சித்தாந்தமும் – சிதிலமடைந்த மடங்களும்

ஒரு நூலகத்திற்குள் ஒரு திருடன் நுழைந்துவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள். அவன் அந்த நூலகத்திலுள்ள நூல்களை ஒரு அறிவாளியிடம் கொண்டு சேர்ப்பானா அல்லது அந்த நூல்களின் எடைக்கு நிகராக உடனடியாக பணம் தருபவனிடம் சேர்ப்பானா ? திருடனுக்கு உடனடி தேவை பணம்.

முதலில் இந்த அருணகிரி என்பவரை மதுரை ஆதீனமாக எந்த அடிப்படையில் நியமித்தார்கள் ? சைவநெறி பிறழாமல் வாழ்வார் என எங்ஙனம் கணித்தார்கள் ?

மனித உடல் படைக்கபட்டதன் படைப்பு நோக்கம் – உடல் சார்ந்து இயங்கும் மூளையின் பரிணாம நுட்ப வளர்ச்சி – இயற்கையின் நுட்பமான – சூட்சும புலங்கள் – சக உயிரினங்களின் உயிர் மதிப்பு – போன்றவைகளை உள்ளுணர்வு அக சக்திகளால் அறிய முயலும் வழிமுறைகளில் ஒன்றுதான் சைவ நெறி சித்தாந்தம். இந்த சித்தாந்தங்களை பரப்ப ஏற்படுத்தப்பட்ட மடங்கள் இன்று வணிக வளாகங்களாக மாறிய பின் , அவற்றில் முறையான மடாதிபதிகளை எதிர்பார்ப்பது , இலங்கையில் பௌத்த மத கொள்கைகளை பின்பற்ற கூடியவர் ஏன் அதிபராக நியமிக்கவில்லை என கூறியது போலாகும். 

 சைவ சித்தாந்த நெறிகளின் பன்முக குணாதிசய சிறப்புகளையும் – அவற்றை பின்பற்றுவதால் ஏற்படக்கூடிய உடல் – சிந்தனை சார்ந்த வாழ்க்கை முறையையும் இதுவரை எந்த சித்தாந்த மடங்களும் வெகு ஜனங்களிடையே பரிச்சயமான பரப்புரை மூலம் சித்தாந்த தாக்கம் செய்ததாக தெரியவில்லை.

அன்றாட வாழ்க்கை பண்பாட்டு முறைகளிலும் – சக மனித தொடர்புகளிலும், சைவ சித்தாந்த நெறிகளின் பயன்பாட்டு வழிகளை தொடர்பு தளமாக அமைக்க எந்த சைவ சித்தாந்த மடங்களும் முயன்றதில்லை.

 அருணகிரிநாதர் என்ற முன்னாள் மதுரை ஆதீனம் இதுவரையில் சைவ ஆசிரமங்களின் நெறிகளையோ / சைவ சித்தாந்த நெறி சார்ந்த  வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என யாராவது உறுதியாக கூற இயலுமா ? . நுகர்வு அதிகார ஆசை கொண்ட அரசியல் மேடைகளில் – அன்றாட உணர்வுப்பூர்வமான சமூக நிகழ்வுகளில் உடனடி கவனம் ஈர்க்கும் பேச்சுகளை பேசியே பழக்கமானவர். முதிர்ச்சியற்ற அணுகுமுறை – தொலைநோக்கில்லாத – சிந்தனை அடிப்படையற்ற பேச்சுகள் என, அவர் முதிர்வில்லாத ஆரம்ப நிலை ஆன்மீக வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில், குற்ற பிண்ணனியுள்ள – நெறியற்ற பாலியல் புணர்ச்சி கொள்பவர் – கட்டுபாடில்லாத சமான்ய பலவீன உணர்வுகள் கொண்ட உடல் இயல்பும் – சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை முறை இல்லாதவருமான ஒருவரை அருணகிரி தன் மடத்தின் அடுத்த ஆதீனமாக தேர்தெடுத்ததை ஆச்சர்யமாக பார்க்க தோன்றவில்லை.

நித்யானந்தாவின் பேச்சுக்களை கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். அதாவது, இதற்கு முன் அவர் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி கைது செய்யப்பட்டு – விடுதலையான பின், சென்னை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியபொழுது, அவரது படங்களை வெளியிட்ட ஒரு பத்திரிகையை குறிப்பிட்டு அவர் உபயோகப்படுத்திய வார்த்தை, “…இப்படி பொழைக்கறதுக்கு , வேற பொழைப்பு பொழைக்கலாம்ல…”

 இது ஒரு முதிர்ச்சியான – சமூக நாகரீக மனநிலை உடையவரின் பேச்சு அல்ல. மேலும், அவர் கூறியது, தொலைகாட்சிகளில் வெளியான வீடியோவை – அது வெளியாவதற்கு முன்பே அதை வைத்து, அவரை அவரது உதவியாளர் மிரட்டி பணம் கேட்டாராம். ஏன் உதவியாளர் உங்களை மிரட்ட வேண்டும்..நீங்கள் ஏன் மிரண்டு வெளிமாநிலங்களுக்கு ஓட வேண்டும்.

தன் மீது சுமற்றப்பட்ட குற்றங்களுக்கு அவர், ஆழ்ந்த பொருள் இல்லாத – சாதாரண மறுப்பு மொழி பதிலையே தந்தார்.

மதுரை ஆதீனம் நியமனம் பற்றிய வழக்கு இந்திய அரசியல் சாசன சார்புடைய நீதிமன்றங்களில் தீர்வை எட்டுமா ? என்பது சந்தேகமே. ஏனென்றால் சைவ சித்தாந்தம் இந்திய அரசியல் சட்டங்களால் வரையறுக்கபட்டதல்ல.

மிகுந்த பொருளியல் உருவாக்க சிந்தனையும் – கேளிக்கை பிரியம் கொண்ட சமூக தளங்களில் சித்தாந்த நெறிகள் அடையாளம் காணப்படுவது கடினம்.  

EDITOR 

editor@tamilagamtimes.com / tamilagamtimes@post.com