண்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சிக்கல் இதுதான். குழந்தைக்காக, குழந்தைக்காக என, தனக்கான எல்லாவற்றையும் விட்டுவிட்டு பிள்ளைகள் மீது மட்டுமே முழுக் கவனம் செலுத்துகிறார்கள். ‘நீ இல்லைன்னா, நான் எங்க போவேன்மா?’ என அந்தக் குழந்தை கேட்கும் ஒரு கேள்வி போதும், ‘அய்யோ நான் இருக்கேன்’ என எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவன்/அவள் பின்னால் ஓடுவதற்கும், கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதற்கும்!

‘நீ சாயங்காலம் 5 மணிக்கு வீட்ல இருக்கணும்’ என்பதில் ஆரம்பித்து, ‘எனக்கு பைக் வாங்கிக் கொடு’ என்பது வரை இந்த எமோஷனல் மிரட்டலை பிள்ளைகள் செய்துகொண்டே இருக்கிறார்கள். இவற்றில் எதையேனும் மறுத்தால், ‘மத்த பசங்களுக்கு அப்பா இருக்காங்க. எனக்கு அப்படியா?’ என்கிற அஸ்திரத்தைக் குறிபார்த்து அடிப்பார்கள். இல்லையெனில், ‘பரவாயில்ல… எனக்கு லைஃப்ல எதுவும் கிடைக்கக் கூடாதுனு இருக்குபோல’ என பலவீனத்தில் அம்பு சொருகுவார்கள். ஏற்கெனவே, குற்றவுணர்வில் இருக்கும் அம்மாக்கள் உடனே தலையாட்டிவிட்டு எப்பாடுபட்டாவது குழந்தையின் ஆசையை நிறைவேற்றிவிடுவார்கள். உண்மையில் இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது அல்ல என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தும், எதுவும் செய்ய முடியவில்லை. தன்னைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர்கள் அஞ்சுகிறார்கள்.

தோழிகள் நாங்கள் இதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம்… எல்லா நாடுகளிலும் தனியாக பெண்கள் குழந்தை வளர்ப்பதும், தனியாக வாழ்வதும் இயல்பாக இருக்கும்போது, நம் நாட்டில் மட்டும் ஏன் வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்வோடு பெண்கள் வாழ வேண்டியிருக்கிறது? குழந்தை வளர்ப்புக்கு என இருக்கும் ஏற்பாடுகள் அங்கு பாதுகாப்பானதாகவும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், தனியாக குழந்தை வளர்க்கும் பெண்களுக்கும் ஆதரவாகவும் இருக்கின்றன. நம் ஊர் போக்குவரத்து வாகனங்களில் பெண்களுக்கு சௌகரியமான வசதிகள் ஏதேனும் செயல்படுத்தப்படுகிறதா என்ன? ரயிலிலோ, பேருந்திலோ குழந்தைகளோடு செல்லும் பெண்களுக்கு, தனியாக இருக்கை தர வேண்டும் என இன்னும் ஏன்  யாருக்கும் தோன்றவே இல்லை? குழந்தையோடு பயணிக்கும் எல்லா அம்மாக்களும், குழந்தையை மடியில் போட்டுத் தூங்கவைத்துவிட்டு இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியதுதான். குழந்தைக்கு அருகில் ஒருக்களித்து ஓரமாகப் படுத்துக்கொண்டால், மறுநாள் முழுக்க ஒரு பக்கம் உடல் வலித்துக்கொண்டே இருக்கும்.

இங்கே தனியாக இருக்கும் பெண்ணோ, விவாகரத்து ஆகி அல்லது கணவனை இழந்து குழந்தையோடு வசிக்கும் பெண்ணோ எளிதாக வீடு பார்த்துவிட முடியாது. ‘கணவன் எங்கே?’ என்ற கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்படும். தப்பித்தவறி வீடு கொடுத்துவிட்டாலும், அந்தப் பெண்ணைப் பார்க்க யார் யார் வருகிறார்கள் என்று கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். ஆண் பேச்சுலர்களுக்கு மட்டும் அல்ல, தனியாக இருக்கும் பெண்களுக்கும் இங்கே வீடு கிடைப்பது சிரமம்தான்.

ஓர் எழுத்தாளத் தோழி மகன்களோடு சென்னையில் வாழ்கிறார். அவர் கணவரைப் பிரிந்து வாழ்பவர். அதைச் சொன்னால் வீடு கிடைக்காது என்பதால், கணவர் இறந்துவிட்டார் என்று சொல்லி, வீடு வாடகைக்கு எடுத்துவிட்டார். வீட்டின் ஹாலில் சே குவேரா போட்டோ மாட்டி வைத்திருக்க, அவர்தான் தோழியின் கணவர் என வீட்டின் உரிமையாளர் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார். ‘எனக்கென்ன போச்சு’ என்று தோழியும் அந்த வீட்டைக் காலி செய்யும் வரை சே குவேராவின் மனைவியாக நடித்துக்கொண்டிருந்தார். இப்படி தனியாக வாழும் பெண்கள் வீடு பார்க்கும் செயல்களைத் தனியாக நாவலே எழுதலாம். ‘நான் எம்.என்.சி-ல மேனேஜர். ரெண்டு லட்சம் ரூபா சம்பளம்… வீடு வேணும்’  என்று சொன்னால்கூட, ‘சரி உங்க புருஷன் என்ன பண்றார்?’ என்றுதான் கேள்வி கேட்பார்கள்.

‘Buddy’ என்ற மலையாளப் படத்தில் இரண்டு பெண்கள் சேர்ந்து வாழத் தீர்மானிப்பார்கள். அதில் ஒரு பெண் செயற்கை முறையில் கருத்தரித்து மகனைப் பெற்றுக்கொள்வாள். ‘இருவருமே அம்மாதான்’ எனச் சொல்லி, அந்தக் குழந்தையை இரு பெண்களும் அன்பாகவே வளர்ப்பார்கள். இரண்டு அம்மாக்கள் இருந்தபோதும் நிறைவில்லாமல், அவன், ‘அப்பா எங்கே?’ என்ற கேள்வியைத் தொடர்ந்து கேட்பான். அம்மாக்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குவான்.

இதே கேள்வியை ‘சிங்கிள் பேரன்ட்’ அப்பாவிடம் பிள்ளைகள் கேட்பதே இல்லை. அவர் கஷ்டப்பட்டு வளர்த்தார் என்பது  மட்டுமே, அவர்களுக்குப் போதுமானது. அதற்கு மேல் அவரைத் தொந்தரவு செய்ய அவர்கள் விரும்புவதே இல்லை. ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் வரும் ஜெயம் ரவிபோல பிள்ளைகளே இல்லையா எனக் கேட்டால்… இருக்கிறார்கள். ஆனால், அங்கேயும் அம்மாக்கள் கடைசி வரை தியாகியாக இருந்து முதலில் சொன்னதுபோல், ‘எம் புள்ளையை உன்னைவிட டாப்பா கொண்டுவந்துட்டேனா இல்லையா’ என சவாலை நிறைவேற்றத் துடிக்கிறார்கள்.

‘உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தது எல்லாம் சும்மாவா?’ என்ற கேள்வியைப் போலவே, ‘எனக்காக நீ இதைக்கூடச் செய்யலைன்னா, என்ன அம்மா நீ?’ என்கிற கேள்வியும் தேவை இல்லாததே. ஆனால், இங்கே இந்தக் கேள்விகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கும் என்பதுதான் கேள்வியே!

COURTSEY : VIKATAN MAGAZINE
DOWNLOAD BOOKS http://tamilagamtimes.com/?post_type=product
WE ARE TAMILAGAMTIMES PUBLISHERS
YOU CAN DOWNLOAD BOOKS FROM FOLLOWING CATEGORIES

accounting-finance
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=accounting-finance

career-study-advice
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-study-advice

career-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=career-management-books

communication-presentation-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=communication-presentation-books

engineering-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-books

engineering-for-professionals
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=engineering-for-professionals

entrepreneurship-small-business
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=entrepreneurship-small-business

it-management-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-management-books

it-programming-computer-science-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=it-programming-computer-science-books

language-learning-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=language-learning-books

management-strategy-development
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=management-strategy-development

marketing-sales
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=marketing-sales

natural-sciences-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=natural-sciences-books

office-programs-software
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=office-programs-software

personal-development-books
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=personal-development-books

statistics-mathematics
http://tamilagamtimes.com/?post_type=product&product_cat=statistics-mathematics